ஆதரவற்ற ஆகாயத்திற்குக் கூட
ஆதாயம் தர ஆதவன் இருக்கும் போது…
ஆயிரம் கோடி ஆசான்களோடு
அகிலத்தில் வாழும் நமக்கு
ஆதாயம் தர அம்மா அப்பா இருக்கிறார்கள்…
தன் சிசுவின் சுவாசம்
தன் மேனியை தழுவினால் போதும்… என்று
மரண வலியையும்
தன் மன வலிமையை கொண்டு வீழ்த்தியவள்
நம் தாய்…
தாய் கண்ட ஓர் ஆண்டு கால வலியை
ஒவ்வொரு ஆண்டும் நெஞ்சில் உறுதி கொண்டு புன்னகைத்தே வலியை
எதிர்கொள்ளும் புனித தலமே
நம் தந்தை…
தாய் ஊட்டிய குருதியாகிய பாலைக் கொண்டும்…
தந்தை தன் வாழ்நாள் முழுவதும் சிந்தும்
குருதியாகிய வியர்வை துளிகளைக் கொண்டும்…
நம் இதயம் துடிக்கிறது…
வாழ்வில் உன்னை -
போற்றுபவர்களைக் கண்டு மயங்காதே…
தூற்றுபவர்களைக் கண்டு துவளாதே…
ஊன்றுகோள் தேடாதே -
சொந்த கால்களின் வலிமை குறையும் வரை…
அரைஞாண் கயிறு அளவிற்கு இருக்கும் வாழ்க்கையில்
ஆத்திரம் கொள்ளாதே.
அன்புடன் ஆர்வத்தோடு வாழ் ஆனந்தமாய்…
ஒரு நாள் ஜனனம் போதாது…
நம் இலக்கை அடைய ஒவ்வொரு நாளும்
நாம் புது ஜென்மம் எடுக்க வேண்டும்…