Community

பொண்டுகள் மாமி

மாமி, அந்த கொண்டைக் கடலை கத்திரிகாய் பிட்லை சூப்பர். ஊறுகாய் சான்ஸே இல்லை போங்கோ,என்றாள் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த மூத்த மருமகள்.

ரசம், ம்… நன்னா இருந்தது, நீயும் வைக்கிறாயே ரசம்னு பெயர்தான். அது விஷம் என்றான் மகன் சிலேடையாக மனைவியைப் பார்த்து

மோர்குழம்பு, மாங்காய் பச்சடி அருமை, என்றான் இளைய மகன், திடீர் நார்த்தங்காய் ஊறுகாய்,வேப்பிலைக் கட்டி அடிச்சுக்கவே முடியாது மாமி என்றாள் இளைய மருமகள்.

இவையெல்லாம் காது குளிர கேட்டு ரசிப்பதா,இல்லை
தன் நிலையை எண்ணி நொந்துக்கொள்வதா என இருதலைக்கொல்லியாய் தவித்திருந்தாள் சமையல் வேலைக்கு வந்திருந்த பொண்டுகள் மாமி என அழைக்கப்படும் ஜானகி.

தனிக்கூட்டு தனிசுவை என்றவள், தன் பெயர்த்திக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு, கல்யாணம் வரைக்கும் ஆத்திற்கு வரவா போறவா என நிறைய பேர் இருப்பார்கள், நீதான் அடிக்கடி வந்து சமைத்துக் கொடுக்கணும் என்றாள் உரிமையோடு சாரதா மாமி.

அதுக்கென்ன மாமி? என்று சம்பளம் வாங்கிக்கொண்டு
கிளம்பியவளை,நாளைக்கு சமாராதனை. காலையிலே சீக்கிரமாக வந்திடுங்கோ என்றாள் சாரதா.

என்னடீ ஜானகி இது சமையல்? இதைத்தான் உங்காத்திலே கத்துண்டியா ? ஒரு குழம்பு ஒழுங்காக வைக்கத் தெரியலை,ரசம் வைக்கத் தெரியலை,ருசியா ஒரு டிபன் பண்ணத் தெரியலை,என்ன வளர்த்திருக்கா? என திட்டிய கணவன் ராமு ஊரில் பெரிய சமையல் கலைஞர் என பெயர் பெற்றவர்.

சமையல் கலைஞர்கள் சிலர் புகழ்போதையோடு,மது போதைக்கும் அடிமையாவது சர்வ சாதாரணம்,அதில் ராமுவும் விதிவிலக்கல்ல.

அடுப்பில் நின்ற அலுப்பு தீர தீர்த்தம் கொஞ்சமாக சாப்பிட்ட ஆரம்பித்த ராமு, பிறகு பண மிதப்பில் தீரா போதையில் மிதக்க ஆரம்பித்தான்.

வேலை நாட்கள் போக,
வீட்டில் உள்ள நாட்களில் ஜானகி சமையலுக்கு நித்ய விமர்சனம்தான்.
அது சரியில்லை,இது சரியில்லை என குறைக்கூறி, புதுப்புது அயிட்டங்களை எல்லாம் அவளைப் பண்ணச்சொல்லி, செய்த பின் சாப்பிடாமல் அதை வீணடித்து, நல்லாயில்லை என அவளை நோகடித்து,போதையிலே மிதந்தான்.

கல்யாணம் ஆன புதிதில் ஒரு குறையும் சொன்னதில்லை, கையில் பணம் ஏறிய பிறகுதான் அவனின் குணம் மாறியது. குணம் கோணலானதும் குடும்பமே கோணலாகிப்போனது.

அலுப்பு தீர்க்க கூடவே ஒரு எடுப்பும் வைத்துக்கொண்டான் என காது வரை வந்த செய்தியால் தன் எதிர் காலத்தைப் பற்றிய பயத்தில் இருந்தாள் ஜானகி.

திருமணத்திற்கு பொருத்தம் பார்த்தபோது, ஜானகியிடம் அவள் அப்பா கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.

வேதம் படித்த ஒரு பையன்,
சாதம் வடிக்கும் ஒரு பையன் என இரு ஜாதகத்தை கையில் வைத்துக்கொண்டு, நம்ம நிலைக்கு இதுதான்மா சாத்தியம் என்றவர், டிகிரி படிக்கணும் என்ற என் கனவிற்கு சமாதி கட்டினார்.

திருமணமே வேண்டாம்பா, அம்மாவிற்குப் பிறகு நானும் போயிட்டேன்னா உனக்கு துணை யார் இருக்கா? நாம இப்படியே இருந்திடலாம் என சொல்லியும், தந்தையாக தன் கடமை நிறைவேற்றாவிட்டால் அது பாவம் என்று சொன்னதும்,

அவர் பாவத்தை கழிக்கவே, வேதம் படித்தவனை விட சாதம் வடிப்பவனாலே குறையின்றி பார்த்துக்க முடியும் என தப்புதப்பாய் யோசித்து முப்பது வயதான ராமுவிற்கு இருபது வயதில் தாரை வாக்கப்பட்டேன். அதுவரை எனக்கு எல்லாமுமாய் இருந்த அந்த ஜீவனை காத்தியிருந்த மரணம் வந்து கொண்டுச் சென்றது.

என் இளமை பத்து வருடமே தேவைப்பட்டது அவருக்கு, வயது நாற்பதானதும் இளம் மயில் தேவைப்பட்டது.

தினம், தினம் சண்டை, உதை என நாட்கள் கழிய, ஒரு நாள் தான் சேர்த்த பணத்தோடு, சேர்த்துக் கொண்டவளோடு காணாமலே போனார் ராமு.

வருடம் இருபதாகியும், உயிரோடு அவர் எங்கோ இருக்கிறார் என்ற நம்பிக்கையில் நான் இங்கே குங்குமத்தோடு இருக்கிறேன். அதனால் இன்று வரை சுமங்கலி பூஜைக்கும், சமைக்கவும் கூப்பிடுகிறார்கள்.
அவரைக் கல்யாணம் பண்ணிண்டு கண்ட ஒரே சுகம் இதுதான்.

சம்பளம், புடவை,தட்சணை உட்பட பெற்ற பொருட்கள்களை எல்லாம் சாமி அலமாரி அருகே வைத்து நிமிர்ந்த ஜானகி கண்ணில் பட்டது ராமுவின் புகைப்படம், அதில் அவரின் சிரிப்பு,
உன்னை நான் நிர்கதியாக விடலை, உனக்கு நான் சுவையாக சமைக்க கற்றுக் கொடுத்தியிருக்கிறேன் பாரு என்பது ஆணவமாக சிரிப்பது போல இருக்க, தாலியை பவ்யமாக எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டாள் ஜானகி.