அன்பு …
சகமனிதனின் மீதான
கருணையின் உச்சம், சொல்லில் அடங்காத காதல் , மனிதனின் இறுதிமூச்சு வரையிலுமான
தேடல் …
நிரம்பி வழியும்
அன்பில் திளைத்தே
கிடப்பதும்
சிலசமயங்களில்
சுகமான சுமையே
அன்புக்கு ஏங்கும் ஒரு ஒரு கணமும் சிலசமயங்களில் ரணமே
இவ்விரண்டின் அதீதத்தை
உணர்ந்தவர்களே
வாழ்வையும் உணர்ந்திருப்பார்கள்
பிறரின் துக்கம்
கண்டு, கருணை கொண்டிருப்பீர்கள்
முன்பின் அறியாத மனிதர்களுக்காக
கண்ணீர் சிந்தியிருப்பீர்கள்
அம்மாவின் அன்பை வாழ்நாள் முடியும்வரை கொண்டாடி கொண்டுத்தான் இருப்பீர்கள்
மனைவி/கணவன்
காதலன்/காதலி
தன்னில் சரிபாதியென
நான்தான் நீ , நீதான் நானென
ஒருவருக்கொருவரின்
ஆன்மா இடம் மாறும்
அளவுக்கு அன்பு
கொண்டிருப்பீர்கள்
பிறக்கப்போகும் மகளுக்கோ மகனுக்கோ வெளிப்படுத்த வேண்டிய அன்பை பல்லாயிரம் முறை ஒத்திகை
பார்த்திருப்பீர்கள்
இவற்றிற்கும் மேலாக,
அடிபட்டு கிடக்கும் ஒரு
சிறிய நாய்க்குட்டியின் மீதான பரிவும் அன்பில்தானே சேரும்
மிருகத்தனமாய் நடந்து கொள்ளாதே என்பது மனிதனால் கூறப்பட்ட
பைத்தியக்காரத்தனமான எடுத்துக்காட்டே ஆகும்
மிருகமும் அன்பு காட்டும்
பரிவு காட்டும் கருணையும் காட்டும்
இது இன்னதென்று பிரித்தறியக்கூடிய ஒரே ஒரு அறிவில் மட்டுமே வேறுபட்டு
நிற்கின்றோம் மிருகத்திடம்…
தகுதியற்ற இடத்தில் உன் அன்பை காட்டாதே என நான் படித்ததுண்டு
அதில் துளியளவும் உடன்பாடில்லை எனக்கு,
அன்பு தகுதியை கணக்கிட்டு வெளிப்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதே அன்பின் தலையாய சிறப்பு
உண்மையான அன்பு நீடூழி வாழும் என்பதில் சந்தேகமில்லை
ஏதொவொரு காரணங்களுக்காக
பிரிந்து செல்லும் உறவுகள் ,
பிற்காலத்தில் வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு வரும்போது ,
என் மேல் அன்பு குறைந்துவிட்டது , என்மேல் காட்டியது
உண்மை அன்பு இல்லை என குற்றம் சாட்டுவது ஆகச் சிறந்த முட்டாள்தனம்
அப்படியே என்றாலும் இது காலம் சார்ந்த சந்தர்ப்பவாதிகளுக்கு
மட்டும் பொருந்தும்
உண்மை அன்பு வெறுக்காது ,
விரக்தியின் விளிம்பில் நிற்கும் பொழுது, வேண்டாம் என்ற உறுதியான
முடிவுகளுக்கு பின் விலக்கி வைக்க
தேடும் ஒரு காரணமே வெறுப்பு
உண்மையான அன்பு கண்ணீர்
சிந்தி கொண்டு தான் இருக்கும் ,
ஆனால் வெளிப்படுத்தலின் அளவு பூஜ்ஜியமாக இருக்கும்
அதிகபட்ச எதிர்பார்ப்புகள்
அன்பின் அதீதங்களிலே
நிகழும் …
அதனை கடந்து செல்லும் அல்லது ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமே
வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்
பணத்தை கொண்டு நிரப்பிட
முடியாத ஒரே வெற்றிடம் அன்பு மட்டுமே!
மனதிற்கும் மூளைக்கும்
உள்ள தூரத்தினில்
இப்பிரபஞ்சம் வியக்கும் அளவு,
கண்ணீர் கடலென
பெருக்கெடுத்தாலும்
எதிர்பார்ப்புகள் இதயத்தை
குத்திக் கிழித்தாலும்
அதீத அன்பு இல்லையெனினும்
உங்களுக்குள் புதைந்திருக்கும்
சிறிதளவு அன்பையாவது
உடனிருப்பவர்களுக்கு
வெளிப்படுத்துங்கள் !
மனித பிறவியின்
பயனை அடையுங்கள்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
~ கீர்த்தனா சரவணன்