Community

திருமணச் சந்தை

அகல்யா அவனை தூரத்தில் பார்த்த பொழுதே அடையாளம் கண்டுகொண்டாள். போக்குவரத்து சமிக்ஞையின் பச்சை விளக்கு அவனுக்கு சாதகமாய் வழிவிட்டது.

அவன், இவள் நின்றுகொண்டிருந்த முனையை நோக்கி சாலையை கடக்கத் தொடங்கினான். பாதி சாலையை கடக்கும் முன்னரே அவனும் இவள் நிற்பதை கவனித்து விட்டான். ‘நிச்சயமாய் இவளை இனம் கண்டிருக்க வேண்டும்!’ என்பதை அவன் முகத்தில் ஏற்பட்ட சிறு சலனத்தில் இருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது.

இருவருக்கும் என்ன செய்வதென்றே பிடிபடவில்லை. அவள், அவனை கவனிக்காமல் அருகில் இருந்த தோழி உமாவிடம் ஏதோ முக்கியமாய் உரையாடுவதைப் போன்று பாவனையில் இருந்தாலும் ‘அவன் தன்னை கவனிக்கிறானா?’ என்பதை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்தவண்ணமே இருந்தாள். அவன் இவளை நெருங்கி வர வர இவள் மனதின் படபடப்பும் அதைத்தாண்டிய ஆர்வமும் மேலோங்க ஆரம்பித்தது. ‘தன்னிடம் வந்து பேசுவானோ?’ என்ற கேள்வி அவள் முழு மூளையையும் ஆக்கிரமித்து இருந்தது!!

இவள் எண்ணியதைப்போன்றே அருகே வந்தவன் இவளிடம் ஏதோ பேச எத்தனிப்பது இவளது விழியோரத் திரையில் தெரிந்தது. பின்பு என்ன நினைத்தானோ, எதுவும் பேசாமல் இவளைக் கடந்து, அடுத்து இருந்த அடுமனைக்குள் நுழைந்தான். நுழையும் முன் இருவரும் ஒருசேர பார்வைகளை பரிமாறிக்கொள்ளத் தவறவில்லை!! அவனது பார்வை, இவளிடம் அவன் ஏதோ சொல்ல அல்லது கேட்க நினைப்பதை இவளுக்கு உணர்த்தியது.

“ஹேய்! என்னடி நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்… நீ பதிலே சொல்லாம சும்மா ‘உம்’ கொட்டிட்டு இருக்க? நான் சொன்னது ஏதாவது உன் காதுல விழுந்துச்சா?” என்று உமா தன்னை உலுக்கியப்போதுதான் அவன் நினைவினின்று வெளி வந்தாள்.

“சொல்லுடி! நான் கேட்டுட்டுதான்டி இருக்கேன்”, என்று சமாளிக்க முயன்றவளிடம் உமா, “என்னது கேட்டுட்டு இருந்தியா? எங்க? நான் கடைசியா என்ன சொன்னேன் சொல்லு?!!” என்று வினவினாள்.

“சாரி உமா! நீ சொல்லிட்டு இருந்ததை நான் கவனிக்கல…”

“அது தான் எனக்கே தெரியுமே!! நான் பேசிட்டு இருந்தத கூட கவனிக்காம அப்படி எந்த கற்பனை உலகத்துல சுத்திட்டு இருந்த?”

“கற்பனை உலகமெல்லாம் இல்லடி… திடீர்னு கொஞ்சம் மனசு குழப்பமாகிடுச்சு”

“என்கிட்டே சொல்லக்கூடியதா இருந்தா சொல்லு. என்னால எதாச்சும் செய்ய முடியும்னா கண்டிப்பா செய்வேன். இல்லனா விட்டுடு. ஆனா ரொம்ப மனச போட்டு குழப்பிக்காத… அவ்ளோதான் என்னால சொல்ல முடியும்!”

அகல்யா சற்றே தயங்கியவளாய், “உன்கிட்ட சொல்லறதுக்கு என்னடி? எனக்கு ரீசன்டா ஒரு வரன் பார்த்து, முடியற மாதிரி போயி அப்புறம் டிராப் ஆகிடுச்சு இல்ல?” என்று உமாவின் முகத்தை ஏறிட்டாள்.

உமா ‘அது தனக்கு தெரிந்த விஷயம் தானே!’ என்பதைப்போல் தலையை ஆட்டி ஆமோதித்தாள். “ஆமா! பேறு கூட ஏதோ அருண்னு சொன்னியே! அந்த பையன் ஃபேமிலி வேல்யூ உங்க அப்பாக்கு பிடிக்கலைன்னும், அதை கேட்டதுக்கு அந்த பையன் உங்க அப்பாகிட்ட திமிரா பேசிட்டானும் சொன்னியே!”, என்று நிறுத்தியவள் பின் தொடர்ந்து, “ஆனா அது நடந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுதே! அதுக்கும் இப்போ இந்த குழப்பத்துக்கும் என்ன சம்மந்தம்?” என்று வினவினாள்.

“அந்த பையனை இப்போ நான் பார்த்தேன்டி!” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“அந்தப் பையனைப் பார்த்தியா? எங்கடி பார்த்த??”

“இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி நம்ம கிராஸ் பண்ணி போனாரு… இப்போ கூட அந்த பேக்கரில தான் இருக்காரு”

“சரி! அதுக்கு இப்போ என்ன?”

“இல்லடி… என்ன கிராஸ் பண்ணி போகும் போது நாங்க ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டோம். அவரு என்கிட்டே ஏதாவது பேசுவாருன்னு எதிர்ப்பார்த்தேன். ஆனா பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டாருடி…”

“லூசா நீ? கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி இருந்திருந்தா பேசிருப்பாரு. இப்போ தான் அது டிராப் ஆகிடுச்சே?! என்ன பேசுறதுக்கு இருக்குன்னு நெனச்சி போயிருக்கலாம். அதுவுமில்லாம நீதான் அவருக்கு பார்த்த பொண்ணுன்னு அவருக்கு தெரியுமா? இதுக்கு முன்னாடி உன்ன நேர்ல பார்த்துருக்காரா? போட்டோல மட்டும் பார்த்திருந்தா முகம் ஞாபகத்துக்கு வராம போயிருக்கலாம்”

“சான்ஸே இல்லடி! இதுக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் நேர்ல பார்த்து பேசிருக்கோம்!!”

“அடிப்பாவி! எனக்கு தெரியாம இது எப்ப நடந்துச்சு? ஒண்ணும் தெரியாத கொழந்தையாட்டம் இருந்துகிட்டு இந்த வேலை எல்லாம் பண்ணிருக்கியா நீ?” என்று கேட்டவாறே அவள் கன்னத்தைப்பிடித்து கிள்ளினாள் உமா. ஆனால் அதற்கு அகல்யா எந்த சலனமும் காட்டாததால், அவள் தீவிரமாய் இருப்பதை புரிந்து கொண்டு அவள் சொல்லவருவதை கவனமாய்க் கேட்க முனைந்தாள்.

அந்த சிறிய இடைவெளிக்குப்பின் அகல்யா தொடர்ந்தாள், “ஜாதகம் எல்லாம் பார்த்து இவர்தான் பொண்ணு பார்க்க வரப்போறாருன்னு முடிவானதுக்கு அப்புறம் ஒரு நாள் அவரு நம்ம ஆபீஸுக்கு என்னைப் பார்க்க வந்தாருடி! நாங்க ரெண்டு பேரும் நம்ம கேன்டீன்ல பதினஞ்சு நிமிஷத்துக்கு மேல பேசிருப்போம்…”

“பதினஞ்சு நிமிஷமா? அவ்வளவு நேரம் பேசுனதுக்கப்புறம் கூடவா அந்த ஆளோட கேரக்டர் உனக்கு தெரியல? அப்பவே பொண்ணு பார்க்க வரவேண்டாம்னு சொல்ல வேண்டியதுதான்டி?”

"இல்ல உமா… அப்போ அவரு ரொம்ப நல்லா பேசுனாரு. சொல்லப்போனா… அவரை எனக்கு முதல் அஞ்சு நிமிஷத்துலேயே பிடிச்சுப்போச்சு. ஏன்னா, அந்த அஞ்சு நிமிஷதுக்குள்ளயே அவரப்பத்தி முழுசா சொல்லிட்டாரு. எனக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காதுன்னு எல்லாம் தெரிஞ்சிகிட்டு, எனக்கு பிடிச்ச விஷயத்த மட்டும் பேசாம 'அவரு இப்படிதான்!'னு எல்லாத்தையும் சொல்லிட்டாரு. அப்புறம் தான் அதில எனக்கு என்னென்ன எல்லாம் பிடிக்கலைன்னு கேட்டாரு.

அவரு அந்த பதினஞ்சு நிமிஷம் பேசி முடிச்சிட்டு போகும் போது, நிஜமா அவரை கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லன்னு தோணுச்சு. இந்த கல்யாணத்துனால கண்டிப்பா நான் சந்தோஷமா தான் இருப்பேன்னு எனக்கே நம்பிக்கை வந்துச்சு!! சத்தியமா சொல்றேன். அவருக்கும் அந்த எண்ணம் கண்டிப்பா வந்திருக்கணும்!!"

“அது எப்படி அவ்வளவு கான்பிடெண்ட்டா சொல்ற?”

“ஒரு சின்ன ஜெனரல் நாலேஜ்தான்! பிடிக்காத பொண்ணுகிட்ட எந்த பையனாச்சம் தன்னிலை விளக்கம் குடுத்துட்டு இருப்பானா? அதுவும் இல்லாம பேசிகிட்டே என்னை நல்லா சைட் அடிச்சது எனக்கே தெரிஞ்சது” என்றவள் இப்பொழுதும் மெலிதாய்ச் சிரித்தாள்.

தன் தோழி அகல்யாவா இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கிறாள் என்ற வியப்பு மேலிட, “ஹ்ம்ம்… மேல சொல்லு!!” எனக் கேட்டாள் உமா.

“மேல என்ன சொல்ல? அவ்வளவு தான்!! அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே. பொண்ணு பார்க்க வந்து கல்யாணம் நிச்சயமாகும்னு நெனச்சிட்டு இருந்தேன். பட்… லாஸ்ட் மினிட்ல எல்லாம் மாறிடுச்சு!!”

“அப்படி என்னதான் உங்கப்பாகிட்ட அவரு தப்பா பேசுனாரு?”

“அதுதான்டி எனக்கும் தெரியல! நான் காபி குடுத்துட்டு மாடிக்கு போயிட்டேன். அப்பா எதுவுமே சொல்ல மாட்டேங்குறாரு. சிம்பிளா ‘அந்த பையனும், அவன் குடும்பமும் சரியில்லம்மான்னு’ சொல்லிட்டாரு. அதுக்கு மேல அவருகிட்ட என்ன கேட்குறது? எப்படி கேட்குறது? அம்மாவை கேட்டதுக்கு 'அந்த பையன் உங்க அப்பாகிட்டயே திமிரா எதிர்த்து பேசிட்டான்’னு சொன்னாங்க. ஆனா என்ன பேசுனாருன்னு சொல்லல.”

“சரிடி! அப்பாதான் தெளிவா சொல்லிட்டாரு இல்ல? இப்ப இதில என்ன குழப்பம்?”

இந்த கேள்வி அகல்யாவை வியப்படையச் செய்திருக்க வேண்டும். புருவங்கள் இரண்டையும் கேள்விக்குறியாய் வளைத்து உமாவைப் பார்த்தாள் அகல்யா. பின் நிதானமாய் அவளைப் பார்த்து கேட்டாள்.

“என்னடி? நீயும் ஒரு பொண்ணா என்னைப் புரிஞ்சிக்காம பேசுற? நாம பாட்டுக்கு சிவனேன்னு வீட்ல உட்கார்ந்துட்டு இருப்போம். திடீர்னு ஒரு நாள் வந்து போட்டோவ காமிச்சு, இந்த வரனுக்கு ஜாதகம் எல்லாம் ஒத்துப்போகுது. உனக்கு பிடிச்சிருந்தா முடிச்சிடலாம்னு சொல்வாங்க. நமக்கும் பிடிச்சு போயி ஆயிரம் கனவுகளோட இருந்தா, திடுதிப்புன்னு ‘இது சரியா வராதுன்னு’ சொல்லிடுறாங்க. காரணம் கூட சொல்ல மாட்டேன்றாங்க. ஒழுங்கா முதல்லயே ஆராய்ஞ்சு பார்த்துருக்கனும்ல? பெத்தவங்க நமக்கு நல்லது தான் பண்ணுவாங்க. இருந்தாலும் நமக்கு பிடிச்ச வரனை அவங்க வேண்டாம்னு சொல்றத்துக்கு ஒரு காரணமாவது சொல்லலாம்ல? நாம என்ன நினைக்கிறோம்னு கன்சிடர் பண்ணவே மாட்டாங்களா?”

அவள் சொல்வதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்தவளாய் தலை அசைத்து ஆமோதித்தாள் உமா.

“இவரும் பாரு… தானா தேடி வந்து பார்த்து, எல்லாத்தையும் நல்லா பேசிட்டு, இப்போ பார்த்துட்டு பார்க்காத மாதிரி போறாரு? நம்ம மாதிரி பொண்ணுங்களைப் பத்தி இவங்க என்னதான் நெனச்சிட்டு இருக்காங்க? நமக்கு மனசுன்னு ஒன்னு இருக்குன்னு நினைக்கிறாங்களா இல்லையா?” என்று ஆதங்கமாய்க் கேட்டாள் அகல்யா.

உமா சிறிது நேரம் யோசித்தப்பிறகு, “அகல்யா! உங்க அப்பாவ தான் என்னன்னு கேட்க முடியாது? இந்த மாதிரி ஆளுங்களை கேட்கலாம்ல?” என்றவாறே சிரித்தாள்.

அவளது சிரிப்பின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அகல்யாவிற்கு அவள் அடுத்து என்ன செய்ய முனைவாள் என விளங்கியது. இருந்தாலும், படபடப்பு அதிகமானவளாய், “ஹே! என்னடி சொல்ற?” என்று கேட்டாள்.

“பொறுத்திருந்து பார்!!” என்று சொன்ன உமா, சற்றுமுன் அருண் உள்ளே சென்ற அடுமனையை நோக்கி நடந்தாள்.

“ஹே! நில்லுடி… என்னடி செய்யப்போற? ஏதாச்சம் ஏடாகூடமா பண்ணிடாதடி! நமக்கு எதுக்குடி வம்பு?” என்று அவள் பின் சென்று அவள் கையைப்பிடித்து இழுத்தாள்.

“வம்பெல்லாம் ஒன்னும் வராது. நீ பேசாம என் பின்னாடி வா போதும்!” என்று இவள் கரம் பற்றி அடுமனைக்கு இழுத்துச்செல்லவும், அருண் கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. இவர்கள் இருவரையும் எதிரே கண்டவன் செய்வதறியாது ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். இவ்வளவு அருகாமையில் அவன் அவர்களை எதிர்ப்பார்க்கவில்லை.

“ஹலோ! நீங்க அருண் தானே? உங்ககிட்ட இவ ஏதோ தெரிஞ்சிக்கணுமாம்! ஒரு பைவ் மினிட்ஸ் எங்க கூட அங்க உட்காந்து பேச முடியுமா?” என்று அடுமனைக்குள் இருந்த ஒரு மேசையைக் காட்டி கேட்டாள்.

அவன் ‘என்ன பேச வேண்டும்?’ என்பதைப்போல் அகல்யாவின் விழிகளைப் பார்த்தான். அவளும் எதுவென்று தெரியாததைப் போன்று அவனையும் உமாவையும் மாறி மாறி பார்த்தாள்.

மூவரும் அந்த மேசையின் நாற்காலிகளை ஆக்கிரமித்தனர். ஒன்றரை நிமிடங்களுக்கு பார்வைகள் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தன. உமாதான் அதை நிறுத்தி வாய் வார்த்தையை தொடங்கி வைத்தாள்.

“இப்படி சும்மா உட்காந்துட்டு இருந்தா எப்படிடி? சீக்கிரம் கேட்க வந்ததை கேளு!” என்று கேட்டவளிடம், ‘எதுவும் வேணாம்டி’ என்பதைப் போன்று தலையை ஆட்டினாள். அருணுக்கோ அவள் என்ன கேட்கப் போகிறாள் என இதயம் படபடத்தது.

அகல்யா தயங்குவதை காணப்பொறுக்காத உமா, “அவ என்ன கேட்குறது? நானே கேட்குறேன். நீங்கெல்லாம் பொண்ணுங்கள பத்தி என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?” என்று சற்றே கோபத்தோரணையில் கேட்டாள்.

அவனோ அந்த கேள்வியின் காரணம் புரியாமல், “எதுவும் நெனைக்கலையே!” என்றான்.

“ஹ்ம்ம்… அது தான் கேட்குறேன்! ஏன் பொண்ணுங்களைப் பத்தி எதுவும் நெனைக்க மாட்டேன்றீங்க? இவளைப் பார்த்தா உங்களுக்கு ஒரு மனுஷியாவே தெரியல இல்ல?”

“எக்ஸ்கியூஸ் மீ! உங்க முதல் கேள்விக்கும் இந்த கேள்விக்கும் சம்மந்தம் இருக்குறதா எனக்கு தெரியல. நாங்க, ஐ மீன், நான் பொண்ணுங்கள பத்தி எதுவும் நெனைக்கலன்னு சொன்னா இவங்கள நான் மனுஷியாவே மதிக்கலைன்னு அர்த்தமா என்ன?”

“அப்படி நீங்க மதிச்சிருந்தா, இப்படி நடந்துப்பீங்களா?”

“நான் என்ன பண்ணேன்? நிஜமா நீங்க ஏன் அப்படி நெனைக்கறீங்கன்னு எனக்கு புரியல!!” என்றவாறே அகல்யாவை குழப்பமாகப் பார்த்தான்.

“என்ன புரியல உங்களுக்கு? இன்னைக்கு இவளை பார்த்துட்டு ஏன் பார்க்காத மாதிரி வந்தீங்க?”

“பின்ன என்ன பண்ணியிருக்கணும்னு நெனைக்கறீங்க?”

“உங்க ரெண்டு பேருக்கும் மனசு ஒத்துப்போய், கல்யாணம் நிச்சயமாகுற ஸ்டேஜ் வரைக்கும் போயி அப்புறம் டிராப் ஆகியிருக்கு. அப்படி ஆகுறதுக்கு என்ன காரணம்னு இவகிட்ட சொல்லணும்னு தோணலையா?”

“ஏன்? எதுனால டிராப் ஆனதுங்குற காரணத்தை அவங்க அப்பா அம்மா அவங்ககிட்ட சொல்லலையா?” என்று பதில் கேள்வி கேட்டான் அருண்.

அதற்கு உமா சற்றே எரிச்சலாக, “அவங்க அப்பா அம்மா சொல்றது இருக்கட்டும்!! நீங்க உங்க சைடு காரணத்தை சொல்லணும்னு உங்களுக்கு தோணலையா?” என்று கேட்டாள்.

“அவங்க அப்பாவே சொல்லாத போது, நான் என்னத்தங்க சொல்றது?”

இந்த கேள்வி அகல்யாவை எரிச்சலடையச் செய்திருக்க வேண்டும். “ஹே உமா! நான் தான் அப்பவே சொன்னேன்ல?? யாரும் யாருக்கும் எதையும் சொல்ல வேண்டாம். நாம கெளம்பலாமா?” என்று எழ முயன்றாள்.

அவளைத் தடுத்து இழுத்துப் பிடித்து மீண்டும் உட்காரச் செய்த உமா, அருணைப் பார்த்து கேட்டாள், “எனக்கு இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. அவங்க அப்பா சொல்லித்தான் நீங்க இவகிட்ட பர்ஸ்ட் வந்து பேசுனீங்களா? அப்போ இவ பேசாம போயிருந்தா உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? உங்களுக்கா ஆசை வந்து பேசும்போது நாங்களும் உங்ககிட்ட பேசணும். உங்களுக்கு தேவை இல்லைன்னா தூக்கி எறிஞ்சிட்டு போயிடுவீங்க… அப்படித்தானே?? பிடிச்சிருந்தப்ப மட்டும், தானா ஆபீஸுக்கே தேடி வந்து நல்லா பேசத் தெரிஞ்சதில்ல? இப்போ கல்யாணம் இல்லன்னு ஆனவுடனே அதை சொல்லறதுக்கு என்ன கேடு?”

உமாவின் கேள்விகளில் இருந்த உஷ்ணத்தை அகல்யா, அருண் இருவருமே எதிர்ப்பார்க்கவில்லை. இருவருமே சிறிது நேரம் அவளது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். சில மணித்துளிகளுக்குப் பிறகு, பெண்கள் இருவரும் அருணின் முகத்தை நோக்கினர்.

“ஏன் பேசாம இருக்கீங்க? உமா கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க!!” மௌனம் கலைத்துக் கேட்டாள் அகல்யா.

அவனோ என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான். தன்னை அறியாமல் தவறு செய்துவிட்டதை உணர்ந்தான். அகல்யாவிற்கென்று ஒரு மனம் இருப்பதை உணராமல் தானும் நடந்து கொண்டு விட்டதை அவன் உள்ளம் அவனுக்கு தெளிவாய்த் திரையிட்டுக் காட்டியது.

“ரெண்டு பேரும் என்ன மன்னிச்சிடுங்க! முக்கியமா நீ என்ன மன்னிச்சிடு அகல்யா. ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி!!” என்றான் அகல்யாவின் முகம் பார்த்து.

அதற்கு அகல்யாவோ, “எனக்கு தேவ, என்ன நடந்ததுன்றதுதானேயொழிய உங்க மன்னிப்பு இல்ல!!” என்றாள் அமைதியாக, ஆனால், தீர்க்கமாக.

அருண் தலை குனிந்து மேசையைப் பார்த்தவாறே மெல்ல பேச ஆரம்பித்தான். “நான் உன்கிட்ட பேசிட்டு போனதுக்கு அப்புறம் நீ எப்படி பீல் பண்ணேன்னு தெரியல. ஆனா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. யாருக்குமே கெடைக்காத ஏதோ ஒரு அரிய பொக்கிஷம் எனக்கு கெடைச்சிட்ட மாதிரி இருந்துச்சு. நமக்குள்ள எல்லாம் ஒத்துப்போனதால அன்னைக்கே நீ எனக்கு மனைவியாகிட்ட மாதிரி தோணுச்சு. சொன்னா நம்புவியான்னு தெரியல. வழி நெடுக உன்கூட பேசுற மாதிரி, சிரிக்கிற மாதிரி தனியா பேசிட்டு சிரிச்சிட்டு, இன்ஃபாக்ட், பாட்டு பாடிகிட்டு பைக் ஓட்டிகிட்டுப் போனேன். எதிர்ல வர்றவன் எல்லாம் என்னைப் பார்த்து தான் சிரிக்கிறாங்கன்னு தெரிஞ்சும் என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியல.”

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அகல்யாவிற்கு இதழோரத்தில் மகிழ்ச்சியில் மெலிதாய் ஒரு புன்னகை பூத்தது. ஆனால் ‘எங்கே அவன் பார்த்துவிடப் போகிறான்?’ என்று அவசரமாய் அதனை வலிய மறையச் செய்தாள். ஆனால் அவன் பார்வையோ இன்னும் மேசை மீதே நிலைக்குத்தி நின்றது.

“நாம ஆசைப்பட்டு மனசுக்குள்ள எழுதுற ஒரு விஷயத்த இன்னொருத்தர் வந்து நம்மைக் கேட்காம அழிக்கும்போது ஏற்படுற வலியை உங்களால புரிஞ்சிக்க முடியுமான்னு தெரியல.” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அனிச்சையாய் ‘தெரியும்!!’ என்பதைப்போல் தலையாட்டினாள் அகல்யா.

“ஆனா உங்க விஷயத்துல மத்தவங்க எதுவும் பண்ணலையே! நீங்க தானே காரணம். உங்கள யாரு அப்பாகிட்ட தாறுமாறா பேசச் சொன்னது??” - இது அகல்யா.

“உங்க அப்பா என்ன கேட்டாருன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“அவரு என்ன கேட்டாருன்னும், அதுக்கு நீங்க என்ன சொன்னீங்கன்னும் தெரியாமத் தானே இந்த தலைவலி, குழப்பம் எல்லாம்?!!”

தலையை மேலேத் தூக்கி அகல்யாவைப் பார்த்தவன், வறட்சியாய் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுத் தொடர்ந்தான். “நாம முதல் நாள் சந்திச்சு பேசும்போதே நான் உன்கிட்ட சொன்ன மாதிரி, நானும் எங்க அம்மாவும் எங்க அப்பாவ விட்டுத் தனியாத்தான் இருக்கோம். அதுக்கான காரணத்தையும் நான் உன்கிட்ட அன்னைக்கே சொல்லிட்டேன்.”

“ஆமா! உங்கப்பா ஏதோ இல்லீகல் ரிலேஷன்ஷிப் வச்சிருக்குறதாகவும், அதுனால பத்து வருஷத்துக்கு முன்னாடியே நீங்க பிரிஞ்சி வந்துட்டதாகவும் சொன்னீங்க… இந்த விஷயம் என் அப்பாவுக்கும் தெரியுமே?!”

“ஹ்ம்ம்! தெரிஞ்சு தான் உங்க வீட்டுக்கு நிச்சயம் பண்ண வரச்சொன்னார். ஆனா நீ காபி குடுத்துட்டு மேல போனதுக்கு அப்புறம் நாங்க எங்க அப்பாவ விட்டு பிரிஞ்சிருக்குறது தப்புன்ற மாதிரி பேச ஆரமிச்சிட்டாரு!”

“ஏன்? என்ன பேசுனாரு??”

“இந்த உலகத்துல தொண்ணூறு சதவீத ஆம்பிளைங்க எங்க அப்பா மாதிரி தான் இருப்பாங்கன்னும், அதையெல்லாம் பெருசா எடுத்துகிட்டா குடும்பம் செதஞ்சுடும்னும் சொன்னாரு. அதனால கல்யாணத்துக்கு அந்த ஆளை கூப்பிடுங்கன்னும் சொன்னாரு. ஏன்னா? ‘மாப்பிள்ளையோட அப்பா எங்கேனு’ உங்க சொந்தக்காரங்க கேட்கும் போது அவருக்கு கேவலமா இருக்குமாம்!! ஆனால் என்னாலதான் அந்த கேள்விய சாதாரணமா எடுத்துக்க முடியல!! அதான் அவருகிட்ட பதிலுக்கு ரெண்டு கேள்வி கேட்டேன்.”

“என்ன கேட்டீங்க?”

" ‘ஃபர்ஸ்ட், நீங்களும் அந்த தொண்ணூறு சதவிகிதத்துல ஒருத்தரான்னு?’ கேட்டேன். அதுக்கே அவரு முகம் மாறிடுச்சு.

நான் ரெண்டாவதா, ‘நாளைக்கு நானும் உங்க பொண்ணுக்கு தெரியாம வேற ஏதாவது தொடுப்பு வச்சிருந்தாலும் உங்க பொண்ணுகிட்ட இப்படித்தான் சொல்வீங்கலான்னு’ கேட்டேன். அதுக்கு அவருக்கு பயங்கர கோவம் வந்துடுச்சுன்னு நெனைக்கிறேன். ‘உங்க அப்பன் புத்தி தானே உனக்கும் வரும்னு’ பொறிஞ்சு தள்ளி வெளிய அனுப்பிட்டாரு"

“பின்னே இப்படி கேட்டா மடியில வச்சி தாலாட்டவா செய்வாங்க?” என்று கேட்டாள் உமா.

“எங்களை யாரும் தாலாட்ட வேணாங்க! புரிஞ்சிக்கலனாலும் பரவாயில்ல, எங்க உணர்வுகளை அவமதிக்காதீங்கன்னு தான் சொல்லறேன்!!” என்றான் அமைதியாய்.

பின் அவனே தொடர்ந்தான். "அவரு பொண்ணுக்கு மட்டும் அந்த பத்து சதவிகிதத்துல இருந்து மாப்பிள்ளை தேடுறாரே?, எங்க அம்மாவ அவரு ஏங்க ஒரு பொண்ணா மதிக்கவே இல்ல?

எங்க அப்பன் அப்படி திரிஞ்சதுக்கு எங்க அம்மா அனுபவிச்ச அவமானங்களும் வேதனைகளும் கொஞ்ச நஞ்சமில்ல.

‘இவ ஒழுங்கா இருந்தா, அவ புருஷன் ஏன் இன்னொருத்திக்கிட்ட போறான்னு’ எங்க காதுபடவே கண்டபடி பேசுனவங்களும், ‘அவளுக்கு அப்படிதான் வேணும்னு’ சாபம் விட்டவங்களும், எதுவுமே தெரியாத மாதிரி வந்து ‘நேத்து உங்க புருஷன் யாரையோ பின்னாடி உட்கார வச்சிகிட்டு போனாரு… அது யாரு உங்க தங்கச்சியா?’ அப்படின்னு கேட்டு பளிச்சவங்களும் எத்தனை பேறு தெரியுமா?.

எனக்கு தெரியக் கூடாதுன்னு அவங்களும், அவங்களுக்கு தெரியாம நானும் அழுத நாட்கள் எத்தனைன்னு தெரியுமா? அந்த வலி, அழுகை, வேதனை எல்லாத்தையும் குறைச்சு மதிப்பிடுறதுக்கு இவங்க அப்பாக்கு என்னாங்க உரிமை இருக்கு? அந்த வலிகளை எல்லாம் பொருட்படுத்தாம எப்படி இவங்க அப்பா அந்த ஆளை மன்னிக்க சொன்னாருன்னு என்னால இன்னும் புரிஞ்சிக்க முடியல!!" என்றான் அருண்.

அகல்யாவோ, “ஆனா… என்னால உங்க பீலிங்ஸ புரிஞ்சிக்க முடியுது. எங்க அப்பா அப்படி பேசுனவுடனே அவருக்கு உங்க விளக்கத்த சொல்லி புரிய வைக்காம, பட்டுன்னு எழுந்து வெளிய வந்துட்டீங்களே?? ஒரு நிமிஷம் என்னைப் பத்தி நெனச்சி பார்த்தீங்களா?” என்று பாவமாய்க் கேட்டாள்.

"இதில புரியவைக்க என்னங்க இருக்கு? ஏற்கனவே நம்ம சமூகத்துல கல்யாணங்கிறது ஒரு சந்தைக்கடை வியாபாரம் மாதிரி தான் நடக்குது.

அங்க எப்படி காய் கனிகளோட மதிப்பு, அத விக்கிற ஆளைப் பொருத்து மாறுதோ அதே மாதிரி இங்க மாப்பிளை பொண்ணோட மதிப்பும் அவன் பின்புலத்தை வச்சி தான் நிர்ணயிக்கப்படுது!! மனசையும் குணத்தையும் யாரும் மதிப்பிடுறது இல்ல. நான் இத குறையா சொல்லல. வெளில தெரியரத வச்சி தானே வியாபாரம் பண்ண முடியும்?

ஆனா இந்த சந்தைல என்னை நானே வித்துக்க எனக்கு தெரியலங்க! அது என்னால முடியவும் முடியாது! ஏன்னா? என்னை நான் வித்துக்குரதுக்கு எங்க அம்மா அனுபவிச்ச வலிகளையும், அவமானங்களையும் அடகு வைக்க வேண்டி இருக்கு. அப்படி செஞ்சு எனக்கு கல்யாணம் ஆகணும்னு எந்த அவசியமும் இல்ல!! நான் கடைசி வரைக்கும் எங்க அம்மாக்கு உதவுற ஒரு பொருளா இருந்துட்டுப் போறேனே!!" என்று தீர்க்கமாய் சொல்லி முடித்தான் அருண்.

“உங்க முடிவு அது தான்னா, அப்படியே செய்ங்க!! இப்பவும் நீங்க என்னைப் பத்தி யோசிச்சதா தெரியல! ஆனா எனக்கென்னவோ என்னோட முடிவையும் உங்ககிட்ட சொல்லணும்னு தோணுது…”

"பார்த்து, பிடிச்சு, பேசி, பழகி ‘இவர் தான்னு’ முடிவு செஞ்சதுக்கு அப்புறம் காரணமே இல்லாம உங்கள வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போக என்னால முடியாது. திரும்பவும் இன்னொருத்தர் கிட்ட இதே புராசஸ் பர்ஸ்ட்ல இருந்து ஆரமிக்கவும் என்னால முடியாது. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு!! உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சப்புறம் இன்னும் அதிகமா உங்கள பிடிச்சிருக்கு. இனிமேல் உங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான எல்லா முயற்சியையும் நான் பண்ண போறேன்!! உங்களுக்கும் அதே எண்ணம் இருந்துச்சுன்னா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க!!!

இப்போ நான் கெளம்புறேன், உமா! வா போலாம்!!" என்ற அகல்யா வேகமாய் எழுந்து வாசலை நோக்கி நடக்க, அவளைப் பின்தொடர்ந்து சென்றாள் உமா.

அவள் போவதையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்த அருண், இப்பொழுது தனக்குத் தானே பேச, சிரிக்க மற்றும் பாடவும் ஆரமித்திருந்தான்.

நாமும் அருண்-அகல்யா வாழ்க்கையில் மங்கள இசை முழங்க வாழ்த்துவோம்!!!