ஆதவன் கண் விழிக்கும்
நேரத்தில் அழகாய்
ஓர் கனவு…!
யாருமற்ற
அடர்ந்த வனமொன்றில்
எனதருமை தோழிகளோடு
நான் மட்டும் தனியாக…!!
கொட்டும் அருவி
அழகான சிறுகுடில்
குளிர் தென்றல் காற்று - இப்படி
இயற்கையின்
வதனத்தை
இமைக்காமல்
பார்த்து ரசித்தோம்…!!
முதல்முறையாய்…
ஆடை விலகுமோ - என்ற
அச்சமின்றி
அருவியில் குளித்தோம்…!
கொட்டக் கொட்ட
குனிவதென்பது
அருவியிடம் மட்டுமே
சுகம் எமக்கு…!!
நேற்றுவரை
சமையலறை என்பதே
என்ன சமைப்பதென்ற
குழப்பங்களின் கூடாரம்தான்
எங்களுக்கு…!
இன்று மட்டும்தான் - அது
சங்கீதத்தின் சங்கமம்.
கேலிப் பேச்சின் மாநாடு…!
எங்களின் சிரிப்பொலிகளின்
சத்தம் கேட்டு
உலைகூட நர்த்தனமாடியது…!!
தலைவாழை இலை விரித்து
மொத்தமாய் உணவு பரப்பி
தோழிகள் ஊட்டும்போது
அம்மாவின் நிலாச்சோறு
ஊட்டலுக்குபின்
முதல்முறையாய்
தோழிகளின் கைகளில்
அம்மாவின் பாசம்…!!
இரவு நேரத்தில்
முற்றத்தில் பாய்விரித்து
நிலவின் நிறம் பார்த்து
படுத்துக் கொண்டே
விண்மீன்களை
விரல்விட்டு எண்ணி
கவலைகளற்று
உறங்கிப் போனோம்…!!
யாரோ தட்டியெழுப்ப
கண் விழித்து
பார்த்தேன்! - என்
செல்ல மகள்
அருகில் நின்று - காலை
உணவுக்கு பொங்கல் வடை
வேண்டுமென்றாள்…!!
சிரித்துக்கொண்டே
எழுந்தேன்…
“அதிகாலை கனவு பலிக்குமாம்” - என்ற
நமத்துப் போன நம்பிக்கையில்…!
எனதருமை தோழிகளே…
ஒரு வேளை
கடவுள் வந்து
என்ன வரம் வேண்டுமென்றால்?
இந்த ஒற்றை தினத்தையே…
வரமாகக் கேட்பேன்.!!
-கவிதாயினி-