Community

இன்னைக்கு வேண்டாம் ப்ளீஸ்…

ஆடி மாதம் முடிந்த பின்னும் மிஞ்சி இருக்கும் காற்று வீசிக்கொண்டிருக்கும் மாலை நேரம்; குழந்தைகளின் விளையாட்டுச்சத்தமும், பறவைகளின் கொஞ்சும் குரல்களும் மட்டும் கேட்கின்ற சாயங்கால நேரம். இடம் – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. சென்னை ஐடி துறையின் கண்ணாடிச்சிறையின் கைதிகள் (ஊழியர்கள்) வசிக்கும் புறாக்கூண்டு.

பிரமாண்டமான கட்டடங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என மொத்தம் ஒன்பது டௌர்கள், பார்ப்பவர்கள் கண்களுக்கு இதுவே ஒரு ‘மினி’ ஊர் போல காட்சி அளித்து கொண்டிருக்கிறது. செக்யூரிட்டி புதின் என்ட்ரி புத்தகத்தில் பதிவு செய்த பின், வாகன தடத்தில் நுழைந்தது அந்த ஓலா கார். புதுமணப்பெண் அந்த காரில் இருந்து கீழே இறங்கி அந்த பிரமாண்ட குடியிருப்புகளை சுற்றி பார்த்தாள். அசந்து போனால் - ‘இப்படிப்பட்ட விஸ்வரூப படைப்பை நான் இதுவரை கண்டதே இல்லையே… நம்ப ஊரு வயக்காட்டை சுத்திருக்குற மலை போலல்ல இருக்கு’ என மனதிற்குள் திகைத்தாள். கட்டடத்தின் கோபுரங்கள் நீல வானத்தை தொடுவது போல இருந்தது. இது போல இருபது மாடி கட்டடங்களை இங்கிலீஷ் படம் ஒன்றில் பார்த்த ஞாபகம் அவளுக்கு வந்தது.

காரில் இருந்து இறங்கிய அவளது கணவன், தனது மனைவி வாய் பிளந்து நிற்பதை பார்த்து புருவத்தை உயர்த்தி புன்னகைத்தான். தானும் இதுபோல அல்லவா வியப்படைந்தேன் இந்த அபார்ட்மெண்ட்ஸை முதலில் பார்த்த பொது என நினைவு கூர்ந்தான்.

“எவ்வளவு பா ஆச்சு?” என அவன் கேட்க,

“ஐநூத்தி அறுபது ரூபா கொடுங்க சார்…” என பதில் வந்தது - ஓலா டிரைவர்.

அடுத்த ஷாக் புது மனப்பொண்ணுக்கு…

“என்னங்க இது சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருந்து இங்கே வர இவ்ளோ ஆகுதா…? ட்ரெயின் டிக்கெட் கூட இவ்ளோ விலை இல்லைங்கலே…” என எதார்த்தமாக கேட்டாள்.

“இங்க எல்லாமே அப்படிதான் கயல்…” என கூறி தனது மனைவியின் அப்பாவித்தனத்தை புறக்கணித்தான். ஓரக்கண்ணால் ரசித்தான்.

பணத்தை பெற்று கொண்ட டிரைவர், நன்றி கூறிவிட்டு காரை வெளியே செல்லும் வழியாக ஒட்டி சென்றான்.

“ஹாய் குமார்…!” தனது பெட்டியை தூக்கும் பொழுது, பின்னாடி இருந்து வந்தது அவனுடைய நண்பனின் குரல்.

“ஹாய் அரவிந்த்… எப்படி இருக்கே? ஏன் பா என் கல்யாணத்துக்கு வரல…? நீ வருவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்…”

“சாரி குமார், என்ன பா பண்றது… எனக்கு அமைஞ்ச மேனேஜர் அந்த மாதிரி… கிளையன்ட் ரொம்ப ஸ்ட்ரிக்ட்… வேலைய முடிச்சே ஆகணும்னு ஒரே பிரஷர்… ரெண்டு வாரமா டபுள் ஷிப்ட் ஒர்க் பண்ண வேண்டிதா போச்சு… அதனால தான் வர முடியல… இப்போ கொஞ்சம் ப்ரீ…” என பெருமூச்சு விட்ட படி அரவிந்த் அவனது ஐடி கம்பெனி அவலத்தைக்கொட்டித்தீர்த்தான்.

“ஏதாச்சும் கட்டுக்கதை சொல்லுங்க…” என புன்னகையுடன் அவனது நண்பனின் கதையை ஏற்க மறுத்தான் குமார்.

“ஹலோ வெல்கம் டு சென்னை…! என் பேரு அரவிந்த்… குமறவேலோட நெருங்கிய நண்பன்…” என தன்னை தானே அறிமுக படுத்தி கொண்டான் அரவிந்த்.

“வணக்கம்” எனக்கூறி கை கூப்பினாள் கயல்.

“இவ கயல்விழி… எங்க ஊரு தான்… ஒரு வகையில தூரத்து சொந்தம்… அம்மாக்கு ரொம்ப புடிச்சுது… சோ வெட்டிங் ஈஸ் டன்…!” என சுருக்கமாக மனைவியை அறிமுகம் செய்தான் குமார்.

“வெரி குட். நான் இங்கே ஏழாவது மாடியில தான் குடியிருக்கேன். ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க… ஓகே வா?” என அரவிந்த் கூறிவிட்டு விடை பெற்றான்.

சிறுது தொலைவு சென்றப்பிறகு “சிவ பூஜை நடுவுல கரடி மாதிரி நான் எதுக்கு…? லவ் போர்ட்ஸ் நீங்க சந்தோஷமா இருங்க பா…” என சத்தமாகக்கூறி புது மனத்தம்பதியரை வெட்கக்கடலில் தள்ளி தத்தளிக்க வைத்தான்.

“உனக்கும் ஒரு கல்யாணம் ஆகட்டும், நானும் இப்படி கிண்டல் பண்றேன்… இரு… இரு…” என குமார் பதில் அளித்தான்.

பச்சைப்பசேலென புல் வெளியில் பூத்துக்குலுங்கும் மலர்களைப்போல சிறுவர்களின் களங்கமில்லா சிரிப்புச்சத்தம் இருவரின் செவிகளுக்கும் இதம் அளித்தன. இன்னும் சில மாதங்களில் நமது வீட்டிலும் குழந்தைச்சத்தம் கேட்கும், தொட்டில் தாலாட்டு பாடலும், மழலை மொழியும் கேட்கும், பஞ்சிலங்கால்கள் தவழும், மகிழ்ச்சி பொங்கும் என்ற கனவுகளோடு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

லிப்ட்டில் ஏறி, ஐந்தாம் எண்னை அழுத்தினான் குமார்; அது நின்றதும், வறாண்டா வழியாக நடந்து, 503 ஆம் பிளாட்டை திறந்தான்.

“உள்ள வா. இது தான் நம்ப வீடு… இங்க தான் நான் தனியா மூணு வருஷமா இருக்குறேன்… எப்போ சொந்தமா வீடு வாங்க போறேன்னு தெரியல… சென்னைல வீடு விக்கிற விலைக்கு ரொம்ப கஷ்டம்ன்னு நினைக்குறேன்… இந்த வீட்டை நீ தான் இனிமே கவனிச்சிக்கணும்…” என உள்ளே நுழைந்த மனைவிடம் கூறினான்.

பெட்டி பையெல்லாம் வைத்த உடனே கதவை தாழ்ப்பாள் போட்டு, தனது மனைவியைக்கட்டி அணைத்தான்.

அவள் இடையில் கை வைத்து சேலையை மெல்ல விலக்கினான்.

“என்னங்க இது…? இப்பவே வா? காலம் நேரமில்லாம… சும்மா இருங்க…” என வெட்கத்துடன் கயல் அவன் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தாள்.

“இந்தக்கதை எல்லாம் என்கிட்ட ஆகாது மா… ஏற்கனவே கிட்டத்தட்ட அறுபத்தெட்டு மணி நேரம் நான் ‘அசைவம்’ சாப்பிடல… தெரியும்ல…? சொல்றத கேளு…” என பயங்கர ரொமான்டிக் மூடில் தான் மட்டும் ஈடுபடாமல், கயலையும் கட்டாயப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கினான்.

கூச்சத்தில் அவள் தலைக்குனிய, காம வெள்ளத்தில் அவன் மிதக்க, மேகங்கள் உரசுகையில் மின்னல்கள் மின்ன, இருவரின் ஆடைகளும் சுமை தாங்காமல் உடலை விட்டு விடுதலைப்பெற, முத்தங்களின் இன்னிசையில் காதல் பெறுக, பூங்காவில் உள்ள நீரூற்றில் வெள்ளம் பொங்கி எழுந்திட, வியர்வை குளியலோடு இளம் சிட்டுக்குருவிகளின் சங்கமம் நடந்தது.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு…

“இன்னைக்கு ‘அசைவம்’ செம்ம சூப்பர் டோய்…” என பெரு மகிழ்ச்சியோடு சொன்னான் குமார். வெட்கம் ஒன்று மட்டுமே பதிலாய் தந்தாள் கயல்விழி.

“கயல் குளிச்சிட்டு ரெடி ஆகு… போய் வீட்டுக்கு வேண்டிய சாமான் பாத்திரம் எல்லாம் வாங்கிட்டு வரலாம்… வீட்ல எதுவுமே இல்ல… நைட் ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டு வருவோம்…” குமாரின் குஷிக்கு அளவே இல்லை.

“எதுக்குங்க வீண் செலவு… நானே கட கடன்னு நல்ல டிபன் ஏதாவது பண்ணிட்றேனே…” என்றாள் கயல். சென்னையின் விலை வாசிப்பற்றி சில நிமிடங்களிலையே புரிந்து கொண்ட புத்திசாலி.

“ஒன்னும் பெருசா செலவாகாது… வா… போய் நெசமாவே அசைவம் சாப்ட்டு வருவோம்…!” என காமக்கனை வீசி கண்ணடித்தான் கணவன்.

வீட்டுக்கு தேவையான பொருட்களை அங்காடியில் வாங்கி முடித்த பின், உயர்தர உணவகத்தில் உண்டு மகிழ்ந்து, குமாரின் இரு சக்கர வாகனத்தில் கடற்கரைக்காற்றோடு உலா வந்து, உற்சாகத்துடன் வீடு திரும்பினார்கள் இருவரும்.

வீட்டைச்சுத்தப்படுத்தி விட்டு, கொண்டு வந்தப்பொருட்களை எவ்விடம் இருக்க வேண்டுமோ அவ்விடத்தில் வைத்து, அழகுப்பார்த்தனர் இருவரும்.

ஊருக்குத்தொலைபேசி மூலம் தகவல் சொல்லிவிட்டு அவர்களின் பெற்றோர்களின் ஆசி பெற்றனர். தொலைக்காட்சிப்பெட்டியில் வரும் இரவு நகைச்சுவை காட்சிகளையும், பாடல்களையும் ரசித்து, தனது சினிமாவின் விருப்பு வெறுப்புகளையும் பகிர்ந்து கொண்டனர்.

படுக்கைக்குப்போகும் போது மணி ஒன்று.

“ஒரே அசதி… இப்போ தான் நிம்மதியா இருக்கு… தூங்கலாம்…” என பெரு மூச்சு விட்ட படி கண் அசந்தாள் கயல்விழி.

“ஏய்… என்னடி தூங்க போற… வா ‘அசைவம்’ சாப்பிடலாம்…!”

“என்னது…? மறுபடியுமா…? சும்மா விளையாடாதீங்க… போய் படுத்து தூங்குங்க…” என கயல் அவளது கணவனின் கோரிக்கையை தமாசு என நினைத்தால், அங்கே காத்திருந்தது அவலமான துன்புறுத்தல்.

அவள் எத்தனை முறை வேண்டாம் என்றாலும் கேட்காமல் தனது ஆசைகளை மட்டும் நிறைவேற்ற முயன்றான் அவளது காதல் கணவன். இருவரின் ஆடைகள் இல்லாத போதும் ஆசை துளிரவில்லை அவளுக்கு. பிணம் போல ஆடாமல் அசையாமல் படுத்து கொண்டு இருந்தாள். தாலி கட்டிய கணவனே அவளை வற்புறுத்தி பலாத்காரம் செய்வது போல உணர்ந்தாள்.

அவளிடமிருந்து எந்த ஒரு அரவணைப்பும் உணர முடியாமல் இருந்த குமார், மேலும் அழுத்தத்தை தீவிரமாக கொடுத்தான். வக்கிரமான முறையில் அந்த பிஞ்சு மலரை கசக்கி சூரை ஆடினான். அவளை மிகவும் காயப்படுத்தினான். கட்டில் வேட்டைக்காடாக மாறியது. இளம் கன்று சிங்கத்தின் கோரத்தில் சிக்கியது போல துடித்தாள். நிறைவும் வந்தது, அவளை யாரோ உலக்கையால் ஓங்கி தாக்கியது போல ஒவ்வொரு முறையும் உணர்ந்தாள். விழிகளில் விழுந்தோடியது கண்ணீர் - வலியை தாக்கு பிடிக்க முடியாமல் தவித்தாள்.

தாகம் தணிந்ததும் அவனுடைய ஆடைகளை மட்டும் அவன் அணிந்து கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தான். கண் இமைகளின் சுமை எரிச்சல் ஊட்ட, உடம்பில் வலியோடும், மனதில் வேதனையோடும், தூங்க இயலாமல் பெண் அவள் தவித்தாள்.

‘நம்ப புருஷன் என் இப்படி பண்ணாரு… இதுக்கு முன்னாடி எல்லாம் இப்படி நடந்துக்க மாட்டாரே… ஒரு வேளை அவருக்கு என்ன புடிக்காம போகுதோ…? ஒண்ணுமே புரியலையே…’ இப்படி ஆயிரம் சிந்தனைகள் அவளது கற்பனைகளுடன் அலை மோதி, மன அமைதியை கரைத்தது.

மறுநாள்

நேற்றைய இரவு ஒன்றுமே நடக்காதது போல, குமார் விடிந்ததும் கயலிடம் அன்பாகவும், பணிவாகவும் பேசினான், இனிமையாகவும் பழகினான்.

ஒன்றுமே புரியாமல் குழப்பத்தில் திக்கி திணறினாள் கயல்விழி.

“நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடுவேண்… ஒரு ஏழு மணி போல வீட்ல இருப்பேன்… கதவைப்பூட்டி வெச்சிக்கோ… யாரு வந்தாலும் திறக்காதே…! நான் வந்தா மட்டும் பீப் ஹோல் வழியா பாத்து கதவை திறக்கணும்… மெட்ராஸ்ல கொஞ்சம் எப்பவுமே கவனமா இருக்கிறது நல்லது… புரியுதா?.. நான் ஆபீசுக்கு கெளம்புறேன்… பை…!!” எனக்கூறி சிரித்து கொண்டே விடை பெற்ற குமாரை குழப்பங்களுடன் வழி அனுப்பி வைத்துவிட்டு, பால்கணியிலுருந்து கையை ஆட்டி, தலை சொரிந்து நின்றாள்.

ஒரு வேளை சந்திரமுகி, அந்நியன் படத்துல வர்ர மாதிரி எதாவது ஸ்ப்ளிட் பெர்சோனாலிட்டி டிசார்டர் ஆக இருக்குமோ. பகலில் நல்ல கணவராகவும், இரவில் காட்டுமிராண்டியாகவும் மாறுகிறாரோ என்ற அளவிற்கும் யோசித்தாள் கயல் விழி. குழப்பங்கள் வளர்ந்ததே தவிர விடை எதுவும் கிடைக்கவில்லை.

ஒரு வாரம் இப்படியே சென்றது. காலையில் “உலகத்தின் சிறந்தக்கனவன்” பட்டம் வாங்கும் அளவிற்கு கயல்விழியை தாங்கு தாங்கு எனத்தாங்குவான். இரவு வந்தால் அவ்வளவுதான், காமவெறிக்கொண்டு அனைத்து சில்மிஷங்களையும் அவனது மனைவிக்குப்புடிக்குதோ இல்லையோ எனக்கொஞ்சங் கூட கவலைப்படாமல் அவனது சுகத்தை மட்டும் கருதி நிறைவேற்றி கொண்டிருந்தான். கயல்விழிக்கு தாம்பத்தியம் என்றாலே ஒரு பயமும் கூடவே ஒரு விதமான நடுக்கமும் ஏற்பட்டது… இன்பத்தை விட அதில் வலி தான் அதிகம் என்பது போல உணர ஆரம்பித்துவிட்டாள்.

எல்லாப்பெண்களுக்கும் வருகிற ‘அந்த’ மூன்று நாள் அவஸ்தை கயல்வழிக்கும் வந்தது. குமாரும் சானிடரி நாப்கின் வாங்கிக்கொடுத்து அவளை பூப்போல பார்த்துக்கொண்டான். அன்றிரவு எதுவும் நடக்காது என நம்பினாள் கயல்விழி. ஏமாற்றம் தான் மிஞ்சியது. குருதி கசிய கசிய அவன் அவள் மீது தனது ஆண்மையை வெளிப்படுத்தினான், சுய ஆனந்தமும் அடைந்தான். வழக்கம் போல மனம் உடைந்து விழி வெள்ளத்துடன் உறங்கினாள் கயல்.

பெற்றோரிடமும் சொல்ல முடியாத அவல நிலை. நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம் என்றால் கேலி கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற தயக்கம். ராத்திரி தொலைக்காட்சியில் வரும் ரகசிய டாக்டர்களிடம் பெயர் தெரிவிக்காமல் ஆலோசனை கேட்கலாமா வேண்டாமா என்கிற குமுறல் - அவதிப்பட்டாள்.

மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ், அழுகை என மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டன. ஒரு சனிக்கிழமை குமார் அசதியில் தூங்கி கொண்டிருக்க, பால் வாங்க வந்த கயல்விழி, வழியில் அரவிந்தை சந்தித்தாள்,

“என்னங்க கயல் மேடம்…? குட் மார்னிங்…! பால் வாங்கியாச்சா…? சாட்டர்டே என்ன ஸ்பெஷல் வீட்ல? குமாரை வர வர ஆளே பாக்க முடியல… ரெண்டு பெரும் ரொம்ப பிஸி போல…?!” என கிண்டலுடன் சிரித்தான்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க… சும்மா தான்…” என வாயில் புன்னைகையுடனும், உள்ளத்தில் நரக வேதனையுடனும் பதில் அளித்தாள் சைகோவின் மனைவி.

ஏதோ தவறாக நடந்துள்ளது என சந்தேகித்தான் அரவிந்த். முதல் நாள் பார்த்த உற்சாகம், பூரிப்பு இப்பொது அவள் கண்களில் மின்னவில்லை என்பது அவளின் கண்களின் கீழ் உள்ள கறுப்பு வளையம் காட்டி கொடுத்தது.

“எல்லாம் ஓகே தானே…? எதுவும் ப்ராப்லம் இல்லையே?” கேள்வியை தூண்டிலாய் போட்டு பார்த்தான்.

ஒரு வினாடி தீர்க்கமாக யோசித்தாள், ‘இவரிடம் எல்லாத்தையும் கூறினால். எதாவது விடை கொடுப்பார், இல்லையெனில் அவரைக்கூப்பிட்டு விசாரிப்பார்’ - என தோன்றியது கயலுக்கு.

“இல்லைங்க ஒன்னும் இல்ல… எல்லாம் நல்லாத்தான் போகுது…” என அவளது இதழ்கள் பொய் சொல்ல, இதயம் உள்ளே மௌனமாக அழுதது.

மேலும் மூன்று மாதங்கள் உருண்டோடின. அவனது செயல்களில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. சொல்லப்போனால் நாளுக்கு நாள் இன்னும் அவனது அராஜகங்கள் மோசமாகி கொண்டே தான் சென்றது. கயல்விழி எத்தனை முறை சொல்வழியாக புரியவைத்தாலும் அவனின் அவசர காம லீலைகள் நிறுத்திய பாடில்லை. அவளை படுக்கையில் அடிக்கவும் ஆரம்பித்தான் - பிரம்பு, பெல்ட், ஊசி, போன்றவற்றை பயன்படுத்தி காதல் மோகத்தின் அழகை இழிவுப்படுத்தினான். தவறான படங்களை காண்பித்து அதை போலவே செய்ய அவளை கட்டாய படுத்தினான். ஒவ்வொரு இரவும் அவள் சித்ரவதையை அனுபவித்தாள்.

ஒரு சாய்ங்கால நேரம், அவனை விட்டு விலகி விடலாம் என நினைத்துக்கொண்டு இருந்தாள் கயல் விழி. பூங்காவில் சிறுவர்கள் யாரும் இல்லை, சில முதியவர்கள் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். பூங்காவின் பெஞ்சில் அமர்ந்து கொண்டு பறவைகளின் சுதந்திரத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்,

“ஹாய் கயல்… எப்படி இருக்கீங்க…?” பக்கத்தில் வந்து உட்காந்தான் அரவிந்த்.

“நல்லா இருக்கேன்ங்க… நீங்க எப்படி இருக்கீங்க…? உங்களுக்கு கூடிய சீக்கிரத்துல கல்யாணம் போல… அவரு சொல்லிட்ருந்தாரு… வாழ்த்துக்கள்…” என மனதார வாழ்த்தினாள்.

“ஆமாங்க… பொண்ணுப்பாத்தாச்சு… இனிமேல் தான் மத்ததெல்லாம்… அது இருக்கட்டும்… ஆர் யு ஓகே…? ரொம்ப யோசனைல இருக்கற மாதிரி இருக்கே…? என்னங்க விஷயம்…?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லங்க…”

“இதோ பாருங்க கயல்… காயம் சின்னதா இருக்கிற போதே மருந்து போட்டு குணப்படுத்திட்டா நல்லது… அது பெருசா போச்சுன்னு வெச்சுக்கோங்க அப்புறம் நம்மக்குத்தான் வலி ஜாஸ்தி… உங்க மனசுல இருக்குற பாரத்தை இறக்கி வைய்ங்க… என்னால உதவ முடியுமான்னு பாப்போம்… உங்க ரகசியம் என்னோட ரகசியம்… ஓகே…?”

ஒரு முறைதான் முயற்சித்துப்பார்ப்போமே என முடிவு செய்து, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, முதல் நாளில் இருந்து நேற்று இரவு நடந்தது வரை ஒரு மணி நேரத்தில் அவள் பட்ட அவஸ்தை அனைத்தையும் கொட்டித்தீர்த்தாள் - கண்ணீருடன். எல்லாவற்றையும் கேட்ட அரவிந்த் அதிர்ச்சியில் சில நிமிடங்கள் உறைந்து போனான்.

“இப்படிப்பட்ட லூசா அவன்…?” முடிவில் சொன்னான் அரவிந்த்.

“ஊரை விட்டே ஓடிடலாம்னு தோணுதுங்க… எங்க அப்பா அம்மாவை நினைச்சாதான் பாவமா இருக்கு… இல்லாட்டி தற்கொலை தாங்க ஒரே முடிவு…” என அழுதுகொண்டே புலம்பினாள் கயல்.

“அட! நீங்க வேற ஏங்க இப்படி பேசிக்கிட்டு…?. அவன் நல்லவன் தான்… ஆனா அவன் செய்யற தவறைச்சுட்டிக்காட்டணும்… அப்போதான் அந்த மரமண்டைக்கு உறைக்கும்… ஒரு ஐடியா இருக்கு… இங்க வாங்க… காதை குடுங்க…” என அரவிந்த் ஒரு அருமையான யோசனையை கூறினான். கயல் தன்னம்பிக்கையோடு விடைபெற்றாள்.

மறுநாள் வீட்டுக்குள் நுழைந்த குமாருக்கு ஒரே ஆச்சரியம். மின்விளக்கு இல்லாமல் வீடு சுமார் ஐம்பது மெழுகுவர்த்திகளால் ஒளியூட்டப்பட்டிருந்தது. அருமையான மல்லிப்பூ வாசனை அவனது காதல் ரசனையை சுண்டி இழுத்தது. செவியில் தேன் பாய்ச்சுவது போல இசைத்தது இளையராஜாவின் காதல் பாடல்கள். உணவருந்தும் மேசையில் அவனுக்கு பிடித்த அனைத்து அசைவ உணவுகளும் விருந்து போல அவனுக்காக காத்திருந்தது. அவனது மனைவி அழகான கருப்பு புடவை உடுத்திருந்தாள் - அவளின் வசீகரிக்கும் ஒப்பனை, அவனை உணர்ச்சியின் உச்சிக்கு அழைத்துச்சென்றது.

“என்ன ஒரு அருமையான ரசனை என் மனைவிக்கு… வாடி செல்லம் ‘அசைவம்’ சாப்பிடுவோம்…” என கூறி கயலை அணைக்க வந்தான்.

“மொதல்ல நெஜமாவே நான் சமைச்சுவச்ச அசைவ சாப்பாட்டை சாப்புடுங்க… அப்புறம்… மஞ்சத்தில் சாப்பிடலாம்…” என மிக தெளிவாக, அழகாக, மெய்ப்பித்து, நாணலுடன் கூறினாள் கயல்.

“ஓகே…” குமாரும் நாற்காலியில் அமர்ந்து ஒரு வெட்டு வெட்டலாம் என நினைத்து அன்னத்தில் கை வைப்பதற்குள், அவனது கைகளையும் கால்களையும் நாற்காலியுடன் சேர்த்து இறுக்கமாக ஒரு கயிற்றின் உதவியால் கட்டினாள் கயல். அவனால் அப்படி இப்படி கூட அசைய முடியவில்லை.

“ஹே… என்னடி இதெல்லாம்…?”

“சும்மா ஒரு விளையாட்டுக்கு தாங்க… நீங்க அப்படியே இருங்க நான் உங்களுக்கு ஊட்டி விடுவேணாம்…” என கயல் கூற, சந்தேகத்துடன் பல் இளித்தான் அவன்.

கிடைத்த வாய்ப்பை சரியாகப்பயன்படுத்தினாள் கயல். அவனக்குப்பிடித்த வஞ்சிர மீனை எடுத்து அவனின் வாயில் முழுகாகத்திணித்தாள். ஒன்று அல்ல இரண்டு அல்ல சுமார் ஆறு ஏழு துண்டுகளை முள்ளோடு அவன் வாயில் அழுத்தினாள். மீன் குழம்பில் காரத்தை அள்ளி கொட்டி, அதை காயமடைந்த அவன் வாயில் திணித்தாள். தொண்டையில் மீன் முள்ளும் சாதமும் சிக்கி கொண்டு குமார் தீயில் போட்ட புழு என துடித்தான்.

“என்னடி பண்ற…? நிறுத்துடி…” என கத்தினான், கதறினான்.

வறுத்த நண்டை கொடுக்கோடு அவன் வாயில் அமுக்கினாள். கூரான நண்டு ஓடு அவனது உதடுகளையும், நாவையும் பதம் பார்த்தது. ரத்தம் சொட்டச்சொட்ட வலியால் துடித்தான், கெஞ்சினான்…

“போதும்டி… போதும்… நிறுத்துடி” என மண்டியிடாக்குறையாக கண் சிவந்து கண்ணீர் பெருக மன்றாடினான்.

அவனுக்குப்புடிக்காத கோழி தலையை தோல் உரிக்காமல், சமைக்காமல், அவனது வாயில் திணித்தாள். துற்நாற்றத்தை தாங்க முடியமால் வாந்தி எடுத்தான் குமார். கடைசியில் அவனக்கு பிடித்த பலா பழத்தை எடுத்து, அதில் மேல் உள்ள முள் தோலை மட்டும் அவனுக்கு உண்ண கொடுத்தால். வலி, வேதனை, அவமானம் தாங்க முடியாமால் அவன் அழுதான்,

“போதும்டி… போதும்… என்னால முடியலடி… உன்னக்கு என்னப்பைத்தியமாப் புடிச்சிருக்கு…? என்னதான் புடிச்ச சாப்பாடுன்னாலும் இப்படியா…?” என அழுது கொண்டே கேட்டான்.

வெண்ணிற தேவதையாக இருந்த கயல்விழி, காளியாக மாறிருப்பதைக்கண்டு கொஞ்சம் பயந்தும் போனான்.

அவள் அருகில் வந்து அவனது சட்டை காலரை பிடித்து,

“இப்போ புரியுதா…? ஒவ்வொரு ராத்திரியும் எனக்கு எப்படி இருக்கும்னு…?” என கோபம் கொப்பளிக்க கேட்டாள் ஒரு கேள்வி. கன்னமிரண்டில் செருப்பால் அடித்தது போல உணர்ந்தான் குமரவேல். வெட்க பட்டு, தன் தவறை உணர்ந்து தலை குனிந்து, கூனிக்குறுகிப்போனான்.

Marital Rape - அதாவது திருமணக்கற்பழிப்பு என்பது பல நாடுகளில் சட்டப்படி குற்றமாகும்! நமது தேசத்தில் இதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவாக காணப்படுவதற்கு காரணம் அது கலாச்சாரம் என்கின்ற போர்வையில் மறைந்துஇருப்பதால் தான். கலாச்சாரம் அவசியம் தான் அனால் எப்பொழுது தனி மனித சுதந்திரத்தை அது சீரழிகிறதோ அதற்கு எதிராகக்குரல் கொடுக்க வேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் உண்டு. நான்கு சுவற்றுக்குள், கணவன் மனைவி இடையே நடக்கின்ற பரஸ்பர விஷயம் அனைத்துமே மனரீதியாக, உடல்ரீதியாக ஆரோக்கியமான விஷயங்கள் என்றால் நாம் தலையிடத்தேவை இல்லை. எப்பொழுது அது அத்துமீறி இது போன்ற பாலியல் பலகாரமோ, உடல்ரீதியான துன்புறுத்தல்களோ, காயங்களோ ஒரு பெண்ணிற்கு நிகழும் போது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவை மட்டுமல்ல, இது போன்ற ஆண்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

பெண்களின் சுயமரியாதைக்கு ஒரு அவமானம் நேருகையில், தங்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க ஆண்களை எதிர்த்து போராட, பெண்கள் மனதைரியத்துடனும், துணைச்சலுடனும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

ஆண்களே, உங்கள் மனைவிக்கு மரியாதையை கொடுங்கள், உங்கள் மனதில் அவர்களுக்கென ஓர் உயர்ந்த இடத்தை கொடுங்கள், 'ஸ்பெஸ்’ஐ கொடுங்கள். ‘ப்ளீஸ் இன்னைக்கு வேண்டாம்’ என்று அவர்கள் கூறினால் கண்ணியமாக நெற்றியில் ஒரு சின்ன முத்தம் வைத்து ‘ஓகே டியர்’ என ஆதரவு கொடுங்கள். உங்களின் சுயலாபத்திற்காக அவர்களுக்கு வலியையும், வேதனையும் கொடுத்து அதை பார்த்து சந்தோஷப்படும் “சாடிஸ்டாக” இருக்காதீர்கள். கலவியை பற்றிய உங்கள் அறிவை நல்ல விதத்தில் வளர்த்து கொள்ளுங்கள்.

3 Likes