Community

வெந்து தணிந்த கடல்

லூர்தம்மாள்புரம் கடற்கரை ஒட்டிய நகரம். கடல் அழகாக தெரியும் அத்தனை வேளையிலும் கடலுடன் அழகி போட்டி போடும் நகரம். பெரிய கப்பல்கள் வைத்திருக்கும் பெருமுதாலாளிகளின் மாளிகைகளும் சிறிய கப்பல்கள், படகுகள், தோணிகள் வைத்திருப்பவர்களின் வீடுகளும் மீன்பிடி கூலி தொழிலாளர்கள், மீன் ஏலம் விடுபவர்கள், விற்பனையாளர்கள் வீடுகளும் கலந்து பெரிதும் சிறிதுமாய் அழகும் அழுக்குமாய் பலிங்கும் பாசியுமாய் நேர்த்தியான முனைகளுடன் போடப்பட்ட சமோசாவின் உள் இருக்கும் கலவை போல வீடுகள் ஒழுங்கற்று இருக்கும். ஊர் தெற்கு எல்லையில் ஒரு உலக பிரசித்திப்… இல்லை தென் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற லூர்துமதா கோவில். மரங்களின் வழியே வெயில் எட்டிப்பார்க்க இயலாத கோவில் வளாகத்திலேயே லூர்து அன்னை உயர்நிலைப்பள்ளி. பள்ளியின் பெரிய வேப்பமரம் அருகில் ஒன்பதாம் வகுப்பு ஏ பிரிவு வகுப்பறை. பள்ளி, ஆலயம், ஞாயிறு திருப்பலிக்கு பின் நடக்கும் கத்தோலிக்க வகுப்பு மூன்றும் அதே வளாகத்தில் தான் ஆனாலும் இவைதான் எல்லா இடத்திலும் இடதுபக்கம் இரண்டாம் வரிசையில் இடம் பிடித்து அமரும் ஜே.ஜெஸ்ஸிக்கு ஊரோடு தான் கூடும் இடங்கள் இவற்றை தாண்டி சென்றால் மனமும் மணலும் குளிரும் ஊர் குருசடி. வலது புறம் அதே இரண்டாம் வரிசையில் அந்தோணி செல்வம்.க செல்வத்தை பொறுத்த ஊர் பெரிது மீன் ஏலக்கூடம் படகு சரிசெய்ய வலைப்பின்ன செல்லும் இடங்கள் என பல இடங்களில் ஊரின் பல முகங்களை கண்டு ஊர் கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளான், அவன் அம்மா மேரியை பொறுத்த வரை ஊர் சுற்றதொடங்கியுள்ளான். ஊர் சுற்றும் மகனை கண்டிக்க முடியாத காரணமாய் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வத்தை கூடவே கூட்டிச்செல்லும் மேரியின் அண்ணன் ஜான், ஜே.ஜெசியின் அப்பா. ஆம், அவ்வளவு சிறிய ஊர் இது.

சொந்த மாமன்/அத்தை மக்கள், ஒரே பள்ளி ஒரே வகுப்பு, ஞாயிறு கத்தோலிக்க வகுப்பு என எல்லா இடத்திலும் ஒன்றாகவே இருக்க வேண்டும் அவள் முகத்தையே பார்க்க வேண்டும். அவ்வப்போது வீட்டிற்கும் வந்துவிடுவாள் இரண்டு தெரு தள்ளி இருக்கும் மாடி வீடு தான் அவள் வீடு. இப்படி நெருக்கமாகவே இருக்கும் இருவரும் கண்டிப்பாக எலியும் பூனையுமாய் சண்டையிட்டு சுகம் காண வேண்டும். ஆனால் எல்லா நாணயதிற்கு குறைந்தது இரண்டு பக்கங்கள் இருக்கிறது. சிறு வயத்திலிருந்தே இருவரும் பாசம் பொழிய தொடங்கிவிட்டனர். “செல்வம் குரல் தழும்பினால் ஜெஸ்ஸி கண்கள் கலங்கிவிடும்” சிறு வயதில் இவர்களை இப்படித்தான் பள்ளி ஆசிரியர்கள் முதற்கொண்டு வசை பாடுவர். வகுப்பு தோழன் ஜோசப் மற்றும் ஜோசப்பின் உடன் பிறவா தங்கையான மதி இருவரும் இவர்களின் நெருங்கிய நட்புகள். ஜெஸ்ஸியின் உலகம் சற்று விரிவடைவது இந்த மூன்று பேரால் தான்.

ஒரு ஞாயிற்று கிழமை செல்வமும் அவன் மாமா ஜாணும் ஊருக்கு வெளியே தெற்குபக்கம் சில கிலோமீட்டர்கள் தள்ளி வனபாதுகாப்பு துறையின் கீழ் இருக்கும் காட்டுப்பகுதிக்குள் வந்தனர். சிறிய ஆறு ஒன்றும் கடலும் சேரும் பகுதி. வெள்ளை வெளீரென பட்டு பட்டாய் கடல் மண், கிளிபச்சை நிறத்தில் இலைகளை கொண்ட மரங்கள், முள் மரங்களே அதிகம் கொண்ட காடு. தூய நீல நிறத்தில் பெருங்கடல்… ஆம் இந்த கடலை பார்த்ததும் பெருங்கடல் என்றுதான் கூற தோன்றும் அப்படித்தான் தோன்றியது செல்வத்துக்கு. இதுவரை தினமும் காலை முதல் இரவு வரை ஓயாமல் ஏதோஒன்று உலகிற்க்கு உரைத்துக் கொண்டே இருக்கும் கடலின் ஆழமும் அளவும் கண்டு வியக்காத நாட்கள் இல்லை ஆனால் இக்கடலின் அமைதியும் அழகும் வியக்க வைக்கிறது. பார்த்ததும் 20வினாடி உறைந்திருந்த மனதிற்குள் ஒருத்தி வந்தாள். அவளை எப்பாடு பட்டேனும் இங்கு அழைத்து வர வேண்டும். தேவதை போல வெள்ளை உடையணிந்து அவள் இந்த நீல கரையோரம் ஓடி வர வேண்டும், இந்த கற்பனையே அன்று முழுவதும் எண்ணத்திற்குள் போட்ட நங்கூரம் ஆயிற்று. அந்த இடத்தின் அழகை செல்வம் உருக உருக ரசித்தான் என்று சொல்லிவிட முடியாது… அதன் அழகில் ஏதோ குறைகண்டு அதை நிரப்ப ஜெஸ்ஸி அங்கே வந்துவிட வேண்டும் என்றே எண்ணினான். உள்ளத்தில் அவள் அங்கும் இங்கும் ஓட கண்கள் அசையாது கடலையும் காட்டையும் அவை கண்ணுக்குள் காட்டும் வித்தையையும் பார்க்க, அவள் அப்பா “செல்வா” என்று அழைக்க விழித்திருந்த கண்கள் மீண்டும் விழித்தன ‘சொல்லுங்க மாமா’ என அவர் அருகில் சென்றான். மாமா ஒரு ஆமையை காட்டினார். மீன் பிடிக்கும்போது வலைகளில் அவ்வப்போது ஆமைகள் சிக்குவதுண்டு அவை இங்கிருந்துதான் வந்திருக்குமோ என எண்ணினான்.
மாமா விடம்,

“இங்க உள்ள ஆமைதான் நம்ம வலைலலாம் மாட்டுமா?”

“இல்ல லே… இந்த ஆமைங்க இங்க வர்றதும் கஷ்டம் தான், அதுவும் இந்த மாதிரி ஆமைங்கல பாக்குறதே ரொம்ப கஷ்டம், இது நம்ம வலைல மாட்டுற ஆமை மாதிரி இல்ல, இதோட கூடு மத்த ஆமை மாதிரி இல்லாம சுருள் சுருள் ஆ அங்க அங்க சிவப்பு கலர் கோடு போட்டு இருக்குது பாரு, இத யாரும் பிடிக்க கூடாதுன்னுதான் இந்த இடம் முழுவதும் forestarea-வா அறிவிச்சுட்டாங்க”.

“அப்டி என்ன இருக்கு இந்த ஆமைல”

“இதுக்கு நம்ம ஊர்ல கயித்தாம ன்னு பேரு எங்க அப்பா ஒரு நேரம் இந்த ஆமை முட்டை பொரிச்சு குஞ்சுளாம் கடலுக்கு போறத பாத்தாராம். நான் zooல இந்த ஆமையை பாத்துருக்கேன். இங்கிலீஷ்காரங்க கிட்ட இந்த ஆமைக்கு லட்ச கணக்குல டிமாண்ட் இருக்குது, ஆன அரசாங்கம் இந்த ஆமை பிடிக்குறத தடை செஞ்சிருக்கங்க” சொல்லியபடி மாமா முன்னோக்கி நடந்தார் செல்வம் பின்னால் சென்றான்.

“எப்படில இத்தன நாளு நம்ம ஊர் பக்கத்துலயே இப்படி ஒரு இடம் இருக்குறது தெரியாம போச்சு?” ஜோசப் செல்வத்திடம் கேட்டான்

பெரும்பாலான மாலை வேளைகள் இப்படி கடலை பார்க்க அமர்ந்து ஒரு கேள்வி கேட்பத்துடன் தான் தொடங்குகின்றன.

“அதை விடுல, நாளைக்கு எப்படி யாருக்கும் தெரியாம அங்க போறது?” கேள்விக்கு மறு கேள்வி கேட்டான் செல்வம்,

அவனை திரும்பி பார்த்தபடி,

“உனக்கு கண்டிப்பா வழி தெரியுமால?”

“தெரியும் ல தெரியாமலா வந்து சொல்லுதோம்”

“அப்போ போறத நான் பாதுக்குறே
நீ ஜெஸ்ஸி கிட்ட சொல்லி நாளைக்கு ஸ்கூலுக்கு கெளம்புற மாதிரி கெளம்பி மதிக்கூட வரசொல்லு”

“ஜெஸ்ஸிகிட்ட பள்ளிக்கூடத்த கட் அடிக்கணும்னு சொல்லிட்டா அவா வரமாட்டாலே மக்கா… நான் அவள மதி கூட மட்டும் வர சொல்லுற நீ மதிக்கிட்ட சொல்லி அவள கூட்டிட்டு வர சொல்லு”

சொல்லிவிட்டு நேராக மாமா வீட்டுக்கு சென்றான், ஜெஸ்ஸிக்கும் அவள் அண்ணனுக்கும் மாடியில் தனித்தனி அரை இருக்கும் உள்ளே வந்ததும் அத்தை,

“என்ன செல்வோ அம்மா ஏதும் கேட்டு விட்டாங்களா”

செல்வதை செல்வா இல்லை செல்வோ என்றும் அழைக்கலாம். மாமா , ஜெஸ்ஸி , மதிக்குலாம் செல்வா. அத்தை, ஜோசப் போன்ற ஊர்நாட்டங்களுக்குலாம் செல்வோ,

“இல்லை அத்தை, ஜெஸ்ஸிய பாக்க வந்தேன்”

“ஏதும் புக்கு வாங்க வந்தியா”

“இல்லை அத்தை, அவல பாக்கலாம் ன்னு தான் வந்தேன்”

என பதில் கூறியபடியே ஜெசியின் அறைக்கு சென்றான்.

“ஜெஸ்ஸி”

“செல்வா…” ஒரு மெல்லிய ஆனால் செல்வத்திற்கு மட்டும் காந்தக்குறல்… உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கோடையில் விழுந்த சருகுகள் காற்றிற்கு உருண்டு போவது போன்ற குரல்.

“ஜெஸ்ஸி நாளைக்கு ஸ்கூலுக்கு வருவல்ல”

“டெய்லியும் தான வர்றேன்”

“நாளைக்கு வரும்போது மதி கூட சேந்து வந்துடு”

எதுக்கு?

“அவ கூட சேந்து வா…” சொல்லிவிட்டு எழுந்தான் கீழே செல்லும் போது அத்தை காப்பியுடன் மேலே வந்துகொண்டிருந்தார்.

“காப்பி குடிச்சிட்டு போடா செல்வோ”

“வேணாம் அத்த” சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

மறுநாள் காலையில்…

பள்ளியை தாண்டி தெற்கு நோக்கி தொடர்ந்து நடந்து கொண்டிருந்த ஜெஸ்ஸி மதியிடம்,

“நாவ பழம் பரிச்சுதிங்க போறோமாடி”

மதி, “ஸ்கூல் அ கட் அடிச்சிட்டு யாராவது நாவால் பழந்திங்க போவங்களா”

“ஆமா, நாம ஏழாவது படிக்கும் போது பன்னெண்டாவது படிச்சங்களே பிலோமினால் அக்கா, அவங்க ஒருநாள் இதேமாதிரி என்னைய கூட்டிட்டு ஸ்கூலுக்கு போகாம நாவல் பழந்திங்க கூட்டிட்டு போனாங்க”

“அடிபாவி, நீ ஸ்கூல் கட்டடிக்க மாட்டேன்னு தான் என்னய கூட்டிட்டு வர சொன்னனுங்க”

யாரு?

“செல்வாவும் ஜோசப்பும்”

அவனுங்களும் வாரங்களா…

“ஆமா, அவனுங்க தான் கூடியாரா சொன்னதே”

“எங்க போறோம்?”

“தெரியல, செல்வா எங்கயோ கூட்டிட்டு போரானாம்…
நீ பிலோமினால் அக்கா கூட எங்க போன”

“ராசப்பா தோட்டம் பக்கத்துல ஒரு இடம், பக்கத்து ஊருல இருந்து ஒரு அண்ணே வந்தாரு பிலோமினா அக்கா கட்டிக்க போற பையன்னு சொன்னாங்க”

10 அடி முன்னாள் சென்று கொண்டிருந்த மதி திரும்பி,

அபோரோ?

“கொஞ்ச தூரம் போய் மரத்துக்கு நடுவுல உட்காந்து கிட்டாங்க அப்ரோ… அவங்க மாத்தி மாத்தி முத்தம் கொடுத்துட்டு இருந்தாங்க”

“முத்தமா…அடிப்பாவி இந்தவருசம் சண்டே கிளாஸ் டீச்சரா வேற ஆயிருக்குதே பிலோமினா அக்கா… அப்ரோ என்னாச்சு”

“அந்த அண்ணா சட்டையை கழட்டிட்டாங்க, அக்கா கோட்ட கழட்டிட்டு, மெல்லமா என்னய திரும்பி பாத்தாங்க என்னய திரும்பி பாத்தங்க”

“நீ என்ன பண்ணின?” ஜெஸ்ஸி கண்முன் இப்படி ஒரு நிகழ்வா? பெரும் அதிர்ச்சியானவளாய் கேட்டாள் மதி

“நா அவங்க பாக்குறதுக்குள்ள ஓடி வந்துட்டேன்”

ஊருல யார்கிட்டயு சொல்லலையா?

"இந்த கருமத்தை எங்க போய் சொல்ல சொல்லுற…

அதுஞ்சரித்தான்…

“மதி” சத்தம் குறைவாக கூப்பிட்டால் ஜெஸ்ஸி,

“என்னடி”

“வயிறு வலிக்கிற மாதிரி இருக்குதுடி” லேசாக சுளித்த முகத்தோடு இடது கையை வயிற்றில் வைத்தவாறு சொன்னாள் ஜெஸ்ஸி

காலைல என்னத்த தின்னு தொலைச்ச?

“தின்னு தொலைச்ச” கொஞ்சம் மரியாதை குறைவாக தெரியும் வார்த்தை பின்ன, குருசு மாதிரி புனிதமா நெனச்ச ஜெஸ்ஸி ஸ்கூல கட்டடிச்சுட்டு கண்டதையும் பாத்துருக்கான்னு தெரிஞ்சா மரியாதை குறைய தானே செய்யும்.

“மேஹியும் ஒரு டம்பளர் பாலும்” பதிலளித்தால் ஜெஸ்ஸி

“மேகியெல்லாம் தின்னா இப்பிடித்தான் ஆகும்”

“மேகி தின்னா வயிறுவலிக்குமா?”

“ஆமா டி.வி ல காட்டுறான்னு கண்டதையும் வாங்கி தின்னா இப்பிடித்தான் வலிக்கும்.”

“அப்டின்னு யாரு சொன்னா?”

“நான் மேகி செஞ்சிதர கேட்டப்போ எங்க ஐனஸ் கிழவி சொல்லிச்சு”

ஊர் எல்லை வந்தாயிற்று, எல்லை சாமிகள் போல செல்வமும் ஜோசப்பும் அமர்ந்திருந்தனர். ஜெஸ்ஸியை பார்த்ததும் அடிநெஞ்சில் ஏதோ ஒரு ஆனந்தம். பட்டம் பூச்சி பறப்பது போல இருந்தது அவனுக்கு. பட்டாம்பூச்சி பழைய எடுத்துகாட்டுத்தான் ஆனாலும் மனதுக்கும் பட்டாம்பூச்சிக்கும் இருக்கிற நெருங்கிய தொடர்பு இன்றுவரை இந்த உவமையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அது என்னவென்று பின்னர் சொல்கிறேன்.

நால்வரும் சேர்ந்து நடக்க தொடங்கினர். வெள்ளை சட்டையும் நீல கால்சட்டை / பாவாடையுடன் எங்கிருந்து பார்த்தாலும் பள்ளிக்கூடம் எமாற்றப்பட்டிருப்பது தெரிவதற்கு எதுவாக அணிவகுத்தனர். முன்னாள் செல்ல வேண்டிய வழிகாட்டி செல்வம் மூன்றாவதாக வந்துகொண்டிருந்தான். நீலகடலின் அருகில் அதன் அழகுடன் போட்டிபோட்டு அவள் ஓடுவதுதான் நோக்கம். எனினும் லைப் இஸ் த ஜர்னி நாட் த டெஸ்டினேஷன் என ஆங்கிலத்தில் சொல்லுவது போல பயணமும் அழகாக அவளருகில் அமைய வேண்டாமா? இங்கு அருகில் என்பது ஐந்தடி முன்னாள்.

ஆ… என ஒரு சத்தம் வழிகாட்டி மூன்றாவதாக நடந்ததுக்கு பலன் கிடைத்தது ஜெஸ்ஸி காலில் பாதத்தின் ஓரத்தில் ஒரு முள் தைத்திருந்தது. அருகில் சென்றான் அவள் அருகில் அமர்ந்தான் அவள் பாதத்தை கையில் எந்தினான் என்றும் இல்லாத அவளின் புதிய வாசம் வீசியது பட்டாம்பூச்சிகளுக்கு பத்து டோஸ் குளுக்கோஸ் ஏற்றியது போல வேகம் காட்டின, ஒரு காலில் நிற்க முடியாமல் அவன் தோளில் கைவைத்தாள் முள்ளை பிடுங்கும் போது லேசாக வலிக்கவே தோளில் இருந்த கையை சற்று அழுத்தினாள்… இதுவே போதும்… அவன் கண் பாதத்தை பார்த்துகொண்டிருந்தது கண்ணெங்கிலும் அவள் முகம் பல தருணங்களில் பார்த்த பல புன்னகைகளுடன் மனம் நிறைய, இதயம் நிறைய, கண்நிறைய சிரித்தவள் முள் தைத்த வலியுடன் எப்படி இருக்கிறாள்? அவள் முகத்தை பார்க்க நிமிர்ந்தான் காலை நேர மஞ்சள் வெயிலில் ஏதோ வேற்றுக்கிரகவாசி போல மினுமினுக்கிறாள். வெயிலும் அவளும் ஒரே நிறம். வெயிலிலிருந்து அவள் சருமத்தை பிரிப்பது பூக்களில் இருந்து வாசம் பிரிப்பதளவு கடினமாக இருந்தது. உப்புக்காற்றின் வாசத்திலிருந்து இவள் நறுமணம் அறிவது பூப்பறிப்பதுபோல எளிதாக இருந்தது.

“என்னாலே தடவிக்கிட்டு இருக்க”

திடீரென ஜோசப் லேசாக கரகரத்தான்

ஸ்… என்று வலியை அணைத்து கொஞ்சியபடி காலை கீழே வைத்தால் ஜெஸ்ஸி. பிரமை பிடித்தவன் போல எழுந்து ஜோசப்பை பார்த்து சிரித்தான் செல்வம்.

பயணம் தொடர்ந்தது பெண் வாசம் பட்டால் பொறுப்பு வந்துவிடும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக எல்லோருக்கும் முன்னாள் வேக வேகமாக என நடந்து கொண்டிருந்தான் செல்வம். கடைசியாக உஸ்… உஸ்… என வலியால் சத்தம் போட்டவாறே நடந்தால் ஜெஸ்ஸி, சத்தம் அதிகமானது. பொறுமை போனது ஜோசப்புக்கு ,

“தாயே இம்மினிகாண்டு முள்ளுதான குத்திச்சு… ஏன் அலர்ற” என திட்டியபடி திரும்பினான்,

"மதி… மதி… "
கிட்டதட்ட அலறினான் ஜோசப். உணர்ச்சிவசப்படும் போது எங்கிருந்து வருகிறதோ இந்த ஊர் கூட்டும் சத்தம்.

வயிற்றை பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்தாள் ஜெஸ்ஸி…

“என்னல என்னாச்சு…” என்றவாறு நேராக ஜெஸ்ஸி பக்கம் போனாள் மதி. ஜெஸ்ஸியின் சீருடையில் சிறிது ரத்தம் படிந்திருந்தது…

முன்னாடி சென்றவன் திரும்பினான் பின்னாடி வந்தவர்களும் திரும்பி ஊருக்கே சென்றனர்…

பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் பெரும் சாபம். அதனை அவளும் பெற்றுக்கொண்டால். இயற்கை சில நேரங்களில் மடியில் அமரவைத்து பளீரென கன்னத்தில் அரையும், அவள் இப்போதுதான் பெரிய மனுஷி ஆகனுமா செல்வமும் எல்லோரும் பெரும் ஒன்றை அவளும் பெற்றுக்கொண்டால் என சாதாரணமாகததான் ஊர் திரும்பினர். ஆனால் எல்லோரும் அத்தை மகனுடன் வெளியில் செல்லும்போது முதிர்வதில்லை(word ah mathanum). அவள் வயதிற்கு வந்துவிட்டால். கோடை காலத்தில் காய்ந்த புற்களை தின்றுவிட்டு வீடு திரும்பும் பசுக்களை போல நடந்து சென்றனர். அவர்களுக்கு முன்னரே மதியும் ஜெஸ்ஸியும் வீடு சென்று சேர்ந்தனர்.

நாம் எல்லோருக்கும் அறிந்தோ அறியாமலோ நிறத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. 4 பெண்கள் வீதியில் போகும் போது பால்வண்ண புறாவைத்தான் கண்கள் தேடுகின்றன. சருமம் எவ்வளவு வெள்ளையாக இருக்கிறதோ அவ்வளவு அதிகம் கவனிக்கபடுகிறாள். அதே கவனம் பொலிவு குறைந்த பெண்ணிடம் காட்டினாள் அவளும் அழகாக தெரிவது நிச்சயம். எனினும் அறிந்தோ அறியாமலோ நாம் பெற்றுக்கொள்ளும் ஈர்ப்பு அந்த வாய்ப்பை இழக்க செய்கிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடத்திலும் இந்த நிற தாக்குதல் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. மகன் தன்னை விட ஒரு புள்ளியேனும் நிரமுள்ளவனாக பிறந்தால் தாய்க்கு அவ்வளவு ஆனந்தம். செல்வம் பிறந்த நொடி அவன் மாமா அவனை பார்த்து “பையன் நல்ல காலரா இருக்கான்” என்றதும் அவ்வளவு ஆனந்தம் கொண்டாள். எல்லோருக்கும் அந்த ஆனந்தம் இல்லை. மேரியும் அவள் கணவனும் இருவருமே காப்பி கொட்டைக்கு பவுடர் போட்ட நிறம் தான். ஆனால் செல்வம், ஊரில் உள்ளவர்கள் “கலரானபுள்ள” என்று சொல்லு அளவிற்கு மாநிறம். இயற்கைதான் மடியில் அமரவைத்து கன்னத்தில் பளீரென அரைவதில் வல்லதாயிற்றே. அதுவரை தினசரி குடிக்க காரணம் தேடிய செல்வத்தின் அப்பாவிற்கு அவனே இன்றுவரை தீனி. அவனை காட்டி காட்டி தன் மனைவியை சந்தேப்படுவதும் அடிப்பதும் அதையே காரணமாய் சொல்லி குடிப்பதும் அவரின் வழக்கம். செல்வம் அப்பாவிடம் எதுவும் பேசிக்கொள்வதில்லை. தன்னை சந்தேகப்படுகிறான், அடிக்கிறான், ஊர் முன் அவமானப்படுத்துகிறான் எனினும் அவன் கணவனாயிற்று என அவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டு வாழ்க்கையை கடத்தும் மேரி போன்ற பெண்கள் லூர்தம்மாள் புரத்தில் எப்படி கருவாடு மலிவோ அதுபோல இந்தியா எங்கிலும்…

ஊரே ஒரு மாதிரியாய் தான் பார்த்தது அதை உணர்ந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். செல்வம் வீட்டு முற்றத்தின் உள்ளே நுழைந்தான். எல்லா வீட்டாரும் எட்டிப்பார்க்கும் அளவு காய்ந்த தென்னை மட்டை கொண்டு வேலியமைத்ததே முற்றம். மேரி உள்வாசலில் நின்றுகொண்டு இருந்தால் இன்னும் மகனை ஏதும் கேட்கவில்லை அவன் கத்த வில்லை. ஆனால் பக்கத்துவீட்டு பரிமளா உட்பட தெருவில் உள்ள நொச்சை சொச்சைகளெல்லாம் ஞாயிறு திருப்பலியில் ஆராதனை பார்ப்பது போல இவர்கள் வீட்டை பார்க்க தொடங்கினர். மேரி உள்ளே வா என்று அழைத்தாள், செல்வம் உள்ளே போனான். பரிமளா அடுத்த வீட்டுக்காரியிடம் ஏதோ முணுமுணுத்தால் மேரியின் மூக்கு நுனியில் தொடங்கி நெற்றிப் போட்டு வரை ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத கடல்பூச்சி உலா வந்தது கண்களை லேசாக சிவக்க செய்தது அதன் பெயர் தான் கோவம் போல… முற்றத்தின் ஓரத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்தால் முட்டிக்கு கீழே விளாச ஆரம்பித்தாள் முதல் இரண்டு மூன்று அடிகளில் ஒன்று கால் எலும்பில் விழுந்து வீங்கியது… செல்வம் அவன் அப்பாவுடன் பேசிக்கொள்வதில்லை ஆனாலும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அவரை தொடர்பு கொள்வான். உதாரணத்திற்கு ஒரு மாதம் முன் இரவு 10 மணிக்கு குடித்துவிட்டு மேரியை அடித்த போது செய்வதறியாது தள்ளிவிட்டான், மற்றபடி இவன் அவனை தந்தை என்றோ அவன் இவனை மகன் என்றோ நினைத்தது இல்லை. மேரி அடிக்க அடிக்க பின்னால் சென்று சைக்கிளில் விழுந்தான் செல்வம், “பொம்பள பிள்ளைய கூட்டிட்டு ஊர் சோவார்ர அளவு திமிராடா உனக்கு” சொல்லி சொல்லி அடித்தாள் வீட்டிற்குள் இருந்து வந்த அவன் அப்பா போன மாதம் நடந்ததை போதையில் மறக்காதவன் எப்படி செல்வத்தை பெற்றெடுத்ததனை மறந்தானோ… அவன் எப்போதும் அணிய மறக்கும் தோல் பெல்ட்டுடன் வந்தான் அப்பா என்று உரிமை கொண்டாடி கண்மூடித்தனமாய் அடித்தான் ஊரே வேடிக்கை பார்த்தது. யார் கண்ணிலும் கருணை இல்லை. ஏதோ செல்வம் தான் ஆண்டவனாகி ஜெஸ்ஸியை பெரிய மனுஷி ஆக்கியதாய் வேடிக்கை பார்த்தனர். வழக்கம் போல போதையில் இருந்த அப்பன்காரன் பேச தொடங்கினான்,“அந்த புள்ளைய காட்டுக்குள்ள போய் என்னலே பண்ண பாத்த, இந்த தேவிடியா மவளுக்கு பொறந்தவன் வேற என்ன செய்வ… கா…த்தூ…” எல்லோரும் அவரவர் பிள்ளைகளின் காதுகளை மூடிக்கொண்டு உள்நடப்பு செய்தனர். கீழே இருந்த செல்வம் எழுந்தான். அடித்து களைத்து வாசலில் உட்கார்ந்து அழுத்துக்கொண்டிருக்கும் அவன் அம்மையை பார்த்தான். அவன் அப்பா எதிரில் நின்று கொண்டிருந்தார் வழக்கம் போல ஒரு தள்ளு வீட்டைவிட்டு வெளியே சென்றான்.
இரண்டு தெரு தாண்டவும் ஒரு பெரும் அலறல் சத்தம். கன்னத்தில் செருப்படி வாங்கிய தடத்துடன் ஓடி வந்துகொண்டிருந்தான் செல்வத்தை பார்த்ததும் சிரித்துக்கொண்டே ஓட தொடங்கினான் ஜோசப், நட்பு எத்தனை புனிதமானதனாலும் விவிலியம் போல பழையதாகிவிட வில்லை இதற்கு இந்த சிரிப்புதான் காரணமா? எத்தனை துன்பத்திற்கு இடையிலும் அதில் பங்குகொண்ட நண்பனை பார்த்ததும் வரும் சிரிப்பு தான் “வாழ்க்கை” அத்தனை வேடிக்கையானது அத்தனை புனிதமானது அத்தனை அர்த்தமற்றது அந்த சிரிப்பு. கோடைமழை போல ஒருவன் சிரிக்க அதைப்பார்த்த விவசாயி போல இன்னொருவன் சிரிக்கிறான். நண்பன் கூட இருக்கும் போது பிறக்கின்ற ஒரு நம்பிக்கையா? இல்லை இவன் நம்ம எவ்ளோ உணர்ச்சிவசப்பட்டு பேசினாலும் சிரிக்கத்தான் போறான் என்ற முன்னேற்பாடா? அல்லது நாம் அனுபவிச்ச எல்லாத்தையும் இவனும் அனுபவிச்சுட்டுத்தான் வர்றான் என்கிற ஆனந்தமா? எங்கிருந்து வருகிறதோ இத்தனை உயிருள்ள சிரிப்பு.
கடற்கரை ஓட்டி பாறைகளுக்கு நடுவே அமர்ந்தனர். பாறையில் அடிக்கும் அலையின் நுரை அதன் நிறமே ஜொலிக்கும் பிறை நிலா… இரவு கடலுக்கே உரித்த விலக்கிசொல்ல முடியாத நறுமணம் எந்த இசை கருவியும் ஒலிக்கமுடியாத ஆழ்கடலின் தாலாட்டு, உடன் உயிர் நண்பன், உபயம்: உயிர் நண்பன்…

“மதி என்னல ஆனா?” பேச தொடகிங்கினான் செல்வம்

“அவ அம்மா அடிக்கவே இல்லை” வருத்தத்துடன் சொன்னான் ஜோசப்

“அவளும் தான நம்ம கூட வந்தால்?”

“அவ பொன்னுல்ல அவ தான் ஜெஸ்ஸியை சரியாக வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்தலா…”

“அப்போ நமக்கு மட்டும் இவ்ளோ யேச்சும் அடியுமால?”

“இல்ல, அவளுக்கு பிலோமினால் அக்கா இப்டிலாம் வெளிய சுத்த கூடாதுனு அறிவுரை சொல்லிடு இருந்தாங்க… அவங்க கிட்ட அறிவுரை கேக்குறதே பெரிய தண்டனை தான”

கேள்வியும் பதிலுமாய் பேச்சு நீண்டது. புன்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்றலாமா? இல்லை அப்பாக்கள் போல மது அருந்தலாமா? என தீவிர உரையாடலுக்கு பின் இருவரும் அமைதியாக வீட்டிற்கு போய் தூங்க திட்டமிட்டு செயல்படுத்தவும் செய்தனர். உலகிலேயே மிகப்பெரிய கொடுமை கட்டாயத்தின் காரணமாக சிரிப்பை கட்டுப்படுத்துவதுதான். அந்த கொடுமையை தான் அனுபவித்துக் கொண்டிருந்தாள் மதி.

குருசடியில் மேரியும், ஜெஸ்ஸியின் அம்மா, ஜோசப்பின் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். 10 மணிக்கு செல்வம் வீட்டிற்கு வந்தபோது “வீட்டுக்கு லேட்டா வந்தா சூடு போடுவேன்” என போனவாரம் அடிவாங்கும் போது மேரி சொன்னது ஞாபகம் வந்தது. தாமதத்திற்கு தனியே கொடை கொண்டாடி விடுவார்களோ என தயங்கி தயங்கி வீட்டிற்குள் சென்றான் மேரி இல்லை. வாசலில் குடிபோதையில் ஒரு ஜீவன் உளன்றுகொண்டும் உலறிக்கொண்டும் இருந்தது. சமையலறைக்கு சென்றான். தோசையை பார்த்ததும் எங்க போனாலு எவ்ளோ கோவதுல போனாலும் சோத்துக்கு இங்க தான் வரணும் என மேரி இவனை பார்த்து வாக்கனையாய் சிரிப்பது போல இருந்தது. அவமணப்பட்டது இவன் மனம் முன் தானே அது என்ன வெளியவா சொல்லிவிட போகிறது என தோசையை சாப்பிடிட்டு முடித்து படுத்துவிட்டான். பத்து பதினைந்து நிமிடத்தில் மேரி வந்தால் முதலில் அவன் சாப்பிட்டுவிட்டானா என தோசையின் இருப்பை கவனித்தால். பின் அவன் அருகில் வந்து “பொட்டச்சிய கூட்டிட்டு ஊர் மேய போலாமாலே” என்றால் தூங்கிவிட்டது போலவே அசைவின்றி கேட்டுக்கொண்டிருந்தான் செல்வம். சிறிது நேரத்தில் அவன் தூங்கிவிட்டதாய் நம்பி அவன் தலையில் கைவைத்து கோதிவிட்டு “அந்த தூம சிறுக்கி வயசுக்கு வந்ததுக்கு நீ என்னடா பண்ணுவ” என்றால் உணர்ச்சிவசப்பட்டு எழுந்துவிடாமல் செல்வம் அப்படியே கிடந்தான். “தூம சிறுக்கி” ஜெஸ்ஸியை ஊரில் எல்லாருக்குமே பிடிக்கும் அவள் சொல்லும் பார்வையும் செயலும் அன்பையும் கனிவையும் சுரப்பது போன்றே தோன்றும், மேரிக்கும் அவளை பிடிக்கும் ஆனால் அவள் செய்யாத தவறுக்கு தன் மகன் துன்பப்படுவதால் அவளை ஒரு வார்த்தை திட்டி பேசுவது அவளுக்கு தவறாக தெரியவில்லை. மழையில் நனைந்தது மகனானாலும் தாய் வைவது மழையை தானே.

மறுநாள் காலை எழுந்தான். எழுந்ததும் பெரும் அதிர்ச்சி. ஜெஸ்ஸியின் தாய் வாசலில் அமர்ந்திருந்தாள். நேற்று அம்மாவாசை ராத்திரியிள் அலை அடிப்பது போல அடித்த மேரி ஏதும் அறியாத குழந்தை போல “எழுந்துச்சிட்டியா ராசா போய் பல்ல தொலக்கு” என்றாள். குழப்பத்தை உச்சத்தை எப்படி சொல்வது அதனினும் ஒருபடி மேல் நேற்று அடித்த அடிக்கு இன்று இரண்டு குடும்பமும் ஒன்றோடு ஒன்று சண்டைக்கு தயாராகியிருக்க வேண்டும் இவர்கள் இங்கு கொஞ்சிக்குழாவி கொண்டு இருக்கிறார்கள் என நினைத்தவாறு வீட்டு ஓலையில் சொருக்கியிருந்த பல்துலக்கும் குச்சியை எடுத்தான், கடற்கரை நகரங்களில் அதிகாலையும் அந்திமாலையும் காணக்கிடைக்காத பேரழகில் இருக்கும் ஆனால் காலை வெயில் கன்னத்தில் பளீரென அரையும். இன்று மிக்கொடூரம் நெற்றியில் கம்பி காய்ச்சு வைத்தது போல சுட்டது ஐந்து நிமிடம் பல்துலக்கி முடிக்கும் முன்னே தலைமயிர் காய்ந்து கருவாடாய் போனது. பல் துலக்கியதும் உள்ளே வீட்டிற்குள்ளே வந்தான் அவன் கணித்தது சரிதான் மணி 11ஆகியிருந்தது அத்தை கண்ணில்படாமல் அம்மா விடம் மெல்லமாக கேட்டான்

“ஸ்கூலுக்கு போக எழுப்பிவிடலையா?”

“ரெண்டு நாள் லீவு போட்டுட்டு மாமா கூட போய் பங்க்சனுக்கு ஒத்தாசை பண்ணு” என்றாள் மேரி.

மாமா வீட்டிற்கு வந்து அழைத்து சென்றார். விழா வேலைகள் ஆரம்பித்தன, இரண்டு நாள்கள் ஆடி மாச பட்டம் போல பறந்து பறந்து வேலை செய்தான். ஜெஸ்ஸி வீட்டின் முற்றம் மொட்டை மாடி மாமா அறை எங்கு போனாலும் ஜெஸ்ஸியை தேடினான். அவள் மட்டும் கண்ணில் படவே இல்லை மூன்றாவது நாள் காலை மதி வீட்டிற்கு வந்து போனால் அவள் ஜெஸ்ஸி மாடியில் உள்ள அறையில் உள்ளதாக சொன்னால் அந்த அறைக்கு யாரைக்கேட்டு போவது வீடெங்கிலும் உறவினர்கள்மயம் எங்கு சென்றாலும் யாரேனும் கேள்வி கேட்டு கொண்டிருப்பார்கள். மாலை வந்தது மாமா தேனீர் பரிமாற கோப்பை எடுக்க வீட்டிற்குள் அனுப்பினார். அத்தையிடம் சென்று “டீகப்” என்று பாதி வாயாலும் பாதி செய்கையிலும் சொன்னான் அத்தை மேலே என்று வாயால் கூறியதும் சற்றும் தாமதிக்காமல் படியேறினான் அத்தை செய்கையில் நான் வருகிறேன் என்றதை கவனிக்க மனம் இல்லை. மேலே சென்றான். ஜெஸ்ஸி அறை முழுவதும் பெண்கள் ஜெஸ்ஸியின் அண்ணன் அறையில் இருந்த கோப்பைகளை எடுத்துவிட்டு வெளியே வந்தான். ஜெஸ்ஸி அறையிலேயே இருக்கும் குளியலறையில் இருந்து துவட்டியும் காயாத ஈர கூந்தலோடு நீல துண்டை மார்புமுதல் கட்டிக்கொண்டு வெளியே வந்தால் பௌர்ணமி வெண்ணிலவாய் பிரகாசித்தது முகம் பால் போல பலளக்கும் தேகம்.
சிறுவயது முதல் அவளை எப்படி பார்க்க வேண்டும் என எண்ணியது இல்லை. எனினும் பெரும்பாலும் முகம் தவிர வேறெங்கும் பார்த்ததில்லை. இன்றோ கண்கள் அங்கங்கும் அலைப்பாய்ந்து எங்கேங்கொ பார்க்கிறது, ஏனினும் வெண்ணிலவினும் பிரகாச முகம் அவனை தலைநிமிர செய்கிறது, அன்னார்ந்து நிலவை பார்க்கும் போது பக்கத்தில் இருக்கும் பலவண்ணமாய் மினுமினுக்கு நட்சத்திரம் ஈர்ப்பது போல இவன் கண்கள் அவள் இதழ்களை நோக்கியது இதுவரை எவ்வளவோ பக்கம் வைத்து பார்த்திருக்கிறான் ஆனால் இன்று 15 அடிக்குமேல் தூரத்தில் அறையின் வெளியில் இருந்து பார்த்தான். அந்த இதழ்களில் இருந்து ஒற்றை முத்தம் பெற இவன் தேகம் தவித்தது, இதயமே துடித்து மார்புக்கூட்டை உடைத்து விடுவதாய் பயமுறுத்தியது.

“கொஞ்சப்பேர் வெளிய பொங்கப்பா அவள் ட்ரெஸ் மத்தட்டும்” வெளியூரில் இருந்து வந்த ஏதோ ஒரு கிழவி சொல்லியதும் அறையின் கதவுகள் அடைக்கப்பட்டது. “செல்வோ” என கூவினார் அத்தை கீழே சென்றுவிட்டான். பித்து பிடித்தவன் போல விழாவீடெங்கும் சுற்றினான். எதிரில் சிநேகிதன் ஜோசப்பை பார்த்ததும் மாமா அவனிடம் செய்யச்சொல்லியிருந்த வேலைகளை பட்டியல் போட்டு சொல்லிவிட்டு வீட்டிற்குப்போய் புது துணி மாட்டிக்கொண்டு வந்தான். அதுவரை எந்த துணி போடுவது என்று அவன் பத்து விநாடிக்குமேல் சிந்தித்ததில்லை. நீண்ட நேர உள்மன ஆலோசனைக்கு பிறகு வெள்ளை நிற சட்டையும் ஜீன்ஸ் கால்சட்டையும் அணிந்துகொண்டு வந்தான். விழா தொடங்கியிருந்தது அவள் சேலையில் வீற்றிருக்கும் அழகை பார்க்க ஓடோடி வந்தான். வரும் வழியில் மாமா அவனிடம் என்னமோ கூறினார் அதை கேட்டும் கேளாமல் சரி மாமா என்றபடி மேடை முன் வந்து நின்றான். இங்கு ‘முன்’ என்பது மேடைக்கு எதிரில் கடைசி இருக்கைக்கு பின்புறம். அவளுக்கு யார் மஞ்சள் வைக்கிறார்கள். யார் பெரிய சீர் செய்வது யார் மோதிரம் போட்டுவிடுவது எதுவும் தெரியவில்லை அது ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல் அவளை தொடுபவர்கள் மேல் பொறாமை வருகிறது. திடீரென அவன் அம்மா மேரி வந்து,

“ஜோசப் அங்க கஷ்டப்பட்டு பரிமாரிட்டு இருக்கான் நீ என்னாலே பறக்கபாத்துட்டு நிக்கிற” இழுத்து கொண்டு சாப்பாடு போடும் இடத்திற்கு கூட்டிபோனாள். பரிமாற ஆரம்பித்ததும் இலையை கழுவ தண்ணீர் ஊற்றாமல் பாயாசம் ஊற்றினான், தான் அம்மாவிடம் அடிவங்க காரணமாய் இருந்த பக்கத்து வீட்டு பரிமளாவிற்கு கரித்துண்டுகளை அள்ளிபோட்டான் “இன்னா செய்தாரே ஒருத்தல்…” என்னும் குறளுக்கேற்ப அவளும் குற்ற உணர்ச்சியில் குருகுறுத்து போனால். அவ்வப்போது ஏதேனும் ஒரு உணவு வாலியை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் சென்றுவிட்டு மேடை தெரியும் இடத்திற்கு வந்து வாயை பிளந்தபடி நின்று விடுவான். அவனை கவனித்து கொண்டிருந்த ஜோசப் திடீரென அருகில் வந்து,

“என்னால அவளையே பாத்துட்டு இருக்க?” என்றான்

“அவ இன்னைக்கு அழகா இக்கால்ல ல”
என்றான்.

“அதெல்லாம் இருக்கட்டும் அவ உன்னைய பார்க்கவே இல்ல” என்று சொல்லிவிட்டு தெருவில் பதனி விற்ப்பவன் போல வாலியை தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.

அவளை பார்க்க வைக்க வேண்டும் என தீவிர முயற்சிகள் செய்ய தயாரானான்
அம்மா குறுக்கிட்டாள் “வா போய் போட்டோ எடுத்துட்டு வரலாம்” என்றாள். இவனை அறியாமலே இவன் முகம் பிரகாசித்தது, அம்மாவிடம்,

“நீங்க போங்க நான் வர்றேன்”

என அனுப்பி வைத்துவிட்டு வேக வேகமாக தலையை சரிசெய்துவிட்டு ஜோசப்பிடம் ரகசியமாக

“நான் அவளுடன் போட்டோ எடுக்க போறேன்” என்றான்.

தன்னையும் உடன் அழைக்கிறான் என நினைத்து வாலியை வைத்துவிட்டு திரும்பி பார்த்தான். செல்வம் மேடைமேல் எறிக்கொண்டிருந்தான். மின்னல் வெட்டியது போல ஒரு பார்வை பார்த்தால் மேடை ஏறும் கடைசி படியில் தவறி எழுந்தான். அவளை முழுவதும் அருகிலிருந்து பார்த்துவிட வேண்டும் என எண்ணினான். தண்ணீர் திராட்சை ரசமாய் மாறுவதை கண்ணால் பார்ப்பதுபோல் அவள் பின்புறம் சுற்றி இடது பக்கம் போய் நின்றான். அவள் பார்வையை விட ஆயிரம் மடங்கு வெளிச்சம் குறைந்த புகைப்பட கருவியின் பிளாஷ் இவர்களை பிரித்துவிட்டது. அவளை விட்டு தொலைவு செல்லவேண்டிய நேரம் வந்தது. அவள் அருகில் இருந்து விலக முடியாமல் மேடையில் இருந்து யாரோ தள்ளிவிட்டது போல குருசடியில் போய் விழுந்தான்.

குருசடியில் ஒரு நபர் ஐந்து மணிநேரம் முழங்காலிட்டு ஜெபம் செய்ய முடியும். அவ்வளவு மிருதுவான மணல். அதில் படுத்து புரண்டுகொண்டான். வீசும் கடல் காற்றில் கலந்து அவள் கூந்தலை கோத முடியாமல் கண்களை தீண்ட முடியாமல் உதட்டினை நெருட முடியாமல் அர்ப்பமனித பிறவியாக பிறந்ததற்கு வருந்தினான். அவள் கண்ணில் மையாக இதழில் சாயமாக இடம் பெற முடியாமல் தன் உணர்வுகள் அனைத்தையும் குருசடி மணலுக்குள் புகுத்திவிட எண்ணினான் ஆனால் மனம் இருந்த கணத்தில் உடல் அசைய முடியவில்லை உணர்வுகள் அசையாமல் இருக்கவிடவில்லை. மணல் அவனை அணைத்து சாந்தப்படுத்தியது இதயத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது என எண்ணினான் அதன் வேகத்திற்கு ஓட தொடங்கினான் நேராக கடலுக்குள் ஓடினான் முடிந்த வரை நீந்தினான் கடலின் சீற்றத்திற்கு இவன் காதலுடன் போட்டிபோடும் வல்லமை இல்லை. முழுதும் நனைந்து கரைவந்து சேர்ந்தான் வீட்டிற்குள் சென்று அடைந்துகிடைக்க மனமில்லாமல் முற்றத்தில் படுத்து பிறை நிலவில் அவள் முகம் காண நினைத்தே உறங்கினான்.

மறுநாள் விடிந்தது வழக்கம் போல பள்ளிக்கூடம் சென்றான். அவள் வரவில்லை பொதுவாக நூறு சதவிகிதம் வருகை செய்யும் அவளுக்கு இந்த ஆண்டு அதற்கான பரிசு கிடைக்கப்போவதில்லை. செல்வம் எதிர்பார்த்ததுதான் ஆனால் அவனுக்கு மட்டும் ஐந்து முறை அவள் வருகை பதிவு கொடுத்திருந்தால் தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களும் ஏன் கணக்கு பாடம் எடுக்கும் பிரிட்டோ சார் கூட அவளாகவே வந்து நின்றனர். மூளையின் ஓரத்தில் எப்போதுமே அவளை குறித்த எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது. அது குறையும் பட்சத்தில் இவனை கேலி செய்வதாக நினைத்து ஜோசப் காதோரம் வந்து அவள் பெயர் ஒலிக்க நினைவுகளில் அவள் அலை அடிக்க அவளே கதி என ஒருநாள் போனது. பள்ளி முடிந்து வரும் வழியில் முந்தைய நாள் விழாவில் செல்வத்தின் அப்பா செய்த தகராறு குறித்து ஜோசப் அவனிடம் சொல்லிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். விழா அன்று அவன் குருசடிக்கு செல்லாமல் அங்கேயே இருந்திருந்தால் அவளிடம் ஏதாவது பேசி இருக்க முடியுமா… என யோசித்தே படுத்தவன் கனவிலும் அவள் வந்தால், விழா அன்று அவன் குருசடிக்கு செல்லவில்லை, அன்றிரவு அவளுடன் தனியாக இருந்து என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தான். என்ன பேசினால் என்ன கனவு தானே…

மறுநாள் பள்ளிக்கு அவள் வரவில்லை அலுத்து போனான் அவள் வீட்டில் வெளியூர் சொந்தக்காரர்கள் இருப்பதனால் வரவில்லை எனவும் சொந்தக்காரர்களில் ஒரு சிலர் அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டதாகவும் மதி கூறினாள். செல்வம் மாமா மீதும் மாமா கல்வி மீதும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த பேச்சுகள் நிலைக்காது என அவனுக்கு தெரியும். பள்ளி முடிந்தது, எவ்வளவு அறிவு இருந்தாலும் அதை மிஞ்சிய முட்டாள் தனம் தானே 14வயதினர் பெற்றெடுக்கும் காதல். மதி சொன்னதை வைத்து ஜோசப்பிடம் புலம்பிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தான். அவன் அம்மா மேரியிடம்,

“நாம ஜெஸ்ஸி வீட்டுக்கு போய்ட்டு வருவோமா?” மாமா வீடு ஜெஸ்ஸி வீடாக மாறியிருந்ததை கவனித்த மேரி.

“நான் மதியம் தான் போய்ட்டு வந்தேன்” என பதிலளித்தாள்,

இன்று அவள் வீட்டுக்கு போக இயலவில்லை, இவன் இருப்பை அவளுக்கு தெரிவித்தால் போதும் என எண்ணினான். அவளை பார்த்த கணம் ரோஜா இதழ்களில் முத்தம் பெற ஏங்கினான். இரண்டு நாட்களில் இருப்பை தெரிவித்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டான். “இரண்டே நாட்களில்” ஆனால் காதலை காண முடியாது அவளோடு கலந்துரையாட முடியாது தவிக்கும் மனதிற்கு அது ஒரு லட்சத்து எழுபதிரண்டாயிரத்து எண்ணூறு விநாடிகள் ஒவ்வொரு கணமும் அவளுடன் ஒரு புதிய வாழ்வு வந்துவிடும் எனும் நம்பிக்கையில் கடக்கிறான். இரண்டு நாட்கள் போனது. ஞாயிற்று கிழமை திருபலியில் அவளை தேடுகிறான் அவள் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்டாள்.

திங்கள் கிழைமை பள்ளி வந்து சேர்ந்தான் ஜெஸ்ஸி இல்லை உடைந்து போனான் வருவாளா மாட்டாளா என்றே சந்தேகம் வந்தது. மாமா அன்று ஜெஸ்ஸியை இவன் பார்த்த பார்வையை தவறாக நினைத்து வேறு பள்ளியில் சேர்த்து விட்டாரா? உண்மையாகவே திருமணம் செய்து கொள்ளபோகிறாளா? கேள்விகள் குடைய தொடங்கின. மேசையில் படுத்தான் காய்ச்சல் வந்தது. உணவு இடைவெளியில் எழுந்தான் ஜெஸ்ஸி வந்திருந்தால்…

கண்ணே மணியே ஒளியே முத்தே கடலே நிலவே கிழக்கே என கவிஞர்கள் பாடியதெல்லாம் அவள் வருகைக்காகத்தான் என எண்ணினான். அவள் இவனை பார்த்து புன்முறுவல் பூக்கும் போது என்ன சொல்வதென்று சிந்தித்தான் ஆனால் அதற்கு வேலை இல்லை அவள் இவனை பார்க்காமலே அமர்ந்தாள், இவன் அவளை பார்பதற்கு ஏதுவாக அமர்ந்தான். காற்றில் ஆடும் அவள் கூந்தல் புது காட்சியை உருவாக்கியது. அவள் முகம் பௌர்ணமி நிலவே… ஆயிரம் முறை கூறிமுடித்தாயிற்று, சூரியன் நிலவுக்கு முத்தமிட்டதை போன்ற அவள் இதழ்கள் மீண்டும் மீண்டும் ஈர்த்தன. அதன் வழியே ஒரு வார்த்தை மட்டும் பெற எண்ணினான் கிடைக்கவில்லை பள்ளி முடிந்தது அவளும் மதியை கூட கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.

அன்று முன்இரவு வரை உடனிருந்தான் ஜோசப். இரவெல்லாம் அவள் ஞாபகம் கடற்கரை அவன் சொல்வதை கேட்க தயாராக இல்லாதது போல பெரும் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. வானில் நிலவும் இல்லை. கடலோ நிலவோ சிறுவயது முதல் ஏதேனும் ஒன்றை கூறிக்கொண்டும் நாம் சொல்வதனை கேட்டுக்கொண்டும் இருக்கும். இன்று இரண்டும் இவனிடம் கோபித்துகொண்டுள்ளன போல. அவள் ஏன் இன்று பேசவில்லை? கடலுக்கும் நிலவுக்கு காரணமா தெரியபோகிறது? நேரம் கடந்தது… நிலவு இல்லாததனால் அலை வராமல் இருந்து விடுவதில்லை அலை இல்லாததனால் காற்றும் வராமல் இருந்துவிடுவதில்லை மகிழ்ச்சி இல்லாததனால் பசி மட்டும் வராமல் இருந்து விடுமா? எழுந்து தாயிடம் சென்றான். பசியாரிவிட்டு வீட்டு முற்றத்தில் கட்டில் போட்டு முழுஇரவும் இமையில்லாத மீன் போல நிலவில்லாத வானத்தை வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மேல் சிறு கோபமும் துளிர் விட்டது.

கிழக்கு லேசாக சிவந்தது மீண்டும் கடற்கரைக்கு சென்றான் சாரை சாரையாக ரோஜா இதழ் நிற பறவைகளும் வெள்ளை கொக்கு, நாரைகளும் கரைக்கு வந்து சேர்ந்திருந்தன. கரையோர பனைமரத்தில் கிளிகளின் கீச் கீச் குரல் கடல் அலையின் சத்தத்துடன் சண்டையிட்டு கொண்டிருந்தது மனம் நெகிழ்ந்து அத்தனையும் அவன் ஊருக்கு வந்துள்ள பெருமிதத்துடன். ஆதாமையும் ஏவாளையும் எதேனில் சுற்றித்திரியவிட்ட கர்த்தர் போல் அவற்றை பார்த்தான். சூரியன் மேலே வந்ததும் கரையில் ஒதுங்கியவை காட்டுப்பக்கம் பறக்க தொடங்கின. பாரம் நிறைந்த நினைவுகளும் ஜெஸ்ஸியிடம் பறந்துசெல்ல வற்புறுத்தின. காலதாமதமாக பள்ளிக்கு சென்று சேர்ந்தான். அவள் கண்ணில் பட்டால் ஆவளாகவே வந்து பேசட்டும் என நாள் முழுவதும் அவளை எதிர்பார்த்திருந்தான் அவள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. பள்ளி முடியும் முன் மதியை அழைத்து,

" அவ ஏன் என்கிட்ட பேசவே இல்ல?" என்று கேட்டான்

மதியோ,

“வயதிற்கு வந்துட்டாள்ள வீட்டில பேச கூடாதுனு சொல்லிருக்கலாம்” என்றால்

“உன் கிட்ட அவ என்ன சொன்னா?”

“என்கிட்ட உன்னபத்தி எதுவுமே சொல்லவில்லை” சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றால் மதி.

பள்ளி முடிந்தது அவளிடம் சென்று பேசலாமா வேண்டாமா? என சிந்தித்து கொண்டிருக்கும் போதே அவளும் மதியும் நடையை கட்டினார். இன்று ஜோசப் உடன் வருவதாக சொல்லியும் அவனை அழைத்துக்கொள்ள வில்லை தனியாக வீட்டிருக்கு சென்றான். ஆடை மாற்றிக்கொண்டு மேலும் நடந்தான் அவன் வருகைக்காக கடற்கரையில் பறவைகள் காத்திருந்தன ஆனால் அவை சூரியன் சுட்டால் பறந்துவிடக்கூடியவை அவன் என்றும் அவனுடன் இருக்கும் பறவையை தேடி இரண்டு தெருவிற்கு பயணம் மேற்கொண்டான் ஜெஸ்ஸி வீட்டு வாசலை அடைந்தான்…

" என்ன செல்வோ அம்மா ஏதும் சொல்லிவிட்டாளா" அத்தை கேட்டாள்

“இல்ல அத்தை ஜெஸ்ஸியை பாக்க வந்தேன்” செல்வம் கூறினான்

“என்னப்பா ஏதும் புக்கு வங்கனுமா?” வினவினாள் அத்தை

“இல்ல சும்மா பாத்துட்டு போலாம்ன்னு தான் வந்தேன் அத்தை” பதில் அளித்த படியே மாடிப்படியேறி சென்றான்.

பால்கனியில் புத்தகத்தோடு நின்றுகொண்டு இருந்தாள்

“செல்வா!!!”

இரண்டு நாட்கள் தவிக்கவிட்ட குற்றஉணர்ச்சி சிறிதும் இல்லாமல் இவன் ஏதோ இரண்டு நாட்கள் இறந்து கிடந்து இன்று உயிர்தெழுந்தது போல அவ்வளவு ஆனந்தமும் ஆச்சர்யமுமாக வரவேற்றாள்.
இவனுக்கோ கோவம் தலைக்கு ஏற வேண்டியது, ஆனால் புன்னகைத்தது அவன் பறவை ஆயிற்றே மனம் ஜிலு ஜிலு வென குளிர்ந்தது அவள் இவனின் பெயரை உச்சரித்ததே கட்டி அனைத்து ஆற தழுவியது போல இருந்தது. எப்படி பேச வேண்டும் என்றே மறந்து போனது,

“ஏன் இவ்ளோ நாள் பேசல?” என்று கேட்டான்.

“நீ ஏன் பேசல?” பதில் கேள்வி கேட்டாள்,

“நீ இவ்ளோ நாள் வீட்டுலேயே இருந்துட்ட என்னால பாக்கவே முடியல அப்போ நீ தானே என்கிட்ட பேசியிருக்கணும்.” அவன் தரப்பு நியாயங்களை எடுத்துகூறினான்.

“நானே வீட்டிலேயே அடைந்து கிடக்குறே நீ தானல நான் ஸ்கூலுக்கு வந்தது விசாரிச்சிருக்கணும். ஜோசப் கூட என்கிட்ட வந்து பேசினான், நீ தான் உன் வேலையையே பார்த்துட்டு இருந்துட்ட” கொஞ்சம் நெற்றியை சுருக்கி திரும்பி கொண்டால்,

ஜோசபிற்கு என்ன தண்டனை வழங்கலாம் என சிந்தித்தபடியே அவளிடம்,

“உன்ன வெளிய கூட்டிட்டு போனதுக்கு வீட்டுல எவ்ளோ அடி வாங்கினேன் தெரியுமா?” அவள் பாவப்படும் தோரணையில் சொன்னான்.

உதட்டோரம் சிரித்துவிட்டு திரும்பினாள்,

அவள் அம்மா கையில் காப்பியோட வந்து நின்றாள், “என்னப்பா செல்வோ முந்தாநேற்று அம்மா கூப்பிட்டத்துக்கு வர மாட்டேன் ன்னு சொன்னியாமே?” என்றாள்

ஜெஸ்ஸியை இவ்வளவு நேரம் சமாதானம் செய்தது வீணாகிவிட்டதே என எண்ணியவாறு காபியை எடுத்துவிட்டு கண்னாலே அம்மா தன்னை கூப்பிட வில்லை என்றான்.
ஜெஸ்ஸியும் அவள் கண்களாலே தெரியும் என்றால். அன்றுமுதல் உடலில் உறுப்புகள் அனைத்திற்கும் பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. கண்கள் பேசிக்கொண்டன, காதுகள் அவன்/அவள் ஓசை தனியாகவும் மற்ற ஓசைகளை தனியாகவும் கேட்க தொடங்கின. தன்னை அறியாமல் அவள் அருகில் உடல் நடுக்கமுற்றது. அவன் குரல் ஓங்கினால் இதயம் படபடத்தது மனமோ தனக்கு பொறுப்பேதும் இல்லாதது போல் அவனை \ அவளை சுற்றதொடங்கியது.

-ர. அந்தோணி அஜய்.

Kavidhaigalaiyum kadhigalaiyum mix panniteenga… romba lengthy . Ennal ungal kadhaiyin aanmavai unara mudiyavillai… thideerendru iyarkaiku pogireergal . . Appuram Jessi… idharku enna bandham endru unara mudiyavillai… vaazhthukal

Thevaiyilladha filler vasanangal… kadhaiku thevaipadavillai… professional writer nu ninaikiren… neengaley ippadi ezhudhinaal eppadi… kadhaila endha swarasiyamum illa… neenda payanama maari poikondey irukiradhu… Vaazhthukal

Kavithai, kadhai mix pannuvathu than idea… Length pathi yosika la enakku ok va irunthathu. Kadhaiyin aanma 14vayathinar sambantham pattathu aan paal mattumae pesappattathal intha pirachchanai entru purinthu konden kooriyatharkku nandri.

1 Like