Community

முகிலும் புவியும்

         முகிலும் புவியும் 

         அத்தியாயம்: ஒன்று

‘தனிமை, மன அழுத்தம், மனக்குமுறல் முதலானவற்றில் இருந்து தப்பிக்கும் கருவியாக பல வேளைகளில் உதவுவது மது தான்.’

கொரோனா முடக்கத்துக்கான எட்டு மாத காலம் முன்பு,

       தடுமாறியபடியே ரோட்டை அளந்துகொண்டு தன் கைகால்களை இழுத்த வன்னம் புவியரசு நடந்து கொண்டிருந்தான். அதற்கு காரணம் மது போதை மட்டும் இல்லை. ஏழு வருடங்களுக்கு முன்னாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இடபுறம் செயலிழந்ததாலும் தான். பதினொரு மணி இருக்கும். குடித்த சரக்கு போதாதென்று மறுபடியும் சென்றான். ஒரு வழியாக, கடையில் சண்டை போட்டு ஒரு பாட்டிலை வாங்கியவன் வீடு திரும்பியதும் பொறுமை காக்காமல் பாட்டிலை அப்படியே சாய்த்தான். ஒரு மணிநேரத்துக்கு முன்னால் அக்கம்பக்கத்தார், தன் இளைய மகள் தரணி என அனைவரும் புவியரசை சமாதானம் செய்து படுக்கவைத்தனர். அவர்கள் அனைவரும் இருந்தபோதே இன்னொரு பாட்டில் வேண்டும் என்று புவியரசு அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.
         இரண்டு பாட்டில்களையும் முடித்துவிட்ட புவியரசுக்கு மழையில் நனைந்தது போல வேர்த்திருந்தது. அமைதியாக சற்று நேரம் எதையோ யோசித்தபடி உட்கார்ந்திருந்தான். தன் இரு மகன்களும் இப்படி ஒற்றுமை இழந்து எலியும் பூனையுமாக மாறிவிட்டனரே என்று எண்ணி கண்ணீர் விட்டான். பின் தடுமாறிக்கொண்டே மேலும் கீழும் விழுந்து எழுந்து ஒரு வழியாக தன் அரையின் கட்டிலை சென்றடைந்தான். முகத்திலும் கைகால்களிலும் நிரைய காயங்கள். அதுமட்டுமல்லாமல் இடக்கை மணிக்கட்டு நலுவியிருந்தது.
         சிறிது நேரத்தில் தன் வாழ்நாள் முழுவதும் அவன் முன்னே ஒரு படம் போல தெரிய ஆரம்பித்தது. அதில் முதலிலே தெரிந்தது கார்மேகம் தான். ஆம், கார்மேகம் தான் அவன் வாழ்வின் தேவதை. அவள் வந்த பிறகு தான் புவியரசின் வாழ்வின் திசை மாறியது. அவள் சென்ற பிறகு தான் அவன் வாழ்வில் கசப்பும் ஏமாற்றமும் தனிமையும் மிகுதியான குடிப்பழக்கமும் வந்தது. மழை இல்லாத பூமியின் நிலையே புவியரசின் நிலையாக இருந்தது, அவள் இல்லாத இறுதி பதிமூன்று ஆண்டுகளும்.
         மறுநாள் காலை காதுகளிலும் மூக்கிலும் ரத்தம் கசிந்து தரையில் விழுந்து இறந்திருந்தார் புவியரசு. தன் சந்ததியினர் தராத மன அமைதியை இரண்டு மதுபாட்டில்கள் அவருக்கு தந்தன. ஆனால், நிரந்தரமாக.


      அத்தியாயம்: இரண்டு

‘உணவுக்காக காடு மலை கடந்து தூர தேசங்களுக்கு செல்லும் ஒரு பிரிவினரும், சொத்துக்கு மேல் சொத்து சேர்க்கும் இன்னொரு பிரிவினர் அப்பிரிவினருக்கு உணவளிப்பதும் புராதன காலத்திலிருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கம் ஆகும். இக்கதையை படிக்கும் அனைவரும் உணவு தேடும் பிரிவினர் என்றே நான் நம்புகிறேன்.’

வடக்கிருந்து தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்ட மார்வாடி ஒருவர் மத்திய தமிழகத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கும் சகல சாத்தியமும் அம்மண்ணுக்கு உள்ளதாக நம்பினார். கார்மேகம் அப்போது பிறந்திருக்கவில்லை. அப்போது நம் பாரதமும் சுதந்திரம் பெற்றிருக்கவில்லை. தூரத்தில், பல மைல் தொலைவில், கட்டட வேலைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்றும் தெரிந்தவுடன் தங்கள் பூர்வீகத்தை விட்டு வெளியேறி காவிரி பாயும் பிரதேசத்தை கடந்து, சற்று தொலைவில் சென்று குடியேரினர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர். எண்ணிக்கையில் சற்று அதிகம். அந்த தொழிற்சாலையை கட்டியெழுப்பியதிலும் அதன் சுரங்கங்களை தோண்டியதிலும் அச்சமூகத்தினரை போல மற்ற ஊர்களில் இருந்து வந்த அதே சமூகத்தினரும் பங்கு வகித்தனர். தொழிற்சாலையானது உயர்ந்து வான் நோக்கி நின்றது, சுரங்கங்கள் ஆழமாக கடல் மட்டம் வரை சென்று கொண்டிருந்தது. இவை அனைத்திற்க்கும் உழைப்பே காரணமாக இருந்தது. தொழிற்சாலை அமைக்கும் பணி முடிந்த பிறகு சிலர் பிழைப்பு தேடி வேறு பிரதேசங்களுக்குச் சென்றனர். பெரும்பாலான மக்கள் அங்கேயே தங்கிவிட்டனர். அம்மக்களுக்கு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. சுரங்கம் தோண்டுவதிலும் வேறு சில கட்டட பணிகளிலும் ஈடுபட்டனர். அவர்களின் வேலை எங்கு இருந்ததோ அதற்கு அருகாமையிலேயே குடிசை வீடு கட்டினார்கள். சுரங்கங்களில் வேலை செய்தோர் சுரங்கங்களை சுற்றி குடியேரினர். அதனால் பல பேட்டைகள் உருவாகின.
கூலி ஆட்களாக வேலை செய்த போதும் சுயசார்பான வாழ்க்கைமுறையை விட்டு அவர்கள் வெகுதூரம் செல்லவில்லை. பெரும்பாலானோர் வீடுகளில் ஆடு, மாடு, கோழி முதலியன வளர்த்தனர். பால் மற்றும் இறைச்சி விற்பனை, கள் இறக்குவது என நாளடைவில் மக்களுக்கு தேவையான பொருட்களின் வினியோகத் தொழில்களிலும் ஈடுபட்டனர். இவ்வாறாக தொழில் வளர்ச்சியும் மக்கள் தொகை பெருக்கமும் சிற்றூராக இருந்த அந்த ஊரை பேரூராக மாற்றியது. சில வருடங்களில் அந்த ஊர் அம்மக்களுக்கு பிறந்த இடம் போலவே மாறியது. அவர்களின் ஒவ்வொரு பேட்டையிலும் ஒரு நாட்டாமையும் அவரின் ஆட்களும் மக்களுக்கு தேவையானவற்றை கொடுப்பதும் அவர்களின் பிரச்சனையை சரி செய்வதும் அவர்களின் கடமையாக இருந்தது.
அக்காலங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உடல் வழியாக உழைத்தனர். பிழைப்புக்காக ஆண்கள் செய்த அனைத்து வேலைகளிலும் பெண்கள் ஈடுபட்டனர். அதனால் குடும்பங்கள் வறுமையால் வாடவில்லை. தங்களின் ஓயாத உழைப்பால் தங்களின் இருப்பை அவர்கள் அந்த ஊரில் நிலைநிருத்திக் கொண்டனர். அவர்களின் குலதெய்வத்திற்க்கும் காவல்தெய்வத்திற்க்கும் கோவில் எழுப்பி வருடம் தோறும் திருவிழா கொண்டாடினார்கள். வருடம் முழுவதும் கேளிக்கை, கூத்து, குடி என ஆண்கள் கொண்டாட்டமான வாழ்க்கையை வாழ்ந்தபோது பெண்களின் வாழ்க்கை குடும்பதை ஒட்டியும் அவற்றை காக்கவுமே பாடுபட்டது.

       அத்தியாயம்: மூன்று

‘பதின்ம வயதின் அழகான அறியாமைகளை என்று நாம் கடக்கிறோமோ அன்றே நாம் வாழ்க்கை என்னும் விளையாட்டுக்குள் நுழைகிறோம். அன்றிலிருந்து நாம் மகிழ்ச்சிக்கான திசையின் எதிர் திசையிலே நமக்கே தெரியாமல் பயணிக்க துவங்குகிறோம், சாகும் வரையில்.’

பாரதம் சுதந்திரம் அடைந்து இருபத்தியிரண்டு வருடங்கள் முடிவடைந்திருந்தது. அப்போது கார்மேகத்திற்கு வயது பதினைந்து. திருமணம் முடித்து வைக்கலாம் என வீட்டார் முடிவெடுத்தபோது நாகராஜனின் தந்தை தன் மகளை பெண் கேட்டதால் கார்மேகத்தின் தந்தை தன் மனைவியிடம் ஆலோசிக்கலாம் என நினைத்தார். ஆனால், கார்மேகத்தின் விருப்பமாக இருந்தது புவியரசை கட்டிக்கொள்ளவேண்டும் என்பதே. புவியரசை பற்றி நல்ல அபிப்ராயம் இருந்தது கார்மேகம் வீட்டாருக்கு. நாகராஜனின் சித்தப்பா பையன் தான் புவியரசு.
கார்மேகத்திற்கு சிறுவயதிலிருந்தே புவியரசின் மீது ஓர் இனம் புரியா ஈர்ப்பு. வெள்ளிக்கிழமை தோறும் கோவில் பூசைகளுக்கும், சனி இரவு சினிமா கொட்டகைக்கும் அவள் செல்வதே அவனை பார்க்க தான். அவன் முன்னே தன்னை அழகாக காட்டிக்கொள்ள அவள் கண்ணாடி முன்னே நிரைய நேரம் செலவளிப்பாள். வகுடெடுத்து வாரிய நீண்ட கருமையான கூந்தல், வெளிச்சம் பட்டால் மிளிரும் அளவிற்கு கேசத்தில் எண்ணெய், பாவாடை சட்டை அணிந்து அதற்க்கேற்ற வண்ணத்தில் வளையல், ரெட்டை ஜடை பின்னி அதற்க்கேற்ற ரிப்பன், காலில் வெள்ளி கொலுசு என தன்னை அழகாக தயார்படுத்திக்கொள்ள அவள் தவறியதே இல்லை. சீராக அடுக்கபட்ட பல் வரிசை அவளின் சிரிப்பை பிரகாசமாக்கும். சிரிப்பழகி என்றே சொல்லுவார்கள் அனைவரும். அந்த சிரிப்பில் தான் சிறையடைந்தான் புவியரசு. ஆனால் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத பையனாகவே இருந்தான்.
தினமும் காலையில் புவியரசுக்கு கார்மேகத்தின் சிரிப்பை காணும் வாய்ப்பு கிடைத்தது. வாசல் சுத்தம் செய்துகொண்டே புவியரசின் வருகைக்கு காத்திருப்பாள். ஆம், இருவரும் எதிரெதிர் வீட்டில் தான் குடியிருந்தார்கள். புவியரசின் தினசரி முதல் வேலையே அவளின் சிரிப்பை காண்பது தான். புவியரசு அமைதியானவன். தயக்கமும் கூட இருக்கும். தன் நன்பர்களுடனும் வேலை செய்யும் இடங்களிலும் கலகலவென சிரித்து பேசும் அவன் சொந்தங்களுக்கு மத்தியில் அவ்வளவாக கலந்து பேசி மகிழ்வதில்லை. ஆனால் கார்மேகத்திடம் அவன் காட்டிய மௌனம் வேறு.
சிறு வயதில் அவளிடம் பேசி சிரித்தவன், விளையாடி மகிழ்ந்தவன் அவள் பெரிய பெண்ணாகிய அன்றிலிருந்து பெசுவதை குறைத்துக்கொண்டான். புதிய தாவனி பாவடையுடன் நன்றாக அலங்காரம் செய்து தங்கச்சங்கிலி, தங்கவளையல், இடுப்பில் ஒட்டியாணம், கண்களில் மை, நெற்றியில் பெரிய சிவப்பு நிற பொட்டு என கார்மேகம் அழகின் மொத்த உருவமாக நீராட்டு விழா அன்று இருந்தால். அந்த நாள் முதல் தான் கார்மேகம் புவியரசின் கண்களுக்கு அழகாக தெரிய ஆரம்பித்தாள்.
நாகராஜனுக்கு கார்மேகத்தை கட்டிவைக்கவில்லை என்பதை அறிந்த புவியரசின் தந்தை, தன் மகனுக்கு கேட்கலாம் என நினைத்தார். புவியரசின் தங்கைக்கு இன்னும் திருமண வயது வருவதற்கு நிறைய வருடம் இருந்தால், புவியரசுக்கும் பத்தொன்பது வயது ஆகிவிட்டதால் முதலில் அவனுக்கு முடிக்கலாம் என நினைத்தார்.

       அத்தியாயம்: நான்கு

‘தனக்கான உணவு தீரும்போது ஒரு உயிரானது, உணவில்லாமல் அதே இடத்தில் மடிய வேண்டும் அல்லது உணவு தேடி வேறு இடத்துக்கு செல்லவேண்டும். எங்கு உணவு கிடைக்கும் ? என்ன உணவு கிடைக்கும் ? என்பதே வாழ்க்கையின் புதிர். உணவு கிடைக்காமலும் போகலாம்.’

      இரண்டு வருடங்கள் கழித்து இருவருக்கும் ஓர் அழகான பெண் குழந்தை பிறந்தாள். இளவரசி என்று பெயரிட்டனர். குழந்தை பிறந்த பிறகு கார்மேகத்தால் வேலைக்கு செல்ல இயலவில்லை. கர்ப்பம் ஆகும் முன்பு வரையில் அவளும் அவள் கணவனும் புவியரசின் தங்கையும் ஒன்றாகவே வேலைக்கு செல்வார்கள். புவியரசு மட்டும் வேலைக்கு செல்வதால் வருமானம் குறைவு. 
       சில மாதங்கள் கடந்த பிறகு அவர்கள் பூர்வீகத்தில் இருந்து வந்த சிலரால் ஒரு நற்செய்தி கிடைத்தது. கார்மேகத்தின் குடும்பத்திற்கு மட்டுமல்ல அவர்களின் சமூகத்தினர் அனைவருக்குமே. தங்கள் சொந்த ஊருக்கு அருகில் சில மைல் தொலைவில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்திருந்த ஒரு நகரம் நெசவு தொழிலில் விரிவடைந்து வருவதாக வந்தவர்கள் கூற கேள்விபட்டார்கள். புதுவிதமான இயந்திரங்களைக் கொண்ட சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அமைய ஆரம்பித்துள்ளதாகவும், ஆகையால் கட்டுமான பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறினார்கள். சொந்த பந்தங்கள் சிலரும் குடியேரியிருப்பதாக தெரிய வந்தது. கார்மேகம் இதை நல்ல வாய்ப்பாக நினைத்தாள். ஏனெனில், சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை கிடைத்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு வருமானம் குறைவே. சுரங்கங்களிலும் பெரிய இயந்திரங்கள் வேலைகளை சுலபமாக்கியதால் ஆட்கள் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் நிறைய மக்கள்கூட்டம் வேலை தேடி இடம் பெயர்ந்தனர். 
       
      அவர்கள் சமூகத்தினரில் அக்காலத்திலேயே தொழிற்முறை கல்வி பெற்றவர்களுக்கும் பட்டதாரிகள் சில பேருக்கு மட்டுமே தொழிற்சாலையிலும் அலுவலக பணிகளிலும் வேலை கிடைத்தது. அவர்கள் மட்டும் தான் அந்த ஊரில் மீதம் இருந்தனர். மற்ற அனைவரும் வெளியேறி பிழைக்கும் ஊரை நோக்கி புறப்பட்டார்கள். 

        அத்தியாயம்: ஐந்து

‘தாய் பறவைக்கு தன் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற தேவையை விட தன் குஞ்சுகளைக் காக்கவேண்டும் என்ற தேவையே மேலோங்கி இருக்கும்.’

       இருவரும் தன் குடும்பத்தாருடனும் சொந்தங்களுடனும் சென்று அந்த நகரத்தில் குடியேறினார்கள். தன் சொந்தக்காரர் ஒருவரால் அறிமுகப்படுத்தபட்டு ஒரு மேஸ்திரியிடம் வேலைக்கு சேர்ந்தான் புவியரசு. அன்று முதல் அவன் ஓய்வின்றி உழைத்தான். வேலையாட்களை வைத்து எப்படி வேலை வாங்குவது என்று கற்றுக்கொண்டு நான்கே வருடங்களில் தனியாக வேலை எடுத்து செய்யும் அளவிற்கு உயர்ந்தான். திறமையாக கையாள தெரிந்திருந்ததாலும் கற்றுக்கொடுத்தவருக்கு விசுவாசமாக இருந்ததாலும் தனக்கு வரும் பணிகள் பலவற்றை புவியரசுக்கு கைமாற்றிவிட்டர் அவன் முதலாளி. இதனால் நிறைய இடங்களில் கட்டட பணிகளை எடுத்து செய்தான் புவியரசு.
        மேஸ்திரியான மூன்றே வருடங்களில், அவன் தந்தையின் வீட்டிற்க்கு நான்கு தெரு தள்ளி சில ஓட்டு வீடுகளும் கூறை வீடுகளும் இருந்த அந்த தெருவில் இடம் வாங்கி சொந்தமாக ஓட்டு வீடு கட்டினான். அந்த அளவிற்கான முன்னேற்றத்துக்கு பக்க பலமாக இருந்தது கார்மேகம் தான். நகரத்துக்கு வந்த முதல் ஏழு ஆண்டுகளில் அவள் குடும்பத்தை நிர்வகித்த முறையே அதற்கு காரணம். மேலும் அவர்களுக்கு இரண்டாவதாக ஒரு மகளும் மூன்றாவதாக ஒரு மகனும் பிறந்தனர். மகளுக்கு நங்கை என்றும் மகனுக்கு முருகன் என்றும் பெயர் சூட்டினார்கள். இரண்டாவது மகள் கார்மேகத்தின் வயிற்றில் இருந்த போது தான் புவியரசு தன் தந்தையை இழந்தான். இழப்பிற்க்கு பின் முழு குடும்பத்தையும் வழி நடத்திச் சென்றான். 
        இருவரும் இயல்பான தம்பதிகளாக பேசி சிரிக்க கூட அந்த ஏழு ஆண்டுகளில் நேரம் கிடைத்ததில்லை. எப்பொதும் வேலை சுமையுடனே இருப்பான். மதிய உணவிற்க்கு புவியரசு வர தாமதமாகிவிட்டால், தன் மதிய தூக்கத்தை விட்டுக்கொடுத்து அவனுக்காக காத்திருப்பாள். விடியக்காலையில் இருந்து மதியம் உணவு உண்ணும் வரையில் வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் கார்மேகமும் புவியரசின் தங்கையும் பகிர்ந்து செய்வார்கள். அவன் உணவு உண்ண வீட்டுக்கு வரும் அந்த ஒரு மணி நேரம் தான் இருவரும் தனியாக பார்த்து பேசிக்கொள்ள கிடைத்த அரிய நேரமாக கார்மேகம் நினைத்தாள். அந்த ஒரு மணி நேரம் நிறைய கள்ளச் சிரிப்புகளும் மௌனங்களும் செல்ல சீண்டல்களும் இருக்கும். தினமும், அவளின் சிரிப்பு என்றும் போல அப்படியே, அழகாக இருக்கிறது என்று கூற தவறமாட்டான். இருவருக்கும் மகிழ்ச்சியளித்ததே இருவரும் சேர்ந்திருந்த தருணங்கள் தான். அதை அவர்கள் என்றுமே தவறவிட்டதில்லை.
        சொந்த வீடு என்ற ஒன்று வரும் வரையில் தங்களுக்கென ஏதும் செய்துகொள்ளாமல் ஏழ்மையிலேயே இருந்தார்கள். கார்மேகம் அவளின் புடவை கிழியும் வரையில் வேறு புடவை வாங்கியதே இல்லை. குழந்தைகள் மற்றும் புவியரசின் ஆடைகள் கிழிந்துவிட கூடாது என்பதற்காக ரொம்பவும் அடித்து துவைக்காமலும் உச்சி வெயிலில் ஆடைகளை காயபோடாமலும் அவற்றின் ஆயுளை அதிகப்படுத்தினாள்.
        புவியரசு எத்தனையோ நாட்கள் உணவில்லாமல், இருக்கும் சிறிதளவு உணவை வீட்டில் இருப்பவர்களாவது வயிற நிறைய சாப்பிடட்டும் என வெறும் வயிறுடன் காலையில் வேலைக்கு சென்றிருக்கிறான். எத்தனையோ இரவுகள், வேலையிலிருந்து களைப்புடன் வரும் அவனும் குழந்தைகளும் சாப்பிடட்டும் என கார்மேகம் தன் உணவை தியாகம் செய்திருக்கிறாள். அப்படி இருவரும் தியாகம் செய்த உணவுகளை உண்டு தான் அவர்களின் குழந்தைகள் வளர்ந்தனர்.
        சொந்த வீடு வருவதற்கு முன், அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி நெசவு தொழில் செய்துகொண்டிருந்த, அந்த தெருவின் வசதியான ஒருவரின் வீட்டில் கார்மேகம் தினமும் மாலை ரேடியோவில் பாட்டு கேட்கபதை வழக்கமாக கொண்டிருப்பாள். ஆனால், அந்த வீட்டு எஜமானிக்கு கார்மேகத்தை பிடிக்காது. காரணம், அவளின் நிறம் மற்றும் அவள் வேறு சமூகத்தை சேர்ந்தவள். கார்மேகத்தை போன்று மற்ற, அந்த வீட்டு அம்மாவுக்கு பிடிக்காத பெண்கள், வீட்டிற்கு வெளியே அமர்ந்து தான் பாடல் கேட்பார்கள். சிறுவயதில் வாரம்தோறும் தவறாமல் சினிமாவுக்கு சென்ற அவள், புதிய நகரத்துக்கு வந்த முதல் ஏழு வருடங்கள் ஒரு படத்துக்கு கூட செல்லவில்லை. அக்காலங்களில் மக்களுக்கு வார இறுதியில் பொழுதுபோக்கு என்பது மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு செல்வது தான். அவர்கள் பார்த்த சினிமாவை பற்றி தங்கள் கருத்துகள், அதில் நடித்த கதாபாத்திரங்களை வியந்தும் புகழ்ந்தும் திட்டியும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். ‘அன்று அம்மக்கள் மனதில் இருந்து கொட்டிய எண்ணங்களை தான் இன்று பலரும் அவர்களின் தொழிலாக யூ-ட்யூபில் செய்கிறார்கள். வித்தியாசம் என்னவென்றால், எளிய மக்கள் என்றுமே தங்கள் மனதிற்கு பிடித்தவற்றை அறிவுப்பூர்வமாக அணுகமாட்டார்கள்.’ அந்த வாய்ப்பும் கார்மேகத்துக்கு கிடைத்ததில்லை. சினிமா படங்களின் கதைகளை அக்கம்பக்கத்தினர் கூற கேட்டு கொள்ளுவாள். அவளின் பொழுதுபோக்கு மாலை ரேடியோவில் பாட்டு கேட்பதும் இரவு உணவு முடிந்து பக்கத்து வீட்டாருடன் அரட்டை அடிப்பதும் தான். அதுவும், அவள் மாமியார் வீட்டிற்கு வெளியே இருக்கிறார் என்று தெரிந்தால் வீட்டுக்குள்ளேயே இருந்துவிடுவாள்.  
          சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்த கார்மேகத்திற்கு, சொந்த வீடு வரும் வரையில் கலந்து கொள்ள துணிவு வந்ததில்லை. காரணம், பட்டு புடவைகளும் தங்க நகைகளும் இல்லாததே. வெளிப்புற தோற்றத்திற்கும் பொருளாதார நிலையை வைத்துமே மதிப்பு தரப்படும் என அவள் சென்ற முதல் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் தெரிந்து கொண்டதால் அவற்றை சில வருடங்களுக்கு தவிர்த்து வந்தாள். பிறர் மதிப்பு கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி, அவற்றை பூர்த்தி செய்வதற்க்காக அவள் என்றுமே புவியரசிடம் எதுவும் கேட்டதில்லை. குடும்ப நிலையையும் அதற்காக அவன் சிரமப்பட்டு உழைத்ததையும் புரிந்து கொண்ட அவள், என்றாவது ஒரு நாள் அந்நிலை மாறும் என நம்பினாள். இரவு உணவுக்கு பின் புவியரசிடம் தன் கசப்பான தருணங்களை எல்லாம் கார்மேகம் கூறி வருத்தப்படுவாள். நிறைய இரவுகள் உறங்குவதற்கு முன் அவனிடம் அழுது புலம்புவதுமுண்டு. அதுபோலவே அவர்களுக்கென சொந்த வீடு அமைந்ததும் நிலைமை மாறியது.
           சொந்த வீட்டிற்கு சென்ற பிறகு புவியரசு எதிர்பார்த்த போலவே ஒன்று நடந்தது. இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தான். முருகன் என்று பெயரிட்டனர். கார்மேகம் கர்ப்பமாக இருந்தது தெரிந்ததுமே புவியரசு அவளுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுக்க வேண்டும் என நினைத்தான். எது கிடைக்காமல் அவள் ஏங்கினாலோ அதை தர எண்ணி, முதலில் அவளுக்கு ஒரு ரேடியோ பெட்டி வாங்கி கொடுத்தான். கார்மேகம் அடைந்து மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் எதிர்பார்த்ததை, அவள் எதிர்பார்க்காத நேரம் புவியரசு பரிளித்தான். பாட்டு கேட்பதற்காக அவள் சென்ற வீட்டில், அவளுக்கு ஏற்பட்ட கசப்பான நினைவுகள் அனைத்தும் அன்று பறந்து போனது. அந்த ரேடியோவில் அவள் கேட்ட முதல் பாடல் டி. ராஜேந்தரின் படத்தில் இடம்பெற்ற பாடல். அதிலிருந்து எப்பொது டி. ராஜேந்தரின் பாடல் ஒலித்தாலும் ரேடியோ பெற்ற அன்று அவளுக்கு ஏற்பட்ட ஆனந்தமான தருணமே நியாபகம் வரும். தினமும் ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்வாள். அக்கம்பக்கத்தார் அனைவரும் கார்மேகத்தின் வீட்டுக்கு பாட்டு கேட்க வர ஆரம்பித்தார்கள். தெருவே கூடி அவள் வீட்டில் இருக்கும். யாரும் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வந்து செல்லுமளவிற்கு அனைவரையும் பாவித்தாள் கார்மேகம். அவர்கள் என்றுமே கார்மேகத்தை உரிமையாக அவர்களின் கார்மேகமாகவே நினைத்தார்கள்.

          அத்தியாயம்: ஆறு

‘உன்னை எது அதிகம் பாதிக்கிற்தோ அந்த பாதிப்பையே நீ பிறருக்கும் ஏற்படுத்துகிறாய். அது நல்லனவாக இருந்ததாலும் சரி, தீயனவாக இருந்ததாலும் சரி.’

       வருடங்கள் ஓட, கார்மேகத்தின் வாழ்வில் நிறைய மாற்றங்கள். ஏழு வருடங்களுக்கு பிறகு இரு சம்பவங்கள் கார்மேகத்தை ஒரு படி மேலே கொண்டு சென்று அவளுக்கு மரியாதை சேர்த்தன. ஒன்று எம். ஜி. ஆர் அவர்கள் இறந்ததும், இன்னொன்று அவளின் ஓட்டு வீடு மாடி வீடாக மாறியதும். 
       டி. வி பெட்டியில் எம். ஜி. ஆர்-இன் இறுதி ஊர்வல காணொளிகளும், அவரது புரட்சிமிகு தத்துவ பாடல்களும், அவரின் ஆட்சிகாலத்தில் மக்களுக்கு அவர் செய்த நல்ல திட்டங்களும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டே இருந்தது. ஒரு மனிதனின் இறப்புக்கு இத்தனை பிரபலங்களும் தலைவர்களும் மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் அவர் எப்படி ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும் என எண்ணினாள். அவரை போல் தான் வாழவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது கார்மேகத்திற்கு. 
       நான்கு மாதங்களுக்கு பிறகு தன் புதுபிக்கப்பட்ட வீட்டிற்கு விழா எடுத்தபோது, எம். ஜி. ஆர்-இன் இறப்பின்போது அவள் மனதில் பதிந்த விஷயம் அன்று பிரதிபலித்தது. நாம் எதை வியந்து பார்க்கிரோமோ எதன் மீது அதிக மரியாதை வைக்கிரோமோ அதுவாகவே மாறுகிறோம். கார்மேகமும் அதன் பிறகு மாறினாள். தன் உடன்பிறந்த சகோதரன் வறுமையில் இருந்தான். அவனிடம் இருநூறு ரூபாயும் ஒரு தங்கச்சங்கிலியும் புத்தாடைகளும் கொடுத்து, விசேஷத்துக்கு வரும்போது அவற்றை அணிந்துகொண்டு வரவேண்டும் என்றும், இருநூறு ரூபாயை அன்பளிப்பாக தன் கணவரிடம் கொடுத்துவிடவும் கூறினாள். சுபநிகழ்ச்சிகளில் அவள் அணுபவித்த கஷ்டங்கள் தன் தம்பிக்கு நேரக்கூடாது என்றும், தன் தம்பியை யாரும் மரியாதை குறைந்த கண்ணுடன் பார்த்துவிட கூடாது என்பதிலும் கார்மேகம் கவனமாக இருந்தாள்.
      இந்த ஏழு வருடங்களில் கார்மேகத்தின் குடும்ப எண்ணிக்கை சற்று அதிகரித்து இருந்தது. நான்காவதாக தரணி என்ற மகளும் கடைகுட்டியாக செல்வம் என்ற மகனும் பிறந்தார்கள். இருவரும் பிறந்ததால் குடும்பத்துக்கு நல்லனவே நடந்தது என கார்மேகம் மற்றும் புவியரசு நம்பினார்கள். ஏனென்றால், குடும்பத்தின் சொத்து மதிப்பு நன்ராக உயர்ந்தது. டி. வி பெட்டி, ஸ்கூட்டர், வாடகைக்கு துணி குடோன் மற்றும் வீடு என ஏழே வருடத்தில் அவர்களுக்கு எல்லாம் சேர்ந்தது. இறுதியாக கடைக்குட்டி பிறந்த பிறகு தான் மாடி வீடு கட்டினார்கள். 
           வாரம் தோறும் வெள்ளி இரவு ஒலியும் ஒளியும் பார்க்க அனைவரும் கார்மேகத்தின் வீட்டுக்கு தான் செல்வார்கள். தெரு முனையில் அமைந்திருந்த வீடு, ஆதலால் எப்போதுமே கார்மேகத்தின் வீட்டிற்கு முன்னால் வெள்ளை துணி கட்டி மக்கள் அனைவரும் தெருக்களில் அமர்ந்துபடியே படம் பார்ப்பார்கள். எந்த படம் காட்டவேண்டும் என்பதற்கான வாக்குவாதமே இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் நடக்கும். குறிப்பாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு மேடை அமைப்பதும் கார்மேகத்தின் வீட்டிற்கு முன் தான். ஒலி மற்றும் ஒளிக்கு தேவையான மின்சாரமும் அவர்களின் வீட்டிலே இருந்து தான் எடுத்துக் கொள்ளப்படும். கார்மேகத்தின் வீட்டில் இருக்கும் அனைவரும் மொட்டை மாடியில் நின்ற படியே பார்ப்பார்கள். பின் வரிசையில் பார்க்க முடியாமல் சிரமப்படுபவர்களும் மாடிக்கு சென்றுவிடுவார்கள். அக்காலங்களில் மக்கள் கூடும் எந்த நிகழ்வாக இருந்ததாலும் ஆட்டம் பாட்டம் ஆரவாரம் தான். கொண்டாட்டம் என்பது மக்கள் ஒன்றாக சேர்ந்தபோது நிறையவே இருக்கும். வாழ்க்கையை கொண்டாடினார்கள் என்றே சொல்லவேண்டும்.

         அத்தியாயம்: ஏழு

‘நமது முடிவின் ஆரம்பம் எப்போது ஆரம்பித்தது என்று நமக்கே தெரியாது. வாழ்க்கையின் ஒரு சிறு நிகழ்வாக அது எப்போதோ ஆரம்பித்துவிட்டது. அம்முடிவு நம் முன் வந்து நிற்கும்போது தான், நாம் எங்கு சரிந்தோம் என்று தெரியவரும்.’

உலகம் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்தது. கார்மேகத்தின் குடும்பம் புவியரசு வேலைக்கு செல்லாமலே வீட்டிலிருந்து சாப்பிடும் அவளுக்கு சொத்துகளில் இருந்து வருமானம் ஈட்டியது. இருந்தும் புவியரசு வீட்டிலிருந்ததில்லை. தன் மகன் முருகன் முன் வந்து தனக்கு தொழில் கற்றுத் தருமாறு கேட்டதால் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். முருகன் கட்டட பொறியியலில் பட்டம் பெறவேண்டும் என்றே புவியரசு நினைத்தான். ஆனால், முருகனுக்கு விடுதியில் தங்கி படிப்பதில் உடன்பாடு இல்லை. அதனால் கல்லூரியில் சேர்ந்த ஆறு மாதங்களில் அடம்பிடித்து படிப்பிலிருந்து விலகிவிட்டான். என்றபோதும், தன் தந்தையின் அணுபவங்களை நன்றாக கற்றுக்கொண்டு கட்டட தொழிலில் தேர்ந்தான். வீட்டிற்கு செல்ல மகனான செல்வம் பத்தாவதும் தரணி பன்னிரண்டாவது முடித்து ஒரு வருடமாக ஆரம்பப்பள்ளியில் வேலை செய்தும் கொண்டிருந்தாள். கார்மேகமும் புவியரசும் பாட்டி தாத்தா என்ற புது அந்தஸ்த்தையும் பெற்றிருந்தார்கள். ஆம், இளவரசிக்கும் நங்கைக்கும் திருமணம் முடிந்து பல வருடங்கள் கடந்திருந்தது. இளவரசியை உள்ளூரிலும் நங்கையை வெளியூரிலும் கொடுக்கப்பட்டார்கள்.
ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு நங்கையின் இரண்டு மகன்களும் இரண்டு மாதம் கார்மேகத்தின் வீட்டில் தங்கிவிடுவார்கள். அதனால் இளவரசியின் இரண்டு மகன்களும் வந்துவிடுவார்கள். அந்த இருமாதம் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. தினமும் காலை தன் பெயரங்களை கடைக்கு அழைத்து சென்று பிஸ்கட்டும் மிட்டாயும் வாங்கி கொடுப்பாள். மதியம் ஆகிவிட்டால் குச்சி ஐசு, ஜவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய் என அவர்கள் எது கேட்டாலும் கிடைக்கும். சில நேரங்களில் கார்மேகத்துக்கு தெரியாமல் அவர்களே புவியரசு குடித்த காலி பாட்டில்களை படிக்கு அடியிலிருந்து எடுத்து ஐசுகாரரிடம் கொடுத்து பதிலுக்கு ஐசு வாங்கிக் கொள்வார்கள். கார்மேகத்தின் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்றே அனைவரும் நம்பினார்கள். அதற்கு காரணம், கார்மேகத்தின் அன்பும் அரவணைப்பும் தான். மே 31-ம் தேதி ஊருக்கு புறப்படும் போது இருமாதங்களாக சேமித்து வைத்த, சிந்துவதுற்கு தேவைப்படாத அத்தனை கண்ணீரையும் நங்கையும் இரு பெயரன்களும் சிந்திவிடுவார்கள். கார்மேகம் தன் வாரிசுகளுக்கு, அவர்களின் ஆனந்தத்தின் பிறப்பிடமாகவே விளங்கினாள்.
புவியரசின் முழு சொத்துக்களில் ஒரு சிறு அங்கம் பறிபோக ஆரம்பித்தது தன் மகள் தரணியின் கல்யானத்திற்கு பிறகு தான்.

     முடிவில்லா அத்தியாயம்

‘ஆண் சிங்கம் தன் குட்டிகளை பாதுகாத்து நிற்கும். அதுதான் அதன் கடமை. ஆனால் அந்த ஆண் சிங்கத்துக்கு தெரியாது, தன் குட்டிகள் என்றாவது ஒரு நாள் வளர்ந்து, அதை எதிர்த்து நின்று, குட்டிகளில் ஒன்று தலைமை இடத்தை பிடிக்கும் என்று.’

கொரோனா முடக்கத்தின் போது, ஒரு நாள் இரவு உணவிற்கு பிறகு, இளவரசியின் மகன் குமரனும் நங்கையின் மகன் ராஜாவும் இளவரசியின் வீட்டு வாசலில் அமர்ந்து உரையாடினர். அவர்களை சுற்றி தரணி இளவரசி ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.

ராஜா: ணா, ரெண்டு மாமாவும் சேந்து தாத்தாக்கு வருசாந்தரம் கும்புடுறாங்களா இல்ல தனியாவா ?

குமரன்: சேந்து தான் டா, இது என்ன கேள்வி நீ கேக்குற….

ராஜா: இல்ல ணா, சொத்த எல்லாரும் பிரிச்சுக்குடாங்கல அதனால கேட்டேன்…

குமரன்: தாத்தா வாழ்ந்த வீடு பெரிய மாமா பேருக்கு போயிடுச்சுல இப்ப, அதனால அங்க தான் சாமி கும்புடுவோம் எல்லாரும்….ரெண்டாவது வருசத்துல இருந்து தான் எப்புடினு தெரியல….பாரு, நம்ம பாட்டிக்கு இப்ப சேந்தா சாமி கும்புடுறாங்க ?? கீழ் வீட்டுல சின்ன மாமாவும் மேல் வீட்டுல பெரிய மாமாவும் தனி தனியா தான கும்புடுறாங்க……எல்லாம் உசுரோட இருக்க வரைக்கும் தான் டா…… வாயும் வயிறும் மட்டும் இல்ல டோய்……வளந்ததுக்கு அப்புறம் அதிகாரமும் வேற வேறயா போயிடும்….

ராஜா: இவுங்க ரெண்டு பேரும் பாட்டிக்கு தனியா சாமி கும்புட்டப்போ தாத்தா எங்க போவாரு ணா ?

குமரன்: தாத்தா வீட்டுக்கு வெளிய வாசல்ல உக்காந்திருப்பாரு….இவனுங்க என்ன என் பொண்டாட்டிக்கு சாமி கும்புட்டு படையல் வைக்குறது, அதுக்கு ஏன் நான் போகனும்னு அவரே சொல்லிருக்காரு….

ராஜா: ரெண்டு மாமாவும் ஏன் இப்புடி ஆனாங்க ?

குமரன்: எல்லாம் ரெண்டு மாமாவுக்கும் கல்யாணம் ஆன அப்புறம் தான்….பொறாம….பெரிய அத்தைக்கு சின்ன அத்தை மேலையும் சின்ன அத்தைக்கு பெரிய அத்தை மேலையும்….சின்ன அத்தை அழகா வடிவா இருக்கும்…அது தான் பெரிய அத்தைக்கு மொதோ பொறாம…கல்யாணம் ஆன புதுசுல சின்ன மாமாவும் அத்தையும் சினிமாக்கு ஜோடியா போறத பாத்துட்டு நெறய நாள் பெரிய அத்தை மாமா கிட்ட சண்ட போட்டுருக்கு….அதும் இல்லாம நம்ம சின்ன அத்தை தலகணம் புடிச்சது வேற… பெரிய அத்தை கோவப்படுற மாதிரியே நடந்துக்கும் வேணும்னே…கொஞ்சம் கூட ஒற்றுமையா இருக்கனும்னு அக்கறஒயே இல்ல….பாட்டி மட்டும் இருந்துருந்தா இவுளுக இப்புடி ஆடி இருப்பாளுகலா ?? சின்ன மாமாவோட கெட்ட நேரம்….அவருக்கு கல்யாணம் ஆகுரதுக்கு முன்னாடியே பாட்டி போயிருச்சு….இருந்துருந்தா கண்டிப்பா சின்ன அத்தை வீட்டுக்கு வேணாம்னு தான் பாட்டி சொல்லிருக்கும்….

ராஜா: அப்ப அத்தைங்கனாலயா மாமா பிரிஞ்சாங்க ??

குமரன்: அதுனால மட்டும் இல்ல டா…அத்தைங்க சண்டனால நாலு பேருக்கும் ஒவ்வொருத்தரு மேலயும் மனகசப்பு வந்துருச்சு….அதுவே மாமா ரெண்டு பேருக்கு நடுல விரிசல உண்டாக்குச்சு….பெரிய மாமாக்கு உண்மையான கோவமே சின்ன மாம தொழில் ஆரம்பிச்சு கடன் பன்னுனது தான்…கடன் வாங்குனத வீட்ல யார்கிட்டயும் சொல்லல….தொழில் தோத்து பொனதுக்கு அப்புறம் கடன் குடுத்தவன் வீட்ல வந்து நின்னான்…அப்பதான் எல்லாருக்கும் தெரிஞ்சது….அந்த கடன அடைக்கதான் தாத்தா அவரோட சொத்துல ஒரு பங்க வித்துடாரு….இப்புடி சொத்து பரிபோனதும், தாத்தா அதுக்கு சின்ன மாமா மேல கொவபடாம போனதும் தான் பெரிய மாமாக்கு கோவம்….

ராஜா: தாத்தா எதுமே கேக்கலயா ??

குமரன்: ஆமா டா, சின்ன வயசுல இருந்தே எதும் கேட்டதில்ல…சின்ன மாமா செல்லப் பையன்…பாட்டி இருந்துருந்தா கேட்டுருக்கும்……பாட்டி போனதுக்கு அப்பறம் தானடா எல்லாமே நடந்துச்சு….தாத்தாவும் பாட்டி போனதுல இருந்து தான் ரொம்ப தண்ணி போட ஆரம்பிச்சாரு….அப்பறம் குடும்பத்துக்குள்ள இவுங்க குடுத்த டார்ச்சர்ல இன்னும் அதிகம் ஆச்சு….அதுக்கு முடிவா நல்லா சுத்திட்டு இருந்தவரு பக்கவாதம் வந்து படுத்துட்டாரு….அதுலயும் ரெண்டு மாமாக்கும் போட்டி…ஆஸ்பிட்டல் செலவ நான் மட்டும் தான் பாக்கனுமா அவன் பாக்கமாட்டானானு……அதுனாலயே தாத்தா யாரும் அவருக்கு பாக்க வேணானு சொல்லிட்டு, அவருக்கு வர மாச வாடக பணத்துலயே பாத்துக்குடாரு……

ராஜா: பாட்டி இருந்துருந்தா தாத்தாவ நல்லா பாத்துருபாங்கள ணா ??

தரணி: பாட்டிக்கு ஒடம்பு சரி இல்லாம போனதே என் கல்யாணத்துக்கு அப்புறம் தான் டா…

ராஜா: அப்புடியா…ஏன் சித்தி ??

தரணி: எனக்கு ஒருத்தன் வந்தானே எல்லாம் அவன் பன்னுன அலும்பால தான்…தாத்தா ஒரு லாரி வாங்கலாம்னு யோசனையில இருந்தாரு…அதுவும் பாட்டி குடுத்த யோசனை தான்…உன் சித்தப்பா லாரி டிரைவர்….வெளிய லாரி ஓட்டி சம்பாரிக்குறதுக்கு நம்மலே ஒரு லாரி வாங்கலாம் அத மாப்ள பாத்துக்கட்டும், நம்மளும் மணல் லோடு சப்ளை பன்னி சம்பாதிச்ச மாதிரி இருக்கும் மாப்ளயும் பொண்ணும் நம்ம பக்கத்துலயே குடி வெச்ச மாதிரி இருக்கும்னு பாட்டி சொன்னுச்சு….ஆனா அதுக்கு அப்புறம் தான் காசு கறைய ஆரம்பிச்சது….

குமரன்: தாத்தாக்கு தெரியாம நெறைய மண்ணு லோடு எடுத்து விப்பான்….அந்த காச வெச்சு நல்லா குடிச்சுட்டு ஊர சுத்துவான்….தாத்தா ஒரு நாள் இத கண்டுபுடிச்சாலும் கேட்டுக்காம விட்டுடாரு….ஆனா பெரிய மாமா ஒரு நாள் பின்னாடியே போயி இன்னொனு கண்டு புடிச்சாரு…அந்த ஆளு லோடு ஏத்த போற எடத்துல பொம்பள சகவாசம் எல்லாம் வெச்சுருந்தான்….இது பாட்டிக்கு தெரிஞ்சதும் பெரிய சண்ட நடந்துச்சு….ஆனா அந்த ஆளு சமாளிச்சுட்டான்….யாரும் அத நம்பல….அதுக்கு அப்புறம் அவன் சும்மா இல்லாம அதே தப்பு பன்னுனான்…எப்ப தண்ணி போட்டாலும் போயி சித்திகிட்ட சண்ட போடுவான்….தாத்தா பாட்டி பெரிய மாமா பேர சொல்லி தான் அடிப்பான்….செல்லமா வளத்த பொண்ணு வாழ்க்கை இப்புடி போச்சுனு தெரிஞ்சா யாருக்கு தான் வருத்தம் இருக்காது….அந்த வருத்ததுல ஒடம்பு சரி இல்லாம போச்சு பாட்டிக்கு……

தரணி: ஒரு நாள் நான் பாட்டி வீட்டுல உக்காந்து பேசிட்டு இருந்தே…நல்லா தண்ணி போட்டு வந்தான்….இங்க வந்து எல்லாரு முன்னாடியு என் மானத்த வாங்காதனு சொன்னே….அதுக்கு ஓடி வந்து என்ன புடிச்சு ரோட்டுக்கு இலுத்துட்டு போயி அடிச்சான்…தடுக்க வந்த பாட்டியயும் தள்ளி விட்டுடான்…செவுத்துல பாட்டியோட தல மோதி மயக்கம் போட்டுருச்சு….அப்புறம் சுத்தி நின்னு வேடிக்க பாத்தவங்க தான் சண்டய தடுத்து பாட்டியயும் ஆஸ்பத்திரிக்கு குடிட்டு போனாங்க….பாட்டியோட குடும்ப மானம் ரோட்டுக்கு வந்ததே அன்னிக்கு தான்…தலைல ரெண்டு எடத்துல ரத்தம் ஒரஞ்சுக்கு….மாத்திரையில சரி பன்னிரலாம்னு சொன்னாங்க……ஆனா எதுமே பலன் குடுக்கல….ஆஸ்பத்திரில சேத்த ஒரு வாரத்துலயே பாட்டி போயிருச்சு….

குமரன்: எத்தனை பேரு கண்ணீர் விட்டு அழுதாங்க தெரியுமா பாட்டிய வீட்டுக்கு கொண்டு வந்தப்ப….அவ்வளோ கூட்டம்…அந்த அவளுக்கு அது எல்லாரு கிட்டயும் அன்பா பழகும்….

தரணி: பாட்டி எப்புடி ஊர் கூடி வேடிக்க பாத்த அன்னிக்கு ஆஸ்பத்திரில படுத்துச்சோ…அதே மாதிரி தான் ஊர் கூடி வேடிக்க பாக்குற அவளுக்கு சின்ன மாமா அத்தையும் சண்ட போட்டதால ரொம்ப கோவம் தலைக்கு ஏரிருச்சு தாத்தாக்கு…

ராஜா: அன்னிக்கு சரியா என்னதான் நடந்துச்சு ??

தரணி: சின்ன அத்தைக்கு மாமா மேல சந்தேகம்……அதுக்கு இயல்பாவே சந்தேக புத்தி அதிகம்….பெரிய அத்தை சின்ன மாமாவ மயக்க பாக்குது சின்ன மாமாவும் அதுக்கிட்ட பேசுறாருனு…எப்போ பாத்தாலும் சண்ட போடும்…அன்னிக்கும் இதே சண்ட தான் காலைல இருந்து…கை கலப்பு வேற…இத எல்லாம் வீட்டுக்கு வெளிய உக்காந்து தாத்தா கேட்டுட்டு இருந்தாரு…அவுங்க பெசுன பேச்ச காது குடுத்து கேக்க முடியாத அவளுக்கு கேவலமா இருந்துச்சுனு எங்கிட்ட தான் சொன்னாரு…அவர சமாதானம் பன்னிட்டு வீட்டுக்கு கெளம்புனென்…அதுக்கு அப்புறம் தான் தண்ணி பொட மறுபடியும் போயிருக்காரு….

குமரன்: இதுல என்ன நம்ம குடும்பத்துக்கு கேவலம் தெரியுமா ?? தெருவுல இருந்த எல்லாருக்கும் தெரியும் இவுங்க சண்டனால தான் அவுரு மனசு ஒடஞ்சு எறந்துருக்காருனு…அவுரு போயி சேந்ததுக்கு அப்புறம் நம்ம தெரு ஆளுங்க யாரும் நம்ம கிட்ட சரியா பேசுறது இல்ல…கார்மேகம் சேத்து வெச்ச மதிப்பு மரியாதை எல்லாம் அது பெத்த புள்ளைங்கனாலயும் வீட்டுக்கு வந்த மருமகளுங்கனாலயே கப்பல் ஏரிடுச்சு….இன்னிக்கு எல்லாருமே சொத்த பிரிச்சுட்டு தனி போய்டுச்சுங்க….ஆனா சொத்து சேத்து வெச்சவங்களோட மானத்தயே பொதச்சுட்டாங்க….நாளைக்கு அவுங்களும் இதயே அணுபவிக்குறப்ப தான் எல்லாம் புரியும்….

இளவரசியும் தரணியும் அழுதுகொண்டே எழுந்து சென்றார்கள்……

குமரன்: டேய் ராஜா, நம்ம புவியரசு தாத்தா அவுரு எறந்து நமக்கு பாடம் கத்து குடுத்துட்டு போயிருக்காரு…. பொண்டாட்டி இல்லனா நம்ம பாத்துக்க யாருமே இல்லனு புரிஞ்சுக்கனும்… பெத்த புள்ளைங்க கூட நம்ம கண்டுக்க மாட்டாங்க….

‘அன்பும் பாசமும் சொத்தும் சொந்தமும் பணமும் அதிகாரமும் தேய்பிறை போல, நாட்கள் செல்ல செல்ல குறைந்துகொண்டே தான் போகும்.’