Community

விடிவெள்ளி - கி.இலட்சுமி

விடிவெள்ளி


கி.இலட்சுமி

வெண்ணிலா அடுத்த வாரம் இங்கு வருகிறாளாம்… சுப்பு படித்துச் சொல்லிய கடிதச் செய்தியை மனைவி முத்துப்பேச்சியிடம் சந்தோசமாகத் தெரிவித்தான் மருதப்பன்.

“அஞ்சு வருசமா என் மகளை பார்க்காம நான் தவிச்ச தவிப்பு அந்த கடவுளுக்குத்தான் தெரியும்…ஒத்த புள்ளை அதுவும் பொம்பள புள்ளையை வைச்சுகிட்டு என்ன பண்ணப் போறாங்கன்னு ஊரும் உறவும் ஏளனமாப் பார்த்தாங்க…வெண்ணிலா பெத்த வயித்துல பாலை வார்த்துட்டாங்க…”

“என் மகளா ஊரை விட்டுப்போன வெண்ணிலா…டாக்டரா இந்த ஊருக்குத் திரும்பி வரப்போறா…அவ நம்ம குலத்துக்கே பெருமை சேர்த்துட்டா…மனசு நிறைஞ்சுருக்கு புள்ள…”

உண்மைதான்…அடிப்படை வசதிகளற்ற குக்கிராமம் அது…எட்டாவதுக்கு மேல் படிக்கவோ …மருத்துவம் பார்க்கவோ அக்கரைக்குத்தான் செல்ல வேண்டும்…அதனால் பெண் பிள்ளைகளை குறிப்பிட்ட வகுப்போடு நிறுத்தி விடுவார்கள்.வெண்ணிலா தடைகளைத் தகர்த்த முதல் பெண்.

மருதப்பனுக்கு பிறந்தது பெண்பிள்ளை என்றாலும் அவன் மனம் தளரவில்லை…மனைவியிடம் ஆறுதலாகப் பேசினான்.

"விடு பேச்சி… இது நமக்கு கடவுள் கொடுத்த பரிசு… பொண்ணா இருந்தா என்ன…ஊர் மெச்ச அவளை வளர்ப்போம்…அவளால நம்ம குடும்பமே தலைநிமிரத்தான் போகுது…நான் அவளை நல்ல முறையில வளர்ப்பேன் … " மருதப்பனின் நம்பிக்கை பொய்க்கவில்லை.

வெண்ணிலாவுக்கு படிப்பின்மீது ஈடுபாடு இருந்தது…பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் விருப்பத்தோடு படித்தாள்… அக்கறையோடு படித்ததால் அக்கரைக்குச் செல்வது அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. அவள் வயதொத்த பெண் பிள்ளைகள் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலைகளிலும் வயல் வேலைகளிலும் கவனம் செலுத்தியபோது, வெண்ணிலா விடாப்பிடியாகத் தொடர்ந்து படித்தாள்.

பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றாள். மேற்கொண்டு மருத்துவம்தான் படிப்பேன் என பிடிவாதமாக நின்றாள்.வேறு ஊருக்கு மகளை அனுப்ப பெற்றோர் தயங்கினர். வெண்ணிலா பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மருதப்பனை நேரில் சந்தித்துப் பேசினார்.

"மருதப்பா…வெண்ணிலா சாதாரணமான பொண்ணு இல்லை… இந்த கிராமத்துக்கே கிடைச்ச வரம்… அவளைத் தடுக்க வேண்டாம்… நான் துணையா இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கறேன்…அவ விரும்பினபடி மருத்துவம் படிக்கட்டும்…அஞ்சு வருசம் பொறுத்துக்க… சொக்கத் தங்கமா மருத்துவர்ன்ற பட்டத்தோட வெண்ணிலா ஊருக்கு வரத்தான் போறா… அவளை இந்த ஊரே வரவேற்கத்தான் போகுது… " ஆசிரியரின் சொல்லை இருவராலும் தட்ட முடியவில்லை.

வருடங்கள் உருண்டோடின… வெண்ணிலாவின் கடிதங்கள் மாதம்தோறும் தவறாமல் வந்துவிடும்…பெண்ணைப் பிரிந்த கவலையை சுப்புவின் உதவியால் கடிதங்களைப் படித்து …தீர்த்துக்கொண்டனர். இனிமேல் கவலைக்கு இடமில்லை… இந்த ஓலைக்குடிசையில் இருக்கவேண்டிய அவசியமுமில்லை… வெண்ணிலாவுக்கு உடனே மருத்துவர் பணி கிடைக்கப்போகிறது…அப்புறம் கிராமத்தை விட்டே சென்றுவிட வேண்டியதுதான்… வெண்ணிலா மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்… அதற்காக எதைச் செய்யவும் மருதப்பன் தயாராக இருந்தான்.

ஊரே வெண்ணிலாவின் வருகைக்காக திரண்டு நின்றது…

காலையிலேயே மகளுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்து ஆரத்தி கரைத்துவைத்து தெருவையே பார்த்தபடி நின்றிருந்தாள் பேச்சி. அதோ மருதப்பனுடன் வந்துவிட்டாள் வெண்ணிலா. ஓடிச்சென்று மகளை ஆரத்தழுவிக் கொண்டாள் பேச்சி.

"கண்ணு… எப்படிம்மா இருக்கே…ஏன் இப்படி இளைச்சுட்டே… உடம்பை பார்த்துக்க வேண்டாமா… "

"அம்மா…முதல்ல ரெண்டுபேரும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க… நான் நல்லாத்தான் இருக்கேன்…ரொம்பநாள் கழிச்சு பார்க்கிறதால உங்களுக்கு அப்படித் தோணுது… "

“சரி…சரி… உள்ள வா…ஊரே கூடி நிக்குது…கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது…” பெற்றோரின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

அன்று மதிய உணவுக்குப்பின் மருதப்பன் வெண்ணிலாவிடம் மெல்ல ஆரம்பித்தான்.

“வெண்ணிலா .நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி…உன்கிட்ட ஒரு விவரம் சொல்லணும்… பக்கத்து டவுன்ல அடுத்த மாசமே பெரிசா தனியார் மருத்துவமனை திறக்கப்போறாங்க… அதுல உனக்கு வேலை தரேன்னு சொல்றாங்க…கைநிறைய சம்பளம்…தங்கறதுக்கு தனியா வீடு கூட தருவாங்களாம்…எல்லாம் பேசி முடிச்சாச்சு…இன்னும் கொஞ்ச நாள்ல மூட்டை முடிச்சை கட்டிகிட்டு எந்த வசதியும் இல்லாத இந்த ஊரை விட்டு கிளம்ப வேண்டியதுதான்…நம் வாழ்க்கையில இருட்டு மறைஞ்சு ஒளி பொறந்துடுச்சும்மா…”

வெண்ணிலாவின் முகம் உடனே மாறியது…

“இல்லப்பா… உங்களை மறுத்துப் பேசறதுக்கு என்னை மன்னிக்கணும்…எனக்கு இதுல துளியும் விருப்பமில்ல… நான் இந்த ஊர்லதான் இருப்பேன்…நம்ம ஊர்ல அரசாங்கம் சார்புல சுகாதார மையம் தொடங்கறதுக்கான முயற்சியில ஈடுபட்டிருக்கேன்… தலைமையாசிரியரும் சுப்பு மாமாவும் எனக்குத் துணையா இந்தப் பணியில இறங்கியிருக்காங்க… ஊர்மக்கள் கிட்ட கையெழுத்து வாங்க ஆரம்பிச்சாச்சு…வெகு விரைவில் இங்க அமையப்போற அந்த சுகாதார மையத்துலதான் என் முதற்பணியைத் தொடங்கப் போறேன்பா… அதுவரை இலவசமா மருத்துவ சிகிச்சையை நம்ம வீட்லருந்தே தொடங்கப்போறேன்… மருத்துவப்பணியோடு பின்னடைஞ்சு இருக்கற இந்த ஊரை முன்னேத்தற சமூகப்பணியையும் செய்யப்போறேன்…இந்த ஊர்ல அரசாங்க மேல்நிலைப்பள்ளிக்கூடம் வரணும்…பெண்கள் எல்லோரும் படிக்கணும்…என்னை மாதிரி நூறு வெண்ணிலாக்கள் முளைக்கணும்… அந்த ஒளியில ஊரே ஜொலிக்கணும்… அதுவரைக்கும் நான் ஓயப்போறதுல…”

வெண்ணிலாவின் பேச்சு மருதப்பனின் மனதை மாற்றியது…

“நீ சரியா சொன்ன வெண்ணிலா…இந்த ஊரோட விடிவெள்ளிமா நீ… உன்னை மகளா பெத்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்றேன்… உன்னோட இலட்சியத்துக்கு நாங்க எப்பவும் துணை நிற்போம்…” சொன்ன அப்பாவை நெகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா.


*இக்கதை என் சொந்த படைப்பே என்றும் இதுவரை வேறு எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்றும் உறுதி அளிக்கிறேன்.

பெயர் கி.இலட்சுமி

மின்னஞ்சல் lakshmide.k@gmail.com

புலன எண் 7299156011.

1 Like