Community

ஆசை அண்ணா - பிரகாஷ்

ஆசை அண்ணா,

உனக்காக நான் எழுதும் முதல் கடிதம் இது. எப்படி இருக்கிறாய்? என்னை விட்டு நீ வெகு தூரம் சென்று ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எனினும், என் சிந்தையில் உன் நினைவுகள் அலைமோதாத நாள் ஒன்று கூட இல்லை. உனக்கும் அப்படித் தானா? என் நினைவுகள் உன் மனதுள் என்றேனும் தோன்றுமா? தோன்றும்போது என்ன செய்வாய்? என்னைக் காண உனது உள்ளம் துடிக்குமா? ஒரு வேளை, காலப்போக்கில் என் நினைவுகள், கடற்கரைக் கால்தடங்களாய் உன் மனதிலிருந்து மறைந்து போய் இருக்குமோ?

நீ இப்போது பார்க்க எப்படி இருப்பாய் என்று காண என் மனம் தவிக்கிறது - உயரம், உருவம், நிறம், சிகை, கண்கள், நடை, பேச்சு, செயல் என்று ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயத்தையும் அறிந்து கொள்ள ஆவல் உண்டு. உனக்கும் அப்படி தோன்றுமா? உன் தம்பி என்ன செய்கிறான்? எங்கிருக்கிறான்? எப்படி இருக்கிறான்? என்றெல்லாம் உனக்கும் கேள்விகள் தோன்றுமா?

நாம் பிள்ளை அகவையில் விளையாடிய நொடிகளின் மிச்ச சொச்சம் ஆங்காங்கே எனது மனதில், கிழிக்கப்பட்ட வரைபடத்தின் துண்டுகளென சிதறிக் கிடக்கின்றன.

உனக்கு எல்லாம் ஞாபகம் உள்ளதா? நான் உன்னுடன் சண்டை பிடித்துள்ளேனா? நீ என்னை அடித்து, அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்பாயா? நம் தங்கை மீது உனக்கு கொள்ளை பிரியம் என்று அம்மா சொல்லும். அப்போ, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்? என்னைத் தூக்கிக் கொஞ்சியிருப்பாயா?

உன் இதழ் முத்தம் பட்ட தடம் ஏன் என் கன்னங்களில் காணவில்லை? நீயும் நானும் சண்டை போட்டுக் கொண்ட போர்க் காயங்கள் ஏன் என் உடலில் எங்கும் காணவில்லை? நீ என் தலை கோதியிருந்த, என் முடியிழைகளில் உன் ஸ்பரிசத்தின் மெல்லிய கதகதப்பு எங்கே காணவில்லை? நீயும் நானும் ஒரே படுக்கையில் ஒருவர் கால் மீது ஒருவர் கால் போட்டு, ஒற்றைப் போர்வைக்கு உறக்கத்தில் சண்டை போட்டு, அதிகாலையில் இருவர் மூக்கும் உரசும் தூரத்தில், மூச்சுக்காற்றின் வெம்மையில் தூங்கிய நினைவுகளின் சாரத்தில் ஒரு சொட்டு கூட ஏன் என் மனக் குடுவையில் காணவில்லை? நீ என்னிடம் பேசிய வார்த்தைகளின் ஒலி, என் சேவைகளின் மடிப்புகளுக்குள் ஒளிந்து இருக்குமோ, என்று தேடிய என் தேடல் பலனளிக்கவில்லை.

நாம் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படம் அடிக்கடி எடுத்து பார்ப்பேன். அதிலுள்ள சிறு வயதுப் பருவத்தில் என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை - நான் அவ்வளவு வளர்ந்துட்டேன் இப்பொழுது. நிறம் மங்கிட்டேன், கன்னம் சுருங்கிட்டேன், ஆனால், கண்கள் மட்டும் அப்படியே தான் இருக்கின்றன. உன்னைப் பார்த்தவுடன் உன் உருவத்திற்கு, பதினெட்டு ஆண்டுகள் கூட்டி, என் கற்பனையில் உன்னை வளர்த்தி, அழகு பார்ப்பேன். பிறகு, ஏனோ அழுவேன். உனக்குத் தெரியுமா நான் அழுவது? ஏன் அழுவேன் என்று? தெரிந்தால் சொல். உன்னை எண்ணி நான், என்னை அறியாமல் வடிக்கும் கண்ணீர்த் துளிகள், தரையில் விழும்போது உன் இதயத்தை நெருடாதா? ஒரு வேளை, நான் அழும் இராத்திரிகள், என் கண்ணீர் துளிகளைத் தம் இருள்-ஒழுகும் வானத்திற்குள் உறுஞ்சிக் கொண்டனவோ?

நீ இல்லா இடம், என் மனதுள் - மிகப்பெரிய, அடைக்க முடியாத ஓர் வெற்றிடமாக தான் உள்ளது. அதில் நான் இத்தனை ஆண்டுகளாக சேமித்த கண்ணீரின் உப்புப் படிந்த கரைகளில் அமர்ந்து உன்னுடன் பேசுவேன். அது உனக்குக் கேட்குமா? கேட்டிருந்தால், நீ ஏன் எவ்வித பதிலும் அளிக்கவில்லை?

வாழ்வில் சோதனைகள் வரும்போது உன் தோள்கள் வேண்டும் என்று கேட்பேன், ஆனால் நீ தரவில்லை! வாழ்வில் சாதித்து, மகிழ்ச்சியில் திளைக்கும் போது, உன்னைக் கட்டித் தழுவ ஏங்குவேன், ஆனால் நீ வரவில்லை! சிறு வயதில் நீ பெரிய புத்திசாலி என்று அம்மா சொல்லும். நான் அந்த வார்த்தைகளை மனதில் வைத்து, நீ பெருமைப் பட வேண்டும் என்று நன்றாகப் படித்தேன். நல்ல வேலைக்கும் வந்தேன். நம் குடும்பம் இப்பொழுது நல்ல நிலையில் இருக்கு. நம் அம்மா நல்ல சீலை உடுத்தி நான் பார்த்ததில்லை, எனவே அதை வாங்கித் தந்தேன்; தங்கைக்கு அவள் ஆசைப்பட்ட பெரியக் கரடி பொம்மை, நாகரிக ஆடை அணிகலன்கள் வாங்கித் தந்தேன். இருவரின் புன்னகையை நீ பார்த்திருந்தால், என்னை மெச்சியிருப்பாய்.

ஆனால், உனக்கு என்ன வாங்க என்று யோசிக்கும்போது, என் இதயம் மெல்ல இடம் பெயர்ந்து தொண்டைக் குழியில் இறங்கி, காற்றுப் பாதையை அடைத்துக் கொள்கிறது. அந்த நொடிகளில் மூச்சு விட சிரமமாக இருக்கும். அடுத்த முறையாவது, உனக்கு என்ன வாங்க என்று யோசனை வந்தால், நீ வந்து பதில் கொடுத்து, சுவாசம் கொடு.

அம்மாவிடம் நான் சொல்லுவேன் - எனக்கு இரு மகன்கள் பிறப்பார்கள் என்றும், அவர்கள் இணை பிரியாத சகோதரர்களாக இருப்பார்கள் என்றும். அம்மா சொல்லும், ‘நீ எவ்வளவு பெரியவன் ஆனாலும், உன் அண்ணன் விஷயத்துல இன்னும் ஆறு வயசுக் குழந்தையா தான் இருக்க.’ நான் அதைக்கேட்டு சிரித்தபடி அழுவேன். ஏன் என்று தெரியாது, உனக்குத் தெரிந்தால் சொல்.

உன்னோடு நிறைய விளையாட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. உன்னைக் கட்டி அணைத்து எங்கும் போக விடாமல் உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக உள்ளது. உன்னோடு நான் தவற விட்ட பதினெட்டு ஆண்டுகளுக்கு, அடுத்து வரும் பதினெட்டு ஆண்டுகள் ஆசை தீர பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது. திடீரென்று ஒரு நாள் வீட்டு வாசலில் நீ வந்து நிற்க வேண்டும், அது கனவாக மாறி என்னை ஏமாற்றி, உன் உருவம் காற்றில் கரைந்து காணாமல் போகாது இருக்க வேண்டும். நீ இத்தனை ஆண்டுகள் நான் இல்லாமல் வாழ்ந்ததற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும், நான் கோபித்துக் கொள்ள வேண்டும், நீ சமாதானப் படுத்த வேண்டும். உன்னோடு வண்டியில், உன் பின்னால் அமர்ந்து ஊர் சுற்ற வேண்டும், நான் உன்னைப் பின்னால் வைத்து நெடுந்தூரப் பயணம் செல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இன்னும் நிறைய ஆசைகள் உள்ளது.

ஆனால், ஒரு ஆசை மட்டும் நிறைவேற வேண்டும் - ஜீவ-ஒளி கொண்டு மின்னும் உந்தன் கண்மணிகளை நேரில் கண்டு, முதல் முறை நினைவறிந்து உன்னை ‘அண்ணா!’ என்று அழைக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது, வருவாயா?

உன்னைப் பற்றி கவிதை எழுத அமரும் ஒவ்வொரு முறையும் இரண்டு வரிகள் தாண்டி என்னால் செல்ல இயலவில்லை; அது ஒரு முடியாக் கவியாகவே இருந்து வருகிறது. எனது கடிதத்தை முடித்துக் கொள்ள வழி கிடைக்கவில்லை. இன்னும் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் எழுத என் மனக் குடத்தில் தமிழ்ச்சொற்கள் என்னும் மைச் சொட்டுகள் நிறைய உள்ளன.

இக்கடிதம் உன்னைச் சென்றடையுமா என்று கேள்வி உள்ளத்தில் உறுத்துகிறது. அம்மாவிடம் சொர்க்கத்தின் விலாசம் கேட்டேன் - பேசா மடந்தை போல், ஒரு கற்சிலை என மாறி நின்றார். விலாசம் கண்டறிந்தவுடன் இந்தக் கடிதத்தை உனக்கு அஞ்சல் செய்கிறேன். எனக்கு மறக்காமல் பதில் அனுப்பவும்.

என்றும் உயிருடன் உயிராய்,
உன் இளவல்.

  • பிரகாஷ்.
1 Like