Community

அந்த பயங்கரமான இரவு

     அந்த பயங்கரமான இரவு

 அன்று பிரவீனுக்கு நல்ல நாள் இல்லை. காலையில் எழுந்தது முதல் பிரட்சனைதான். சட்டை தேய்க்கும் பொழுது பொசுங்கிவிட்டது. குளிக்கும் பொழுது வெந்நீர் வரவில்லை. சாப்பாட்டில் உப்பு அதிகம் ஆகிவிட்டது. ஒரு சாக்ஸ் காணவில்லை. எனவே பழையதையே அணிந்தான். வெளியில் வந்தால் வண்டி பஞ்சர். பஸ் லேட். அப்போ ஆபீஸ்ல திட்டு தான். இன்றைக்கு வெள்ளிக்கிழமை. இன்று அவன் அலுவலகத்தில் வார இறுதி என்பதால் வேலை நெட்டி முறித்தது. மதிய உணவை மறந்து விட்டு வந்ததால், அருகில் உள்ள உணவகத்தின் கேவலமான புளி சாதம் வேறு தொண்டையில் இறங்கவில்லை. 

   எப்படியோ சமாளித்து இரவு 7 மணிக்கு மேல் கிளம்பி மறுபடி பஸ்ஸில் வீடு வந்து சேரும் பொழுது மணி 8:30. வீடு திறந்து இருந்தது. அது கொஞ்சம் ஒதுக்குபுறமான இடத்தில் கட்டப்பட்ட வீடு. புறநகர் பகுதி என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்பொழுதுதான் வீடுகள் வரத் தொடங்கி உள்ளன. எனவே கதவு திறந்து இருந்தது அவனுக்கு கோபத்தைக் கிளரியது. "என்ன பண்ணுறது இவள? கதவ திறந்து போட்டுட்டு என்ன செய்ற?" எனக் கத்திக் கொண்டே உள்ளே வந்தவன் அங்கு அவன் மனைவி ரேவதி இல்லாததைக் கண்டு குழம்பினான். எல்லா அறைகளிலும் பார்த்து விட்டு வெளியில் வர அவள் வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்தாள். 

    ஒரு நிமிடம் திடுக்கிட்டவன் "எங்க இருந்த?" எனக் கேட்டான். "இங்க தான இருந்தேன்"என அவள் கூற, "இல்லை. இப்போ நான் உள்ள வந்தப்போ நீ இல்லையே?" எனச் சற்று பயந்தபடி குழப்பத்தில் கேட்க, "நான் மாடில துணி எல்லாம் எடுத்துகிட்டு இப்போ தான் வரேன்" என அவள் கூறவும் ஒரு பெருமூச்சு விட்டான். "ஏன் என்னவோ போல இருக்கீங்க?" எனக் கேட்டவளுக்கு "ஒன்னும் இல்லை. நீ ஏன் வெள்ளை புடவை கட்டி இருக்க? " எனக் கொஞ்சம் அலுப்புடன் கேட்க, "இது காட்டன் புடவை. பழசு. சின்ன சின்ன நீல பூக்கள் இருந்துச்சு. இப்போ போய்டுச்சு. அதான் வெள்ளையா தெரியுது. கட்ட நல்லா இருக்கு. அதான் கட்டினேன்" எனக் கூறிய அவள், அவனை வினோதமாகப் பார்த்து "ஏன் இப்படி கேக்குறீங்க?" எனக் கேட்டாள்.

   "ஒன்னும் இல்லை" எனக் கூறிவிட்டு படக் எனத் திரும்பி படுக்கை அறைக்குள் உடை மாற்றச் சென்றான். வித்தியாசமாகப் பார்த்த ரேவதி "என்ன ஆச்சு இவருக்கு?" எனத் தனக்குள் கேட்டுக் கொண்டு உடைகளை மடிக்கத் தொடங்கினாள். உடை மாற்றச் சென்றவனுக்கு இன்று அலுவலகத்தில் நடந்தவை நினைவுக்கு வந்தன. காலையில் வேலைக்கு சென்ற பொழுது இரண்டு நாளாக விடுமுறையில் இருக்கும் சங்கரின் வேலையையும் இவனே பார்க்கும் படி ஆனது. அதைப் பற்றி கேட்ட பொழுது, இவனுக்கு அருகில் அமரும் பரசுராம், "டேய். போன வாரம் சங்கர் டிரக்கிங் போறேன்னு ஏதோ ஒரு மலைக்கு போனான் இல்ல. அப்போ அவனுக்கு என்னவோ புடிச்சு இருக்கு போல. திங்கள் கிழமை வேலைக்கு வந்தவனை நீ பாத்தியா? கண் எல்லாம் செவந்து ஜுரம் வந்து எவ்ளோ அவஸ்தை பட்டான். டாக்டர் கிட்ட போனாலும் சரி ஆகலையாம். அதான் மசூதில போய் மந்திரிச்சு ஏதோ பண்ணுறாங்க. இப்படி எல்லாம் போகாதீங்க அப்டின்னா எவன் கேட்கிறான். மச்சான்! நீயும் ஊரவிட்டு ஒதுக்குபுறமாக போய் வீட்ட கட்டி வச்சு இருக்க. பாத்து டா. தங்கச்சியை பாத்து இருக்க சொல்லுடா" எனக் கூறிக் குட்டையை குழப்பி விட்டு போய்விட்டான். 

   இதை நினைக்கும் பொழுது பட் எனக் கரண்ட் போனது. இவனுக்கு திக் எனத் தூக்கிப் போட்டது. சில நொடிகள் கண்களை மூடிய பிரவீன், தன் மனைவியை அழைக்கத் திரும்பியவன், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நடந்து வரும் மனைவியைப் பார்த்து அதிர்ந்து நின்றான். "நீ.. நீ.. எப்... எப்படி அதுக்குள்.. குள்ள மெழுகு... வத்தி.." எனத் திக்கித் திணறி வேர்த்துக் கொட்டி, பயத்துடன் கேட்க, அவள் பதில் சொல்லாமல் மெழுகுடன் அருகில் வர, இவன் பயந்து போய் இதயம் படபடக்க பின்னாலேயே சென்று சுவற்றில் முட்டிக் கொண்டான். கண்களை இறுக்கமாக மூடியவன் வாயில் இருந்து அனைத்து தெய்வங்களின் பெயர்களும் வந்தன. சில நொடி எதுவும் ஆகாமல் இருந்ததால் கண் விழித்தவன் மெழுகு மட்டும் அருகில் இருந்த மேஜையில் எரிவதைக் கண்டான். அவளைக் காணவில்லை. 

    பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு, சிறிது தைரியத்தை வரவழைத்து கொண்டு அறையைச் சுற்றிப் பார்த்தான். சுவற்றின் மேலே எல்லாம் பார்த்தான். (ஓவரா பேய் படம் பாக்காத என்று சொன்னா கேக்குறானா ) பீரோ மேல, உள்ள, கட்டிலுக்கு அடியில் எல்லாம் தேடியவன் காதுகளில் சமையல் அறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு நிமிர்ந்தான். மெதுவாக வெளியில் எட்டிப் பார்த்தான். ஹாலில் ஒரு மெழுகு எரிந்து கொண்டு இருந்தது. மெதுவாக "ரேவதி" என்று அழைத்தான். பதில் இல்லை. சமையல் அறையில் மேலும் பல சத்தங்கள் கேட்டன. "ரேவதி ..." எனச் சத்தமாக அழைத்தான். அப்பொழுதும் பதில் இல்லை. பயத்தில் வியர்த்து ஒழுகி மெதுவாக நடந்து வெளிக் கதைவை நோக்கி நடக்கையில், "என்னங்க. எங்க போறீங்க?" என்ற சத்தம் கேட்டு வேகமாக திரும்பினான். 

  அங்கே காதில் ஹெட் போன் மாட்டியபடி அவனைப் பார்த்தவள், ஃபோனில் பாடிய பாடலை அணைத்து விட்டு அதனை எடுத்து டேபிலில் வைத்தாள். "சாயங்காலம் இருந்து நாலு தடவ கரண்ட் போய் போய் வருது. மெழுகுவத்தி ஏத்துறதும் அணைக்குறதுமாவே இருக்கேன். நல்ல பாட்டு போட்டான். அதக் கேக்கறதுகுள்ள சார்ஜ் போச்சு. நீங்க எங்க போறீங்க? வந்து சாப்பிடுங்க" எனக் கூறிக் கொண்டே இரவு உணவை எடுத்து வைத்தாள். சரியாக அந்நேரம் கரண்ட் வரவும், "என்னங்க இப்படி வேர்த்து போய் இருக்கு?" எனக் கூறியவாறு அருகில் இருந்த துண்டை எடுத்துக் கொடுத்தாள். சிறிது பயம் தெளிந்தவன் சாப்பிட அமர்ந்தான். 

   இருவருக்குமே பரிமாரியவள் உண்டு கொண்டே, "சொல்ல மறந்துட்டேன். நம்ம தெருல கடைசி வீட்டுல இருந்தான் இல்ல ஒரு பையன். இன்னைக்கு தூக்கு போட்டு தற்கொலை செஞ்சுகிட்டானாம். பாவம். படிச்சுட்டு வேலை இல்லை என்னும் கவலை போல. ஊர்ல ஏதோ பிரட்சனையாம். அதான் இப்படி பண்ணிட்டான். போலீஸ் எல்லாம் வந்துச்சு. அப்புறம் வீட்டுக்கு சொந்தகாரர் வந்தாரு. அவரும் பாவம். இனி அந்த வீட்டுக்கு யார் வருவாங்க. பூட்டிட்டு போய்ட்டார்" என்றவாறு அவனுக்கு இன்னும் கொஞ்சம் சட்னி ஊற்றினாள். "இந்த மாதிரி சாகுரவுங்க ஆத்மா சுத்துகிட்டே இருக்குமாம். எதிர்வீட்டு மாமி சொன்னாங்க. நான் வெளிலயே போகலியே. மொதல்ல வீட்டுக்கு ஒரு நாய் கொண்டு வரணும். நாய் இருந்தா எதுவும் உள்ள வராதாம்" எனக் கூறியவாறு சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்து சென்றாள்.

  பிரவீன் தான் இன்னும் அதிக அதிர்ச்சியில் உறைந்து போனான். இன்று முழுதும் நேரம் சரி இல்லை. இது வேறு இப்படி நடக்குது. உண்மையில் ஏதாவது இருக்குமோ எனக் குழம்பினான். பிறகு படுக்கைக்குச் சென்று போனை எடுத்துப் பார்த்தவன் அதிலும் ஏதோ புது பேய் படம் பற்றி போட்டிருக்க, கடுப்பில் போனை அணைத்து வைத்துவிட்டு கண்களை மூடினான். தூக்கம் வரவில்லை. ரேவதியும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்து படுத்துத் தூங்கிவிட்டாள். புரண்டு புரண்டு படுத்தவன் எப்பொழுது தூங்கினான் என்று தெரியவில்லை. திடீர் எனச் சத்தம் கேட்க எழுந்தான். 

  கட்டிலில் அமர்ந்து இருந்தவனுக்கு எதுவும் கேட்கவில்லை. பெருமூச்சு விட்டவன் மீண்டும் படுக்கப் போக யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இவனுக்கு இதயத் துடிப்பு எகிறியது. மணியைப் பார்த்தான். 12:30. சப்த நாடியும் ஒடுங்கி இருந்தான். மீண்டும் மீண்டும் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. ரேவதியும் எழுந்து விட்டாள். அவளுக்கும் பக் என்றது. "என்னங்க" என மெதுவாக அழைத்தவளை மெதுவாக அணைத்தவன் கீழே இறங்கினான். அவளும் இறங்க இருவரும் நடந்து வாசலுக்கு வந்தனர். மீண்டும் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. "யார் அது?" என அவனுக்கே கேட்காத குரலில் கேட்டான். பதில் இல்லை. கதவைத் தட்டும் சத்தம் நின்றது. 

  சில நொடிகளில் வாசலை ஒட்டி இருந்த சிறு தோட்டத்தில் அமைந்திருந்த ஊஞ்சல் ஆடும் சத்தம் மட்டும் கேட்டது. "யாரது" என இம்முறை கொஞ்சம் சத்தமாகக் கேட்டான். ஆனால் பதில் இல்லை. ஊஞ்சல் ஆடும் சத்தம் மட்டும் கேட்டதும். மெதுவாகச் கதவைத் திறந்தான். வெளியில் யாரும் இல்லை. தலையை நீட்டிப் பார்த்தான். கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. ரேவதியை அணைத்தபடி மெதுவாக வெளியில் வந்து வாசலில் நின்று ரோடின் இடது பக்கம் பார்த்தான். யாரும் இல்லை. அதற்குள் அவன் கைபிடிக்குள் இருந்தவாறு வலதுபக்கம் திரும்பிய ரேவதி "ஆ..." என அலறினாள். அவளைக் கண்டு பயந்த அவனும் வலதுபுறம் பார்க்க, அந்த ஊஞ்சலில் ஒரு கருப்பு உருவம் அமர்ந்து மெதுவாக ஆடிக்கொண்டு இருந்தது. அவனும் அலற வாயைத் திறக்க வெறும் காற்று தான் வந்தது.

  அதற்குள் ரேவதி மயங்கி விழுந்து விட்டாள். அந்த கருப்பு உருவம் சிவந்த கண்களுடன் மெதுவாக அவனை நோக்கி வந்தது. அவன் இதயம் வாய் வழியே எகிறி விழுவது போல துடித்தது. இந்த பாழாப் போன மயக்கம் வேற வர மாடேங்குதே என்று அந்த நொடியில் நினைத்துக் கொண்டான். இத்துடன் முடிந்தது என்ற முடிவுக்கு வந்து விட்டான். அந்த உருவம் ஊஞ்சலில் இருந்து இவன் அருகில் வரும் 20 அடி தூரத்திற்கு எடுக்கும் நேரத்தில் இவன் வாழ்வு மொத்தமும் கண் முன் வந்து போனது. ஆசையாய் கட்டிய வீட்டில் இனி வாழ முடியாது என்று கண்ணீர் பொங்கியது. கால்கள் நகர கூட அடம் பிடித்து ஆணி அடித்து போல் நின்றது. 

  காலடியில் ரேவதி கிடக்க, கண்களில் வழியும் கண்ணீருடன் நின்ற பிரவீனிடம் வந்த உருவம், "கொஞ்சம் அந்த ஊஞ்சலை ஆட்டி விடுறியா? ஆசையா இருக்கு. பக்கத்து தெரு தான் நான். எவ்ளோ நேரமா கதவ தட்டுனேன். இது உன் பொண்டாட்டியா? உடம்பு சரி இல்லையா?" என சாராய நெடியுடன் கேட்டுக் கொண்டே சிறிது தள்ளாடிய படி தன் மேல் போர்த்தி இருந்த கருப்புக் கம்பளியை விலக்கி, பீடி பற்றவைக்க தீப்பெட்டியைத் தேடினான் அவன்.