Community

ஏய்....சண்டக்காரா!

சுவர்க் கடிகாரத்தை ஒரு முறை பார்த்த நிகிலா "சரியா இருக்கும் " என்று தனக்குள்ளேயே நினைத்தவாறு, கைப்பேசியையும் சாவியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். வீட்டைப் பூட்டிவிட்டி வெளியில் இறங்கியவளின் முகத்தில் குளிர்க்காற்று சில்லென்று வீச, சால்வையால் முகத்தை மறைத்துக் கொண்டாள். கைப்பேசியில் மறுபடியும் நேரத்தைப் பார்த்தவள் பள்ளி பேருந்து வழக்கமாக வந்து நிற்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கு நான்கு ஐந்து பெண்மணிகள் நின்று, பேசி சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. முக்கால் தூரம் நடந்தவள்…போனில் குறுந்தகவல்களைப் படித்துக் கொண்டு அங்கேயே நின்றுவிட்டாள். மனதில் இருந்த மெல்லிய சோகம் (வருத்தம்) முகத்தை ஆக்கிரமிக்க முயன்று கொண்டிருந்தது.

பேருந்து வரும் சத்தம் கேட்டு, ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாப்பை நெருங்கவும் , பையன் இறங்கவும் சரியாக இருந்தது. அவன் புத்தகப் பையை வாங்கிக் கொண்டு, சற்று இடைவெளி விட்டு இறங்கிய மகளையும் அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள். வழக்கம் போல் பள்ளியில் நடந்த கதைகளை இருவரும் மாறி மாறி சொல்ல, "அப்பிடியா ", " சரி விடு " என்று அவர்களுக்கு பதில் கூறியவாறு வந்தாள் நிகிலா. இருவரும் சில பல ஜோக்குகளைச் சொல்ல…செயற்கையாகச் சிரித்து அவர்களை மகிழ்வித்தாள்.

கதவு தட்டும் ஓசைக் கேட்டு, " Daddy “, என்று இருவரும் ஓடி கதவைத் திறந்து கதை அளக்க ஆரம்பித்தனர். நடு ஹாலில் அமர்ந்திருந்த நிகிலா, " ரெண்டு பேரும் வந்து வீட்டுப்பாடத்த ஆரம்பிங்க…ஸ்கூல் விட்டு வந்து ஒரு மணி நேரமாச்சு” என்று சிடுசிடுத்தாள். அன்றய அஞ்சல்களுடன் உள்ளே நுழைந்த கணவன் தன்னை பார்ப்பதை, கவனிக்காதவள் போல பாசாங்கு செய்து கொண்டாள். முகம் கழுவி உடை மாற்றி வந்த கதிர்…எதுவும் பேசாமல் டிவி-யை ஆன் செய்து தலைப்புச் செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தான். சற்று நேரத்தில் பள்ளி, ஆசிரியர் பற்றிய பேச்சு, குழந்தைகளின் விளையாட்டு என்றெல்லாம் நிகிலாவும் கதிரும் சகஜமாகப் பேசி சிரிக்கத் தொடங்கினர். மாலையில் தெரிந்த கவலை ரேகை நிகிலாவின் முகத்தை விட்டு மறைந்தது.

பத்து வருடங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தது இந்த பிரச்சனை (Disagreement)…முன்பெல்லாம் சமாதானப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து முடிவு எட்ட குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது ஆகும் நிகிலாவிற்கு ஆனால் இப்போது இரண்டு மணி நேரத்தில் !!! அதுவும் No சமாதானப் பேச்சு!!!

அப்பிடி என்னதாங்க பிரச்சனை அவங்களுக்குள்ள என்று பொறுமையிழந்து நீங்கள் கேட்பதும் , ஏதாவது மொக்கை விஷயமா இருக்கும் என்று நீங்கள் நினைப்பதும் எனக்கு கேட்காமல் இல்லை. இதோ சொல்லிறேன்…

முந்தைய நாள் மாலை…இடம் : வீடு

வழக்கம் போல் அலுவலகத்திலிருந்து திரும்பிய கதிர்…தன்னுடைய Routine வேலைகளை (டீ குடிப்பது, டிவி பார்ப்பது, அவசர அலுவலக வேலைகள் இருந்தால் முடிப்பது இல்லையேல் ஜிம்-மிற்கு செல்வது) முடித்து விட்டு, சமையலறையில் சட்னி அரைத்துக் கொண்டிருந்த நிகிலாவின் அருகே நின்று, " இன்னைக்கு என்ன பண்ணே?!" என்ற கேள்வியை உதிர்த்தான்.
“என்ன பண்றது…எப்பயும் போலத்தான்” என்று Short- ஆக முடித்தவளை விடாமல், "உங்க வீட்டுக்கு பேசினியா?!..என்ன சொன்னாங்க?! என்ற அடுத்த கணையைத் தொடுத்தான். “முக்கியமா எல்லாம் ஒன்னும் இல்ல " என்றவளிடம் “அப்புறம்” என்றான் இரண்டு பொறிக்கடலையை எடுத்து வாயில் போட்டவாறு. " அப்பறம் என்ன…எங்க அம்மாவோட சித்தி அதான் எங்க பாட்டி, நாமதான் கல்யாணமான புதுசுல அவங்க வீட்டுக்கு ஒருதடவ போனோமே” என்றாள்.

“ம்ம்ம் சொல்லு” என்ற கதிரிடம், " அவங்க மருமகளோட அப்பா என்று ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தாள். அவனும் “ம்ம்” என்று சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தான் இரண்டு நிமிடத்திற்கு. பொண்ணும் பையனும் மாறி மாறி குறுக்கிட அவர்களையெல்லாம் அதட்டி அடக்கி விட்டு விஷயத்தை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தாள் கதிரிடம். ஐந்து நிமிடம் பத்து நிமிடமானது. சமையலறையிலிருந்து மெதுவாக வெளியே வந்த கதிர் சாப்பாட்டு மேஜையிலிருந்த கடிதங்களை பிரித்து பார்த்துக் கொண்டே…“பாஸ்” செய்து அவனை பார்த்த மனைவியிடம் “சொல்லு”…என்றான். அவளும் Continue செய்தாள். நடு நடுவே “இதெல்லாம் நல்ல விஷயம் தானே?!”…உங்களுக்கு கூட அந்த இடம் தெரியுமில்ல ?! என்று கேள்வி கேட்டு அவனையும் உரையாடலில் சேர்த்துக்கொண்டாள். கணவனும் மனைவியும் ஒரே "Page "ல் இருப்பது முக்கியமில்லையா?!

அடுத்த இரண்டு நிமிடத்தில் சார்ஜில் இருந்த போனை நோக்கிக் கொண்டே "ம்ம்ம் " கொட்டிக்கொண்டும்… அவ்வப்போது “சரி விடு” என்று மனைவிக்கு பதில் சொல்லிக்கொண்டும் இருந்தான், குட்டீஸ் இரண்டும் இது தான் தக்க தருணம் என்பது போல "I Pad “-ல் ஐக்கியம் ஆகி விட்டிருந்தன. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கதிர் கணினி முன் அமர்ந்திருந்தான். தோசையை திருப்பிக் கொண்டே, " நீங்க என்னங்க சொல்றீங்க?!” என்று கேட்ட நிகிலா, பதில் வராதது கண்டு ஹால் பக்கம் திரும்பினாள். முகத்தில் புன் முறுவல் படர எதோ type செய்து கொண்டிருந்தான் கதிர். மறுபடியும் ஒருமுறை “நீங்க என்ன நெனைக்கிறீங்க?!” என்றாள். எந்த பதிலும் இல்லை. என்னங்க என்று அழைத்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். “எத பத்தி?! என்று கேட்ட கணவனை எதோ கொலைக் குற்றம் செய்தவனைப் போல ஒரு பார்வை பார்த்து விட்டு, " ஏய் ரெண்டு பேரும்…எந்திரிங்க…எப்ப பாத்தாலும் I pad- ஐ பாத்துகிட்டு” - குழந்தைகளை நோக்கி உறுமினாள் நிகிலா.

“ஏய் நிகிலா…சொல்லு கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்” என்ற கதிரிடம்,
“என்ன பாத்தா லூசு மாதிரி இருக்கா?! நானா சொல்றேன்னு சொன்னேன்…நீங்க தான கேட்டீங்க?! என்று கோபத்தில் கொதித்தாள். " நான் கேட்டுகிட்டு தான்” என்றவனைத் தடுத்து " இனிமே ஏதாச்சும் சொல்லுவேனான்னு பாருங்க…போயி Facebook-க்க பாருங்க " என்று திரும்பிக் கொண்டாள். “ஏய்…மெயில் தான் செக் செய்து கொண்டிருந்தேன்” என்றவனை காதில் வாங்கவில்லை. “டேய் அம்மாவுக்கு கோவம் வந்துருச்சு டா” என்று குழந்தைகளுடன் சேர்ந்து அவன் செய்த சமாதானங்கள் எதுவும் அவளை சாந்தப்படுத்தவில்லை. கதிரும் பொறுமை இழந்து “போ…” என்று விட்டுவிட்டான். அந்த சண்டைதான் இன்று மாலை சமரசமானது.

கல்யாணமான புதிதில் இருந்தே நிகிலாவிற்கும் கதிருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் சண்டைதான் இது . அப்போதெல்லாம் கதிர் அலுவலகத்தில் இருந்து வந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும். ஜிம்மிற்கு போனால் கூட சண்டைதான் (அழுகையுடன்). " பொழுதன்னைக்கும் தனியாத்தான் இருக்கேன்…சாயங்காலமும் இப்பிடியே இருக்கவா…குழந்தை பொறந்துருச்சுன்னா நான் ஒன்னும் உங்களை இருக்க சொல்ல மாட்டேன்" என்று கூறுவாள். குழந்தை வந்தவுடன், " Full-Day" நான்தானே பாத்துக்குறேன்…இந்தாங்க" என்று கொடுத்து விடுவாள். அவள் கதை கதையாகச் சொல்லும் விஷயங்களை கேட்டே ஆக வேண்டும்…தடங்கலின்றி.

“நிகிலா…உனக்கு நியாபகம் இருக்கா ?! நாம நிச்சயதார்தத்துக்கு அப்புறம் போன்ல பேச ஆரபிச்ச புதுசுல…நீ ஒண்ணுமே பேச மாட்ட…ஒண்ணுமில்லன்னு வச்சுடுவ” என்று ஏக்கத்தோடு கூறும் கணவனிடம்…" நீங்களும் தான் பேசு…பேசுன்னு கெஞ்சினீங்க…இப்ப?! என்று கூறிச் சிரிப்பாள். இவர்களின் இந்த செல்லச் சண்டைகளெல்லாம் நான்கு நாளைக்குத்தான். நடந்தவற்றை சொல்லாமல் இருக்க நிகிலாவாலும் முடியாது…கதிருக்கும் கதை கேட்காமல் பொழுது நகராது. “அப்புறம்…” என்று ஆரம்பிக்கும் கதிரிடம் ," ஏன்… உங்களுக்கு வேற வேலை இல்லையா?! என்று ஆரம்பித்து…" நம்ம அபார்ட்மெண்ட்ல என்று அடுத்த அரைமணி நேரத்திற்கு விரியும்". அவனுக்கும் பழகிவிட்டது…பிடித்தும் இருக்கிறது!!!

அதாகப்பட்டது மகா ஜனங்களே, இதனால் உங்கள் அனைவருக்கும் சொல்லவிழைவது என்னவென்றால்…“அறுசுவைக்கு உப்பு எவ்வளவு அவசியமோ, அதே போல் அருமையான வாழ்க்கைக்கு ஊடலும் அவசியம் அளவோடு”. பொறுப்பான அம்மாவாக, வளர்ந்த மகளாக, அறிவுரை கூறும் அக்காவாக மாறிவிட்ட பிறகும் குழந்தையாக… அதுவும் பிடிவாதம் செய்யும் குழந்தையாக மாறி செல்லச் சண்டைகளை கணவரிடம் போடாமல் வேறு யாரிடம் போடுவது?!

என்ன நான் சொல்றது சரிதான?!!

1 Like

Good story… only one thing naan pass endra sollai bossaga eduthukonduviten… en thavaraa illai ungal thavaraa endru theriyavillai