Community

அவர்கள் அப்படித்தான்

பூவரசு நீண்ட நாள் வெளியூரில் தங்கி வேலை செய்து விட்டு அன்று தான் சொந்த ஊருக்கு திரும்பி இருந்தான்.அவரது வீட்டில் அவனுடைய உற்றார் உறவினர் அனைவரும் குழுமியிருந்தனர்.
வெற்றிலையை மடித்து கொண்டே அவரது சித்தப்பா “ஏன்டா உன்னய நேத்து இரவிக்கு வா -ன்னு சொன்னா நீ இன்னிக்கு மதியம் வார!..எங்களுக்கு வேற பொழப்பு இருக்காதாடா?!” என்று கடிந்து கொண்டிருக்க… மடித்த வெற்றிலையை வாங்கி கொண்ட பல் மடிந்த மூதாட்டி ஒருத்தி “விடுப்பா இன்னைக்கி ஒரு நாளேச்சும் அவன வையாம இருவென்” என அதட்டினாள்.பூவரசு எதுவும் பேசாமல் முகத்தில் மரியாதை கொண்ட அடக்கத்துடன் உள்ளே சென்று புத்தாடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.உறவினர்கள் அனைவருடனும் பூவரசு மாட்டு வண்டி கட்டி கொண்டு சென்று கொண்டிருக்கையில் தூரத்தில் இளம்பெண் ஒருத்தி ’ “வண்டியை நிறுத்துங்க” என கூச்சலிட்டு ஓடி வந்து வண்டியை மறித்து நின்று, "எம்மய உட்டுப்போட்டு என்ற மாமனுக்கு சம்பந்தம் பேச போய்டுவீகளோ!"எனக்கூற ’ “ஏலே!..இராசிக்கெட்டவளே…உம்முகத்தை பார்த்தா எதுவும் உருப்படாதுனு தான்டி உம்மகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன்…நீ எப்பிடி தெரிஞ்சுகிட்ட!” என பூவரசின் சித்தப்பா கூற அதை கேட்டு அவள் நொறுங்கி போனாள்.பூவரசு “சித்தப்பா அவளும் வரட்டுமே!” எனக் கூறியதற்கு அவ வந்தா அவளையே கூட்டிட்டு போ…நான் வரமாட்டேன் என கூறிவிட்டார். தாய் ,தந்தை இழந்த பிறகு சித்தப்பா தான் அவனுக்கு பெரிய ஆறுதல்…அதனால் அவரின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல் அமைதியுடன் வண்டியை செலுத்த தூரத்தில் அவள் அழுதுகொண்டே ஓடினாள்.வீட்டில் ஓடி சென்று தாழ்வாரத்தில் சுவரோடு சரிந்து விழுந்து குமுறிக்கொண்டு இருந்தவளைக் கண்ட அவளது தாய், “உன்னை தான் நான் போகாதனு சொன்னேனே அப்புறம் ஏன் அங்க போன?” எனக் கேட்க, “நான் பிறக்கும்போது என்ற அய்யா போய்ட்டாரு!..அது என் குத்தமா?..எங்கய்யாவை முதுகுல குத்துனவன் அங்குட்டு பல்லக்குல போறான்.நாம ஒரு வேளை சோத்துக்கு திண்டாடிகிட்டு இருக்கோம்” எனக் கதறி அழ,அவளது தாய் எதுவும் பேசாமல் மௌனமாய் நின்றாள்.
பூவரசும் அவருடைய உறவினர்களும் பெண் வீட்டினை அடைந்தனர்.பெண்ணின் உறவினர்கள் அனைவரும் அவர்களை அன்புடன் வரவழைத்து இருக்கையிலே அமர செய்தனர்.பூவரசு அடக்கமாக ஒரு திண்ணையின் ஓரத்தில் அமர்ந்தான்.பெண்ணை வரவழைத்து தேநீர் கொடுக்கும்படி செய்த பின்னர் இரு வீட்டு உறவினர்களும் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருக்க கூட்டத்தில் ஒருத்தர் மாப்பிள்ளைக்கு "என்ன உத்தியோகம்?"எனக் கேட்க “வீடு கட்டும் மேஸ்திரி” என அவரது பாட்டி கூறினார்.இதை கேட்ட பெண் வீட்டார் பொறியாளர் என்று தானே கூறி முறையிட்டனர்.இதை எதிர்பார்த்திராத பூவரசு திகைத்து நின்றான். எவ்வளவோ எடுத்து கூறியும் பெண் வீட்டார் இவருக்கு என் பெண்ணை தர மாட்டேன் எனக்கூறிவிட்டனர் .பின்னர்,ஒரு நிபந்தனை விதித்து அதற்கு சம்மதித்தால் தான் திருமணம் நடக்கும் என கூறிவிட்டனர்.அதாவது, திருமணத்திற்கு பின் மாப்பிள்ளை பெண் வீட்டார் செய்யும் தொழில் செய்து அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் அது.இதற்கு அவரது சித்தப்பா சம்மதம் தெரிவிக்க, பூவரசு என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பி நிற்க,அவனுக்கு அருகில் இருந்தவர்களில் யாரோ ஒருவர் “பெரிய இடத்துக்கார் எப்படி அவரோட அண்ணன் பையனை உறவறுத்து விடலாம்னு யோசனை செய்துகிட்டு இருந்தார்.நல்ல வாய்ப்பு கிடைச்சு இருக்கு விடுவாரா!” என முணங்கி கொண்டிருப்பதைக் கேட்டு அதிர்ந்து ‘நாம தான் சித்தப்பா தான் எல்லாமே என்று இருந்தோம்…ஆனால் அவருக்கு நாம் அப்படி இல்லை போலவே!’ என்று உண்மையை அறிந்து,சடாரென எழுந்தான்.“எனக்கு இந்த திருமணம் வேண்டாம்” எனக்கூறி எழுந்த அவனை அவனது சித்தப்பா அதட்டினார்.அவரிடம் இனிமேலும் பேச எதுவும் இல்லை என நினைத்து “என் வாழ்க்கை முடிவு நான் தான் எடுப்பேன்” என பெண் வீட்டாரிடம், “அய்யா…என்னோட அப்பா,தாத்தா அப்பிடின்னு வழி வழியாக நாங்க இந்த தொழிலை செய்துகிட்டு வாரோம்…அப்படி இருக்க என்னால திடீர்னு இவளோ நாள் எனக்கு சோறு போட்ட தொழிலை விட்டுட்டு உங்க தொழிலை செய்யனும் அப்படினா அது என்னால முடியாது.இந்த ஊருல எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்க எல்லாராலயும் கான்கிரீட் போட்டு வீட்டை கட்டிக்க முடியாது.இங்க நெறய ஏழைங்க இருக்காங்க…அவங்களுக்கு நாங்க தான் இருக்கோம்.நான் வாரேன்!” எனக் கூறி கொண்டு சென்றவனை "போடா… போ… நாதியில்லாதவன்டா நீ, திரும்பி என்கிட்ட தானடா வந்து ஆகனும்!"என்று அவரது சித்தப்பா கூறினார்.இதை கேட்ட பூவரசு,“நாதியில்லாதவன் நான் இல்ல…நீங்க தான்…எனக்குனு அங்க ஒரு சொந்தம் இருக்கு உங்களுக்கு யாரு இருக்காங்க அய்யா” என பணிவுடன் கூறிவிட்டு ஆனந்த களிப்புடன் உண்மை தெளிந்த உறுதியுடன் விடுவிக்கப்பட்ட பறவை போல் வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
கூரை வேய்ந்து பல வருடங்கள் ஆனது போன்ற ஒரு வீட்டின் முன் சென்று “அத்தை!” எனக் கூப்பிட்டான்.இது மாமாவின் குரல் என்று அழுதுகொண்டு இருந்த செந்தாமரை அதிர்ந்து எழுந்து ஓடி வந்தாள்.அதே சமயம் அங்கு வந்த பூவரசுவின் அத்தை பாப்பாத்தி "இங்க எதுக்குடா வந்த உன்னைய இங்க யாராச்சும் பார்த்தெனு உங்க சித்தப்பகிட்ட யாராச்சும் சொன்னா உன்னை திட்டி தீர்த்துருவாரே!!.."என புலம்பி கொண்டிருக்க
பூவரசு புன்முறுவல் செய்து செந்தாமரைய எனக்கு கட்டி கொடுங்கனு கேட்க இருவரும் வாயடைத்து போனார்கள்.சிறிது நேரம் கழித்து பெண் பார்க்க சென்ற இடத்தில் என்ன நிகழ்ந்தது என கேட்டாள் அவனது அத்தை,அவனும் நடந்த நிகழ்வை கூற இவள் ஒரு நிபந்தனை முன்வைத்தாள். “நீ எப்பொழுதும் இதே மாதிரி உன் உள்ளுணர்வை கேட்டுத்தான் நடக்கனும், அதுக்கு நீ சம்மதிக்கனும்” எனக் கோர அவனும் புன்முறுவல் செய்து சம்மதம் என தலையசைக்க,செந்தாமரை கன்னம் சிவந்து வெட்கப்பட்டு வீட்டினுள் ஓடினாள்.அதைக் கண்டு பூவரசும் பாப்பாத்தியும் புன்னகைத்தனர்.
இக்காலகட்டத்தில் இது போன்ற புதிய முறைகளின் யுக்தி மற்றும் பயன்பாடுகளினால் பழமையான பல தொழில்கள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன…அது போன்றவற்றில் ஒன்று தான் இந்த கட்டிடத்திற்கு கடைக்கால் போடும் பணி,தமிழகத்தில் இது போன்ற தொழில் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன என்றுதான் கூற வேண்டும்…அவர்களின் வாழ்வு மேம்பாட்டிற்கு எதேனும் செயல் செய்து அழிந்திடும் அப்பழமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

1 Like

Kadhaiyin nadai sattru sarivaaga ulladhu