Community

புதிய துவக்கம்

தினமும் காலையில 6 மணிக்கு எழுந்திரிக்க நெனச்சு, 8 மணிக்கு எழுந்திரிச்சு அவசரமா வேலைக்கு ஓடுற சராசரி வாழ்க்கை. ஆனால் அன்னைக்கு மட்டும் விதிவிலக்கு. எழுந்திருக்கவே இல்லை, ஏனென்றால் தூங்கவே இல்லை. எண்ணங்கள் தூங்க விடாமல் இளுத்த இளுப்புக்கெல்லாம் என்ன கொண்டு சென்றது. அத பயம்தான் என்று அந்த எண்ணத்தை கொள்ளவும் முடியல, எதிர்பார்ப்புதானு தள்ளவும் முடியல. எதையும் சமாளிக்கலாம் என்று நினைக்கும் என் மனம், அப்போது கடவுள் துணையும் ராசி பலன்கள் துணையும் தேடியது.

அது காதலின் துடிப்போ வேளை நேர்காணலோ அல்ல. என்னோட அம்மா அப்பாவோட ஆசைய நிறைவேற்ற எனக்கு கிடச்சிருக்குற முக்கியமான வாய்ப்பு. நடுத்தர குடும்பத்தில் வெகுவாக நிலவும் மோகம்தான். என் மகன் வெளி நாட்டில் வேளை செய்கிறான் என்ற பெருமிதம் கொள்ள ஆசை.

ஆமாம், இன்று மாலை விமானத்தில் வேளை பார்க்க வெளிநாடு செல்லபோகும் கூட்டத்தில் ஒருவன். அவர்களின் ஆசைக்காக சென்றாலும், இவர்களோடு இல்லாத நாட்கள் வேண்டாம் என்ற எண்ணம். அவர்கள் மகிழ்ச்சியை நேரில் பகிர முடியாத நிலை. ஊர் குருவி இப்பொழுது பருந்தாக நடிக்க வேண்டிய கட்டாயம். மறுக்க மனமில்லாமல் மருகினேன் இரவு முழுதும்.

தோழியிடம் காதலை சொன்னால், இருக்கும் தோழமையும் தொலைந்து விடுமோ என்று பயப்படும், அதே நேரத்தில் இதற்கு பதிலாக வலிகள் தினம் சுமக்க விரும்பும் இதயம். மற்றும், தான் நேசிக்கும் உயிருக்கு ஆம் என்ற பதிலை மட்டுமே தர ஆசைபடுபவன். ஆனால், அப்படி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறும்போது நடிக்கிறேன். இப்பொழுது அந்த நடிப்பு திறன் மீது கொண்ட நம்பிக்கையை வைத்தே வேறொரு மேடைக்கு செல்ல ஆயத்த படுதிக்கொள்கிறேன், என்னை.

ஒரு வழியாக பொழுது விடிந்தது. என்னை வழியனுப்ப உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஒவ்வொருவரிடமும் பல பரிமாணங்களில் கதைகள் இருந்தன, அனைத்தும் நீ அங்கு சென்றுவிட்டால் நீ நீயாக இருக்க மாட்டாய் எங்களை மறந்து விடுவாய் என்று கூறியது. ஆமாம் என்று சிரித்தேன், இங்கே நானாக இதுவரை இருந்ததில்லை என்று நினைத்து.

பெற்றோருடன் விமான நிலையம் வந்தடைந்தேன். குறைவான தூரம் என்றாலும், வழி எல்லாம் புகைப்படங்கள் போல கண்களில் நின்றது. ஒவ்வொரு நொடியும் நேரம் நின்று நின்று நகர்ந்ததாய் தெரிந்தது. செல்ல போகிறோம் என்ற எண்ணம் உள்ளத்தில் சுமையாய் இருக்க, அதன் மேல் ஏறி அமர்ந்தது சென்றுவா என்று பொழிந்த பாச வார்த்தைகள். ஒருவருடைய அன்பு கூட ஆழமாக தாக்கும் அவரிடம் இருந்து விடை பெரும் வேளை என்றால், என தத்துவங்கள் மனதில் ஓட ஆரம்பித்தது. நீங்கள் பத்திரமாக வீடு செல்லுங்கள், நான் சென்றடைந்ததும் தொலைபேசியில் அழைக்கிறேன் என்று கூறி அவர்களை முதலில் அனுப்பி வைத்தேன், கண்களின் கட்டுப்பாட்டில் கண்ணீர் துளிகள் இருக்கும்போதே.

உள்ளே சென்றதும், காத்திருப்பு அறைக்கு வந்துவிட்டோம் இனியும் யோசிக்க கூடாது, சென்று முடிந்த வரை இந்த மகிழ்ச்சியை கொடுத்துவிட்டு மீண்டும் நாடு திரும்புவோம் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். அப்போது ஒரு அவசர செய்தி ஒலித்தது, விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று. சட்டென்று அமைதியாக இருந்த அறிவு விழித்தது. கடவுளிடம் வேண்டியது வீன் போகவில்லை. இந்த நேரத்தை உபயோகித்து ஏதாவது செய்து வீட்டிற்கு சென்று விடலாமா என யோசிக்க துவங்கினேன்.

அப்போது என் அருகில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார். “ஏன்பா விமானம் இரண்டு மணி நேரம் தாமதம்னு சொல்றாங்க. என்ன பிரச்சனை…?” என்று கேட்டார். தெரியவில்லை தாத்தா என்று சொன்னேன். “இந்த இள வயதில் தன்னை சுற்றி நடப்பதில் நாட்டம் இல்லாமல் இருக்கிறாயே, சீக்கிரம் போக வேண்டுமே, இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி கொண்டுறுக்கிராயா” என்று கேட்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று தட்டி கழித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தேன். அவர் என்னை கண்டு ஆர்வமாகிவிட்டார் போல, விடாமல் என்னை என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

தொடர் கேள்விகளால் பொறுக்க முடியாமல் நான் அவரை கேட்க ஆரம்பித்தேன். நீங்கள் யார், என்ன செய்றீங்க, எதற்காக பயணிக்கிறார்கள் என்று அனைத்தயும் கேட்டேன். அவரோ பொறுமையாக ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்னார். அவருடைய பதில்களில் ஒன்று புரிந்தது பல வருடங்களாக இந்தியா வரமுடியாமல் பணிபுரியும் அவர் பிள்ளையை பார்க்க போகிறார். அவரிடம் கேட்டேன், உங்கள் மகன் இங்கேயே இருந்திருந்தால் இந்தப் பிரட்சனை இல்லை அல்லவா என்று. அதற்கு அவர் கூறினார் “நான் இந்த நாட்டிற்குள் நிறைய ஊர்களுக்கு சென்றிருக்கிறேன் என் மகனுடன், எனக்கு உலகை ரசிக்க பிடிக்கும். என் மகனுக்கும் பிடிக்கும். அவன் வெளிநாட்டில் உள்ள ஊர்களை இப்பொழுது என்னை பார்க்க வைக்க போகின்றான். இதில் எது பிரச்சனை” என்றார்.

அவர் தன் வாழ்வை பார்த்த கோணம் அவரிடம் என் நிலையை விளக்க வைத்தது. அவரும் பொறுமையாக கேட்டார். நான் சொல்லி முடித்தவுடன் சரி உன் பிரச்சனை என்ன என்று கேட்டார். என்னை கேலி செய்யாதீர்கள், என் பிரச்சனை உங்களுக்கு புரியவில்லையா என்றேன். அவர் என்னிடம் எனக்கு புறிந்தை சொல்கிறேன் என்றார்.

நீ உன் பெற்றோருக்காக, பிடிக்கவில்லை என்றாலும் வெளிநாடு செல்கிறாய். பாரட்டுதலுக்கு உரிய செயல். சென்றால், அங்கு என்ன நிகழுமோ…? என்று யோசிக்கிறாய். அது இன்னும் நடக்காத நிகழ்வு. நீ நீயாக இல்லை என்கிறாய். ஆனால் எல்லா நேரங்களிலும் மற்றவரை புண்படுத்தாமல் இருக்குமாரு முடிவுகளை எடுப்பதில் நிலையாக இருந்திருக்கிறாய், என்றார். அவர் என்னிடம் “நீ நீயாக இருப்பதுதான் உன் பிரட்சனையா…?” என்று கேட்டார்.

என்னை முற்றிலும் புரட்டி போட்டது அந்த கேள்வி. நன்றி என்று மட்டும் கூறிவிட்டு அமைதியானேன். எனக்கு புரியாத அமைதியும் நிதானமும் கிடைத்தது. நான் நானாகவே இதுவரை இருந்துள்ளேன் என்ற எண்ணம் மனம் நிறைந்தது. நான் கேட்கக்கூடாது என்று இருந்த விமானம் புறப்பட தயாராக உள்ளது என்ற அறிவிப்பு என்னை வரவேற்றது போல தோன்றியது. நான் நானாக வாழ புதிய வீடு நோக்கி பயணத்தை துவங்கினேன்.

3 Likes

Kadhai Pol illai… Katturai Pol ulladhu… ezhuthu pizhai adhigam…

பிலைகளுக்கு மன்னிக்கவும்… maatrikolgiren