Community

கிழக்கே போகும் சைக்கிள்

பகுதி 1 : சணல்

“வேணாம் டா. எதுக்கு இந்த தேவையில்லாத வேலை, ஓடுற ஓணான எடுத்து…”

“இங்க ஓணானும் இல்ல…வேட்டியும் இல்ல…இது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் டா…உனக்கு சொன்னா புரியாது…”

“என்ன பெரிய எக்ஸ்பீரியன்ஸ் மயிறு?”

கோகுல் திட்டவதை கேட்காமல் மதி பையை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். ஒரே ஒரு செட் ட்ரஸ்தான். ஒரு பெரிய இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டில். ஆனால் அந்த தண்ணீர் பத்தாது என்று அவனுக்கு தோன்றியது. அறையின் மூலையில் கிடந்த ஒரு சணல் கயிறை எடுத்து வைத்துக்கொண்டான். பையை பின்னால் கட்டுவதற்கு பயன்படும் என்று நினைத்துக்கொண்டான். தலை சீவவோ பவுடர் அடிக்கவோ அவனுக்கு நேரமில்லை. மணி மதியம் இரண்டு ஆகிக்கொண்டிருந்தது. இப்போ கிளம்பினால்தான் போய் சேர முடியும். சிதம்பரத்திற்கும் குத்தாலத்திற்குமான இடைவெளியை மனதிற்குள் கணக்குப்போட்டுக்கொண்டான். மீண்டும் கோகுல் குறுக்கிட்டான்.

“கடைசியா சொல்லுறேன்…வேணாம்! உனக்கு என்ன வேணா ஆகலாம் புரியுதா”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது…ஃபோன்ல ஃபுல் சார்ஞ் இருக்கு, பத்தாததுக்கு இந்த பவர்பேங்க் இருக்கு…நான் குத்தாலம் போய் சேர்ந்துட்டு போன் பண்றேன்”

“உம் மனசுல என்ன பெரிய வீராதி சூரன்னு நினைப்பா…சிதம்பரம் டூ குத்தாலம் ஐம்பத்தி இரண்டு கிலோ மீட்டர்…தெரியுமா”

“தெரியும் தெரியும்…என்ன பண்ணுறது குத்தாலத்துல ஒரு மாசம் இருக்கனும் இது இல்லாம என்னால இருக்க முடியாது…இதுக்கு உயிர் இருக்கு தெரியுமா?”

“போதும்பா உன்னோட புராணம். பாத்துப்போ…மறுபடியும் சொல்லுறேன் பாத்துப்போ…”

மதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படிப்பில் இறுதியாண்டு படித்து வந்தான். இறுதியாண்டு ப்ராஜெக்ட்டுக்காக அவன் சிதம்பரத்திலுருந்து ஐம்பத்தி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குத்தாலத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை. ஏற்கனவே குத்தாலத்தில் அறையெடுத்து தங்கிவிட்டிருந்தாலும், இப்போது முக்கிய வேலையாக ஒன்றை எடுக்க மீண்டும் சிதம்பரம் வந்திருக்கிறான். அந்த ஒன்றைத்தான் கோகுலும் வேண்டாம் வேண்டாம் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மதி அதை கேட்பதாக தெரியவில்லை. அதுதான் சைக்கிள்.

மதிக்கு சைக்கிள் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கும் ஏதோ உயிர் இருப்பதைப்போல பாவித்துக்கொள்வான். அவன் தற்போது வைத்திருக்கும் சைக்கிள் அவன் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வாங்கிய சைக்கிள். எட்டுவருட பழைய சைக்கிள்.

மதிக்கு சைக்கிளின் மீது இவ்வளவு ஆர்வம் வந்ததற்கு காரணம் அவன் தாத்தா தான். அவர் வைத்திருக்கும் சைக்கிள் இருபது வருடங்கள் பழமையானது. ஆனால் அது அப்படி தெரியாது. போன வாரம்தான் வாங்கியது போல இருக்கும்.

கோகுல் அவனை போக வேண்டாம் என்று சொன்னதற்கு முதல் காரணம் அவன் அந்த சைக்கிளை ஒரு பேருந்தின் மேற்கூரையிலோ அல்லது ஒரு ரயிலின் பார்சல் பெட்டியிலோ போட்டுக்கொண்டு போகவில்லை. குத்தாலம் வரை ஓட்டிச்செல்வதுதான் அவனது திட்டம்.

ஒரு நல்ல சைக்கிள் ரேசருக்கு இது அத்துப்படிதான். ஆனால் மதி இவ்வளவு பெரிய தூரம் இதுவரை சென்றதில்லை.

அதுவும் ஹைவே சாலை என்றால் சரக் சரக் என்று லாரிகளும் பேருந்துகளும் வந்துக்கொண்டிருக்கும். அதற்கு இடையில் ஒரு ஓரத்தில் சைக்கிளில் போனாலும் ஆபத்துதான். இருட்டி விடுவதற்குள் போயாக வேண்டியது இன்னொரு கட்டாயம். இப்படி அத்தனை இடர்பாடுகளையும் வைத்துக்கொண்டு மதி சைக்கிளில் போவதை கோகுல் விரும்பவில்லை.

அந்த சைக்கிளும் அப்படி ஒன்னும் கண்டிசனில் இருப்பது இல்லை. மாதம் ஒருமுறை ரிப்பேர் செய்யப்படும. சில நேரம் வாரம் ஒரு முறை.ஒரு முறை பிரேக் கட்டை, ஒரு முறை செயின், ஒரு முறை பெடல், ஒரு முறை சீட். ஆனாலும் மதி அந்த சைக்கிளை விடுவதாக இல்லை.

மதியம் இரண்டரை ஆகிக்கொண்டிருந்தது. மதி பையை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான். காலையிலேயே முழுதாக காத்தடித்து எண்ணெய்ப்போட்டு வைத்திருந்த சைக்கிளை மீண்டும் ஒருமுறை சுற்றும் முற்றும் சோதித்துப் பார்த்துக்கொண்டான். வெயில் சுளீரென்று அடித்தது. ஒரு மாதிரி வெப்பத்தோடு காற்று வீசிக்கொண்டிருந்தது. மதி சைக்கிள் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்தான்.

பகுதி 2 : அட்டை

உலகத்தின் முதல் சைக்கிள் கிபி 1550ஆம் ஆண்டு லியோநார்டோ டாவின்சியின் மாணவர் காப்ரொட்டியால் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பின் சைக்கிளின் வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய பேரால் வடிவம் மாற்றப்பட்டது. கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதல் முறையாக சைக்கிள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட இப்போது இருக்கும் ஸ்கேட்டிங் போர்ட் மாதிரி. பாதி நாம் கால் வைத்து இழுத்து இழுத்து கொஞ்ச தூரம் ஓடும் பின்பு மறுபடியும் கால்வைத்து இழுக்க வேண்டும். அதற்குப்பின்தான் பெடல் செய்யும் வடிவம் வந்தது. காலை வைத்து இழுக்காமலே மிதித்துத் தள்ளும் வடிவம். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு அளவுகளில் வந்தது. ஐரோப்பிய கண்டத்தில்தான் அதிகமாக சைக்கிள் புழக்கத்தில் இருந்து இருக்கிறது. பாரீஸில் தான் முதல் விற்பனை. இன்றும் நெதர்லாந்தில் முப்பது சதவீதம் மக்கள் சைக்கிளையே பயன்படுத்துகின்றனர். அதன் ஒரு பரிமாண மாற்றம்தான் சைக்கிள் ரிக்க்ஷா. உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிள் பரவ தொடங்கியிருக்கிறது. இந்தியாவிலும் சைக்கிள் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. ஆடம்பரத்திலிருந்து சைக்கிள் அத்தியாவசியத்திற்கு வந்து இன்று அநாவசியமாகிப்போயிருக்கிறது. இன்று சக்கரத்தால் ஓடும் எந்த ஒரு வாகனத்திற்கும் மூதாதையர் சைக்கிள்தான். சைக்கிள் ரேஸ் இன்று ஒலிம்பிக் போட்டியிலும் உள்ளது. மோட்டர் சைக்கிள், பேட்டரி சைக்கிள், கியர் சைக்கிள் என்று காலத்திற்கேற்ப சைக்கிள் தன்னை மாற்றிக்கொண்டேதான் வருகிறது.

மதி மதிய வெயிலில் சைக்கிளோடு அறையை விட்டு வெளியே வந்தான். வெயில் சுட்டது. ஒரு தொப்பி போட்டுக்கொண்டான். சைக்கிளை நன்றாக சோதனை செய்துப் பார்த்துக்கொண்டான். அவன் பையை பின் சீட்டில் கேரியரில் வைத்து மாட்டி சணல் கயிற்றால் நன்கு கட்டினான். ஆன்ராய்டு கைப்பேசியை சைக்கிள் ஹேண்டில் பாரில் வைத்து நன்றாக ஒரு கயிற்றால் கட்டினான். கீழே பெடலுக்கு மேலே இருந்த ஒரு கம்பியில் பவர் பேங்க்யை நன்றாக செலோடேப் போட்டு ஒட்டிவிட்டான். அங்கிருந்து வயர் மேலே ஹேண்டில்பாரில் இருக்கும் கைப்பேசி வரை வந்தது. கைப்பேசி திரையில் கூகுள் மேப்பை போட்டு விட்டான். எல்லாம் தயார் மாதிரித்தான் இருந்தது. இன்னும் ஒரு முறை சைக்கிளை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஸ்டாண்டை உதைத்து சைக்கிளில் ஏறி புறப்பட்டான். சைக்கிள் குறுக்கு சந்துகளில் இருந்து ஒரு பெரிய சாலைக்கு வந்தது. வெயில் இன்னும் அதிகமாகவே இருந்தது. ஒருவேளை இந்தத் திட்டம் சொதப்பிவிடுமோ என்று தோன்றியது.

மதியம் சாப்பிடவில்லை. வீட்டின் அருகேயே ஒரு கடையில் கரும்பு ஜூஸ் குடித்துவிட்டு சைக்கிளை மீண்டும் எடுத்தான். வியர்வை உடலை நனைத்திருந்தது.

அன்று மதியம் அவன் சாப்பிடவில்லை. அப்பா வரட்டும் சாப்பிட்டுக்கலாம் என்று இருந்தான். மதி அப்போது எட்டாவது படித்துக்கொண்டிருந்தான். வீடு புதுக்கோட்டையில் இருந்தது. அப்பா மாலை நான்கு மணிக்கு ஒரு குட்டியானை வண்டியின் முன்னால் உட்கார்ந்துக்கொண்டு வந்தார். மதி சாப்பிடாமலேயே வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தான். வண்டியின் பின்னால் ஒரு ஆள் சைக்கிளை கீழே இறக்கி வைத்தான். சைக்கிள் முழுவதும் அட்டைகளால் சுத்தப்பட்டு இருந்தது. அப்பா டிரைவருக்கும் அந்த சைக்கிள் இறக்கி வைத்தவருக்கும் இருநூறு ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தார். சைக்கிள் திருச்சியில் இருந்து வந்து இருந்தது. ‘நம்ம ஊருல கிடைக்காத சைக்கிளத்தான் திருச்சியில இருந்து கொண்டு வந்தீகளாக்கும்’ என்று அம்மா கடிந்துக்கொண்டார். மதி எதையும் கேட்கவில்லை. சைக்கிளை ஒரு ரவுண்டு ஓட்டிப் பார்க்கிறேன் என்று தள்ளிக்கொண்டு ஏறி ஒரு ரவுண்டு போயிட்டு வந்தான். அன்றைக்கு மதி சாப்பிடவே இல்லை. சைக்கிள் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தான். அது அவனுக்கு இரண்டாவது சைக்கிள், முதல் சைக்கிள் அவனைவிட மிகவும் சின்னதாய் போய்விட்டதால் அல்லது அவன் வளர்ந்துவிட்டதால் கழிச்சுக்கட்டப்பட்டது. அந்த அட்டைகளை பிரிக்காமலே ஒரு மாதம் ஓட்டிக்கொண்டிருந்தான். அதுவே பிய்ந்து விழுந்தது. அந்த சைக்கிளைத்தான் இன்னும் ஓட்டிக்கொண்டிருக்கிறான்.

சைக்கிள் நெடுஞ்சாலை அருகில் நின்றது. கூகுள் மேப்பில் வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, மயிலாடுதுறை வழியாக குத்தாலத்திற்கு ஐம்பத்தி இரண்டு கிலோ மீட்டர் காட்டியது. ஆனால் மதிக்கு நெடுஞ்சாலையில் செல்வது தோதுபடவில்லை. கூகுல் மேப்ஸில் நடந்து செல்லும் பாதையை தேர்வு செய்தான். சிதம்பரம் டூ குத்தாலம் நெடுஞ்சாலை இல்லாமல் கிராமங்களில் வழியாக செல்ல குறுக்குப்பாதை ஒன்று காட்டியது அதன் வழியாக செல்லலாம் என்று சைக்கிளை மேப் காட்டிய திசையில் ஒரு கிராமத்தின் ஊடே ஓட்டினான். எல்லாம் நல்லா போயிக்கொண்டிருந்தது. கிராமத்தின் வயல்கள், பறவைகள் சத்தம், அங்கங்கு நிழல்கள். வெயில் இருந்தும் தெரியவில்லை. அப்போது…

பகுதி 3 : கல்

கிராமத்து சாலைகள் கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருந்தது. ஜல்லிகற்கள் வெளியே துருத்திக்கொண்டு இருந்தன. எங்கே சைக்கிள் டயரை பஞ்சர் செய்துவிடுமோ என்று பயந்து கொண்டே சென்றான். கிராமத்தில் அப்படித்தான். பத்து வருடத்திற்கு முன் போட்ட சாலைகள் புணரமைக்கப்படாமலே இருக்கும். யாருக்கும் அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் சாலை வருடம் வருடம் போட்டதற்கான கணக்கு மட்டும் அரசு கஜானாவில் காலியாகிக்கொண்டே இருக்கும். தேர்தல் போது மட்டும் ஒப்பனையாக ஒரு படலம் மேலே போடப்பட்டு அக்கறை உள்ளவர்கள் போல காட்டப்படும். எந்தக் கட்சி இருந்தாலும் இது மாறாமல் இருக்கும். அந்த கிராமத்து மக்களே இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மதி சென்ற சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது. சைக்கிள் ஏறி ஏறி தூக்கிப்போட்டது. டயர் வெடித்து விடுவதுபோல இருந்தது. இதற்கு பேசாமல் நெடுஞ்சாலையிலேயே போயிருக்கலாம் என்று அவனுக்கு தோன்றியது. ஆனால் என்ன செய்வது ஊருக்குள் வந்து விட்டாயிற்று, இன்னும் கொஞ்சம் நேரத்தில் சிமெண்ட் சாலை வந்துவிடும் என்று நம்பிக்கையில் ஓட்டினான்.

மதி ஒரு கணக்கோடுதான் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். மொத்தம் ஐம்பத்தி இரண்டு கிலோமீட்டர், பத்து கிலோமீட்டருக்கு ஒரு மணி நேரம் என்பது இலக்காக இருந்தது. அப்படியென்றால் ஐந்து மணி நேரத்தில் குத்தாலம் சென்றுவிடலாம். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு இடத்தில் சைக்கிளை நிறுத்தி கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம் என்று கணக்குப்போட்டிருந்தான்.

சைக்கிள் ஒரு குழிக்குள் இறங்கி ஏறியதில் தடுமாறி ஒரு பக்கமாக சாய்ந்தது. ஆனாலும் மதி அவன் காலை வைத்து தடுத்துவிட்டான். ஆனாலும் சாய்ந்து வேகத்தில் அவனையும் மீறி கீழே சாய்ந்தான். மதி மேல் சைக்கிள் கிடந்தது. அது கிராமத்தின் எல்லைப் பகுதி என்பதால் தூக்கவும் ஆட்கள் இல்லை. மதி அவனே எழுந்து கொண்டு சைக்கிளைத் தூக்கினான். அவனுக்கும் பெரிய அடியில்லை சைக்கிளுக்கும் எதும் ஆகவில்லை. மீண்டும் கூகுள் மேப்ஸ் காட்டிய சாலையிலேயே சென்றான்.

மதியின் கால் முட்டியில் நன்றாக சிராய்த்து ரத்தம் வெளியே வந்துக்கொண்டிருந்தது. உள்ளங்கையைத் தாங்கிக்கொள்ள வைத்தப்போது அதிலும் அடி. இன்னொரு கையில் ஹேண்டில்பார் இடித்ததில் ரத்தக்கட்டு. அம்மா பொளிச் என்று முதுகில் ஒன்று வைத்து வீட்டிற்குள் இழுத்துக்கொண்டு போனார். அவன் நண்பன் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான்.அப்போது மதி இரண்டாவது படித்துக்கொண்டிருந்தான். அவனிடம் சைக்கிள் இல்லை. அவன் நண்பன் குமார் வைத்திருந்த சைக்கிளை வாங்கி ஓட்டப்பழகுவான். குமார் சைக்கிளை பின்னாலேயே பிடித்துக்கொண்டு ஓடிவருவான். குமார் விட்டுவிட்டால் மதி கண்டிப்பாக விழுந்துவிடுவான். குமார் நன்றாக ஓட்டுவான். டவுன் வரைக்கும் சைக்கிளிலே போவதாய் சொல்லிக்கொள்வான். ஒருநாள் குமார் மதிக்கு குரங்கு பெடல் செய்து காண்பித்தான்.

‘இது என்னடா…இப்படி ஓட்டுற’

‘இது கொரங்கு பெடல்’

குமார் மூச்சு வாங்கிக்கொண்டே சைக்கிளை நிறுத்தினான்.

‘கொரங்குலாம் இப்படித்தான் ஓட்டுமா?’

‘ஆமா, நான் ஒரு நாள் பாத்தேன். ஒரு குரங்கு இப்படித்தான் ஓட்டிச்சு’

‘நாம ஏன் இப்படி ஓட்டனும்?’

‘கொரங்குல இருந்துதான் மனுசன் வந்தானாம்…’

‘அதெக்கு’

‘அதான் இப்படி ஓட்டித்தான் சைக்கிள் கத்துக்கனும்னு எங்க ஐயா சொன்னாரு’

‘அவரும் இப்படித்தான் கத்துக்கிட்டாரா?’

‘ஆமாடா’

‘எனக்கும் கத்துகொடுடா…’

‘அப்போ எனக்கு ஒரு தேன்னுமுட்டாய் வேணும்’

‘சரி வாங்கிக்கலாம்…’

அன்று முழுவதும் இருவரும் குரங்கு பெடில் அடித்தார்கள்… மதி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டான்.

மதி பேண்டில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்தான். கூகுள் மேப்ஸ் காட்டிய திசையிலேயே போனான். இடையில் நிறைய வீடுகள் எல்லாம் இருந்தது. எல்லாரும் இவனை அந்நியனாக ஒரு மாதிரி பார்த்தார்கள். நாய்கள் குறைத்தன. ஐந்து கிராமங்களைக் கடக்கையில் பத்து கிலோமீட்டர் கடந்து இருந்தான். ஒரு மரத்தடியில் நின்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் சைக்கிளை எடுத்தான். வெயில் சற்று குறைந்திருந்தது. ஆனாலும் வியர்த்தது எரிச்சலாக இருந்தது. கூகுள் மேப்ஸ் காட்டியபடியே ஒரு சந்தில் நுழைந்தபோது மக்கள் கூட்டமாக நின்று இருந்தனர். சாலை அடைக்கப்பட்டதைப் போல இருந்தது.

பகுதி -4 : கிளி

லேசாக மயக்கம் வருவது போல இருந்தது. மதியம் குடித்த கரும்பு ஜூஸ் எப்படியும் இன்னேரம் செரித்து இருக்கும். தொடர்ந்து கால்கள் சுழன்றுக்கொண்டே இருந்ததால் தொடைகள் வலித்தது. முதுகெலும்பில் அதைவிட வலி அதிகம். பாதி தூரம்தான் கடந்து இருப்பதாய் கூகுள் மேப்ஸ் காட்டியது. சூரியன் மெதுவாக மறையத்தொடங்கி இருந்தது. மணி ஐந்து ஆகிக்கொண்டிருந்தது. சில தெருக்களில் புது ஆள் என்று முறைப்பார்கள். நாய்கள் குரைக்கும். வலித்த கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று நினைத்தபோதுதான் அந்த கூட்டம் அங்கு இருந்தது. ரோட்டின் மேல் இருந்த வீட்டின்முன்தான் கூட்டம். ரோட்டுக்கும் சேர்த்து பந்தல் போட்டு இருந்தார்கள். வெளிய கிடைந்த நாற்காலிகள் பத்தாமல் பாதிபேர் நின்றுக்கொண்டிருந்தனர். யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டின் பக்கவாட்டில் ஒரு நான்குபேர் பாடையைத் தயார் செய்துக்கொண்டிருந்தார்கள். இழவு வீடுபோல.

மதி சைக்கிளில் நெருங்கியும் கூட்டம் விலகவில்லை. யாரும் கண்டுக்கொள்ளவும் இல்லை. உள்ளே அழுகை சத்தம் ஓய்ந்துப்போயிருந்தது. சிலர் மட்டுமே தேம்பும் சத்தம் கேட்டது. ஒரு மூலையில் தாரைகள் நெருப்பில் சுட்டுக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் பெரிய ஆயிரம் வாலாவை விரித்தான். அவன் வெடி வைப்பதற்குமுன் அந்த இடத்தை கடந்து விடவேண்டும் என்று தோன்றியது. லேசாக பெல் அடித்தான். கூட்டத்தில் யாரோ ஒருவன் பார்த்துவிட்டான்.

‘ஏம்பா நகருங்க…ஆளு போவுது வழிவிடுங்க’ என்று யாரோ கத்த கூட்டம் விலகியது. மதி சைக்கிளை நுழைத்துக்கொண்டு அந்தப்பக்கம் வெளியே வந்தான். கொஞ்சம் தூரம் கடந்த பின் தாரை சத்தமும் வெடி சத்தமும் கேட்டது. சூரியன் முழுமையாக மூழ்கிப்போயிருந்தது. ஆனால் வெளிச்சமிருந்தது.

கொஞ்சம் தூரம் கடந்ததும் ஒரு சின்ன பெட்டிக்கடை வந்தது. உடல்வலியை போக்கிக்கொள்ள ஒரு கலர் வாங்கிக்குடித்தான். கீழே உட்கார முடியாமல் முட்டி வலித்தது. பேசாமல் பேருந்திலோ ரயிலிலோ வந்து இருக்கலாம் என்று தோன்றியது. இனிமேல் பின்னாடியும் போக முடியாது. நடக்கிறது நடக்கட்டும் என்று வலியை பொறுத்துக்கொண்டு சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தான்.

இரண்டு பக்கமும் வயல்வெளிகள். மாலை பள்ளி முடித்து வீட்டுக்கு செல்லும் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அவர்களை பார்த்துக்கொண்டே சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான்.

அதுவும் ஒரு பள்ளி விடும் நேரம்தான். அப்போது மதி பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு என்பதால் வகுப்பு முடிய ஆறுமணி ஆகிவிடும். மதியின் நண்பன் விஜய் அப்போது டி.வி.எஸ் வண்டியில் வருவான். அப்போது அது பிரபலம். மதிக்கு அந்த வண்டி ஓட்ட தெரியாவிட்டாலும் விஜய் கூட பின்னால் அமர்ந்து வீட்டுக்கு போவான். அன்று ஏதோ மதிக்கு அவன் ஓட்ட வேண்டும் என்று தோன்றியது. விஜயும் ஒப்புக்கொண்டான். வண்டி கிளம்பியது. முதலில் சற்று தடுமாறினாலும் மதி நன்றாகவே ஓட்டினான். ஒரு வீட்டை கடக்கையில் ஒரு கிளி சக்கரத்தின் உயரத்திலேயே பறந்துவந்து சக்கரத்தில் சிக்கியது. இரண்டு சக்கரத்திலும் நசுங்கியது. மதி பிரேக் பிடிப்பதற்குள் இதுவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு வந்து பார்க்கும் போது அந்த கிளி ரத்த வெள்ளத்தில் அடித்துக்கொண்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து ஒரு அம்மாவும் அவள் மகளும் வெளியே வந்து துடித்துக்கொண்டிருக்கும் கிளியை பார்த்து கதறி அழுதனர். தெருவே கூடிவிட்டது. யாரும் மதியை திட்டவில்லை. அவன் மீது தப்பு இல்லை என்று தெரிந்தது. எல்லோரும் மதியையும் விஜயையும் போக சொன்னார். இருவரும் உடனடியா சென்று ஒரு மருந்துக்கடையில் கட்டும் மருந்தும் வாங்கிக்கொண்டு வரும்பொது கிளி இறந்துப்போயிருந்தது. அந்த அம்மா பிணமான கிளியை கையில் வைத்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள். அதுதான் மதி சந்தித்த பெரிய இழவு. அன்று இரவு மதி சாப்பிடவும் இல்லை. தூங்கவும் இல்லை. ஒரு மாதத்திற்கு மேல் மதியால் அதை மறக்க முடியவில்லை.

இருட்டத் தொடங்கிவிட்டது. வழி கிராமங்களை விடுத்து ஒதுக்குப்புறமாக ஒரு சாலையில் புகுந்தது. சுத்தமாக வெளிச்சமில்லை.

பகுதி 5 : முத்தம்

பௌர்ணமி நிலவை மேகங்கள் மறைத்துக்கொண்டிருந்த ஒரு பின்னிரவு அது. ஷீலா அன்று வெளியூரில் இருந்து நள்ளிரவில் வர மதி அவளை பேருந்து நிலையத்திலிருந்து விடுதியில் கொண்டு வந்து விடுவதற்காக சைக்கிளில் வந்திருந்தான். ஷீலா பின்னால் அமர்ந்துக்கொள்ள மதி அவளை ஏற்றிக்கொண்டு சைக்கிளை மிதித்தான்.

‘பேசாம வர?’ மதி பேசினான்.

‘இந்த அமைதி நல்லா இருக்கு…சத்தமே இல்லாம…’

‘அப்போ நானும் சத்தம் போடாம இருக்கனுமா?’

‘நீ பேசுனா இன்னும் நல்லா இருக்கு’

மதி சிரித்தான். மதி அப்போது கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்தான். இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வருகின்றனர். அதை காதல் என்று அவர்கள் ஒரு போதும் சொல்லிக்கொள்வதில்லை. ஏதோ ஒரு இனம்புரியாத பந்தம். அப்படியே அதை வகைப்படுத்தியிருந்தனர்.

இரவின் பனி காற்றோடு சேர்ந்து வீசியது. மரங்கள் அசைவது மட்டுமே அந்த நேரத்தின் பெருஞ்சத்தமாக இருந்தது. ஷீலா மதி மேல் சாய்ந்துக்கொண்டாள். சைக்கிள் ஒரு குளத்தை கடக்கையில் ஷீலா சைக்கிளை நிறுத்த சொன்னாள். அவர்கள் பகலில் அந்த குளத்திற்கு வருவதுண்டு. வெகு நேரம் அந்த குளத்தின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். மதி பொறி வாங்கிக்கொண்டு வந்து மீன்களுக்கு போடுவான்.

‘ஒரு நாள் இந்த மீனெல்லாம் புடிச்சு நல்லா புளி கரைச்சு எண்ணெய் மிதக்குற மாதிரி ஒரு மீன் கொழம்பு வச்சுக்கொடு ஷீலா’

‘அத்தன ரூசி கேக்குதாக்கும்…மொதல்ல என்ன கட்டிக்கோ இந்த குளத்துல மீன் புடிச்சு இங்கையே வைக்கலாம்…’

‘படிப்பு முடியட்டும்…நான் ஒரு வேலைக்கு போறேன்…நீயும் போ…அப்புறம் வீட்ல சொல்லலாம்’

சைக்கிளை குளத்தின் கறையில் நிறுத்தினான் மதி. ஷீலா இறங்கிக்கொண்டாள். இரவு அந்த குளத்தை இன்னும் அதிகமாக அழகாக்கியிருந்தது. மீன்கள் தண்ணீருக்கு மேல் பரப்பிலே இருந்தன். நிலவொளி அவை உடம்பில் பட்டு பிரகாசித்தது. இருவரும் ஒரு மணல் திட்டில் உட்கார்ந்தனர். ஏதோவொரு பறவை மேலே பறந்துக்கொண்டிருந்தது.

‘நேரமாகலியா?’ மதி கேட்டான்.

‘நேரம் கெடக்குது…யாருக்கு கிடைக்கும் இந்த மாதிரி ஒரு அழகு…’

‘காதலனா?’

‘இல்ல குளத்த சொன்னேன்…அழகு குளம்’

ஷீலா சிரித்தாள். நட்சத்திரங்கள் மின்னுவது சிரிப்பது போல இருந்தது.

கொஞ்ச நேரம் பேசிக்கொள்ளவில்லை. அந்த மௌனம் அவர்களுக்கு பிடித்திருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கண்கள் ஏதோ பேசிக்கொண்டது. மீன்களுக்கு புரியவில்லை.

மதி மெதுவாக அவன் முகத்தை அவள் முகத்தின் அருகில் கொண்டு வந்து தன் உதடுகளை அவள் உதடுகள் மேல் பதித்தான். காற்றில் மிகவும் நெருக்கமாக இருக்கும் பூக்கள் நகராமல் உராசிக்கொள்வதுபோல உதடுகள் இருந்தன. இருவரும் மிகவும் இறுக்கமாக கட்டிக்கொண்டனர். முத்தம் தொடர்வது நிறுத்தப்படவே இல்லை. மதியின் கைகள் ஷீலாவின் உடம்பில் பரவ ஆரம்பித்தது. தேவையான ஆடைகள் கலையப்பட்டன. நிலவு மேகத்திற்குள் மறைந்துக்கொண்டு அவர்களுக்கு இருளை போர்வையாக போர்த்தியது. உடல்கள் சத்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தன. ஊடல் வியர்த்து முடித்திருந்தபோது மணி அதிகாலை மூன்றை தாண்டியிருந்தது. குளத்தில் மீன்களை காணவில்லை. நிலவு இப்போது எங்கேயோ இருந்தது.

மதிக்கு இப்போது ஷீலாவிடன் பேசவேண்டும் போல இருந்தது. ஆனால் அந்த கிராமத்தில் சிக்னல் கிடைக்கவில்லை. இரவின் குளிரில் மெதுவாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். கிராமத்தின் எல்லைப் பகுதி போல. காடு போல இருந்தது. வெறும் மணல் ரோடுதான். அதுவும் ஒரு அடி அகலத்தில் தான் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் பெரிய பள்ளம். கொஞ்சம் இடறிவிட்டாலும் பள்ளத்தில் உருள வேண்டியதுதான். நிலவைக் காணவில்லை. இருட்டில் குத்துமதிப்பாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அங்கங்கு பாதை இறங்கியது அங்கங்கு ஏறியது. அது கண்டிப்பாக மனித நடமாட்டம் இல்லாத பகுதி. இருசக்கர வாகனம் வந்தால் கூட செல்வது கடினம்தான். இடதுபக்க பள்ளத்தில் ஒரு ஓடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.வலது பக்கத்தில் மிகப்பெரிய மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. மரங்களின் ஆட்டம் அவனை பயமுறுத்தியது. கூகுள் மேப்ஸ் என்ன இழவுக்கு இந்த பாதையை காட்டியது என்று அவனுக்கு தெரியவில்லை. சீக்கிரம் முடிந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் அது தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

கொஞ்சம் தூரம் தள்ளி மரங்களின் கிளைகள் மிக தாழ்வாக இருந்தன. அவன் மீது உரசியது. இருட்டில் இலைகள் கண்ணுக்கு தெரியவில்லை. திடீர் திடீரென்று இலைகள் அவன் தலையை தொட்டன. கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் அப்படிபட்ட பாதையில் பயணிப்பதாய் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் இது சரியான பாதைதான என்ற சந்தேகமும் வந்துவிட்டது. வழியில் ஒரு சுடுகாட்டை கடந்தான். பிணங்கள் ஏதும் எரிவதாய் தெரியவில்லை. மணலில் சைக்கிளை மிதிப்பது சிரமம். சாதாரண பாதையில் ஓட்டுவதை விட கொஞ்சம் கூடுதல் பளு போடவேண்டும். அதுவே அவனை சோர்வுபடுத்தியிருந்தாலும் சைக்கிளை அந்த இருட்டில் தோன்றவில்லை. என்ன வேண்டுமானால் நடக்கலாம். யாராவது அடித்துப்போட்டுவிட்டு எல்லாவற்றையும் திருடிவிட்டு போனால் கூட உடலை கண்டுபிடிக்கவே ஒரு வாரம் ஆகிவிடும் இந்த காட்டில். நிலவு சில மேகங்களை விலக்கிக்கொண்டு எட்டிப்பார்த்தது. அந்த வெளிச்சம் கொஞ்சம் நிம்மதி கொடுத்தாலும் இந்த நாள் அவன் வாழ்க்கையின் இறுதி நாளாக இருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. எங்கோ தூரத்தில் சாலையின் வண்டி சத்தங்கள் கேட்டன.

சிறிதுதூரம் வந்ததும் ஒரு சிறிய குடிசை தூரத்தில் தெரிந்தது. ஒரு விளக்கொளி. ஆள் நடமாட்டமும் இருந்தது. யாராக இருந்தாலும் இந்த பாதை சரியானது தானா? இன்னும் எவ்வளவு தூரம்? என்றெல்லாம் கேட்டுவிட நினைத்தான். குடிசையை நெருங்கும்போது உறுமல் சத்தங்கள். உறுமல்கள் மிக வேகமாகவே குரைப்பாக மாறியது. பத்து நாய்களுக்கு மேல் இருக்கும். அவனை சூழ்ந்துக்கொண்டன. சில நாய்கள் அங்கேயே இருந்து குரைத்தன. சில நாய்கள் மதியை நோக்கி ஆக்ரோஷமாக குரைத்துக்கொண்டு முன்னேறின.

பகுதி 6 : அசோக மரம்

மதிக்கு அப்போதெல்லாம் இரவில்தான் சைக்கிள் ஓட்ட பிடிக்கும். அந்த மூன்று சக்கர சைக்கிளில் அந்த அப்பார்ட்மெண்ட் முழுவதையும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்துவிடுவான். அவன் வரும் வரை அம்மா ஒரு வாய் ஊட்டுவதற்கு சோற்றை கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பாள். அப்போது மதிக்கு மூன்று வயது. மூன்று சக்கர சைக்கிளில் அந்த அப்பார்ட்மெண்டை சுற்றிக்கொண்டு வருவது அவனுக்கு பிடித்தமான ஒன்று. அப்பார்ட்மெண்டிற்குள் வண்டிகள் ஏதும் வராததால் பயம் இல்லை. அதுவும் பின்னாடி யாரையும் ஏற்ற மாட்டான். அவனே ஓட்டிக்கொண்டு வந்து முடிக்க வேண்டும். அவனுடைய ஒரே பொழுதுபோக்கு அதுவாகத்தான் இருந்தது. ஒரு நாள் அப்படி ஓட்டும்போது ஒரு பள்ளத்தில் சைக்கிளை விட்டு கவிழ்ந்து சகதியில் விழுந்துவிட்டான். இன்னொருநாள் ஓட்டிக்கொண்டே தூங்கிவிட்டான். பகல் நேரத்தைவிட அவனுக்கு இரவில் ஓட்டுவதே அவனுக்கு ஏதோ பிடித்து இருந்தது. இரவில் அந்த குளிர்காற்றும் நிலவொளியும். யாருக்குத்தான் பிடிக்காது.

ஆனால் அந்த ஒரு பக்க சாலையில் மட்டும் எப்போதுமே அவனுக்கு பயம். அந்த சாலை நெடுகிலும் உயரமான அசோக மரங்கள் இருக்கும். பகல் நேரத்தில் ஏதும் இல்லை. இரவு நேரத்தில் அந்த இருட்டில் உயரமான அந்த மரங்கள் அசைவது அந்த வயதில் அவனை மிக பயமுறுத்தியது. பல நேரம் அந்த சாலையுடன் சென்று திரும்பியிருக்கிறான். சில நாள்கள் கனவுகளில் அந்த மரங்கள் வந்து பயமுறுத்தும். அதற்குப்பின் மதி அந்த அங்கிருந்து வேறு வீட்டிற்கு மாறிவிட்டனர். இங்கு சைக்கிள் ஓட்டவே முடியாமல் இருந்தது. இப்போது அங்கேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. பயமாக இருந்தாலும் அது அவனுக்கு பிடித்திருந்தது.

நாய்கள் சூழ்ந்துக்கொண்டதால் மதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விரட்ட முற்பட்டாலும் அவை விலகுவதாக தெரியவில்லை. அது அதுகளின் இடம் அதனால் அப்படித்தான் இருக்கும். குரைக்கின்ற நாய் கடிக்காது என்ற எண்ணத்தில் மதி முன்னேறினான். அப்போது அந்த குடிசையில் இருந்து ஒருவர் வெளிப்பட்டு நாய்களை அதட்டினார். அவை அமைதியாகின.

வெளியில் தொங்கிக்கொண்டிருந்த லாந்தரில் அவர் முகம் பாதி மட்டுமே தெரிந்தது. மேலே சட்டைப்போடவில்லை. இடுப்பில் வேட்டிப்போல ஒன்று கட்டியிருந்தார். முகத்தின் சுருக்கங்கள் பயமுறுத்தின. ஏழுபது வயது இருக்கலாம். இந்த காட்டுக்குள் இப்படி ஏன் இவர் இருக்கிறார் என்று தோன்றியது. அவர் நாய்களை விரட்டிவிட்டு மதியிடம் போகும்படி சைகை காட்டினார். மதி அவர் அருகில் நிறுத்தி இந்த பாதைகளை பற்றிக்கேட்டான். அவரும் ஏதோ சொன்னார். மதியிடம் தண்ணீர் காலியாகி இருந்தது. சரி இவரிடம் கேட்கலாம் என்று கேட்டான். அவர் தண்ணீர் குடிக்க உள்ளே அழைத்தார். மதிக்கு செல்லலாமா? வேண்டாமா? என்று சந்தேகம். ஒரு நம்பிக்கையோடு உள்ளே நுழைந்தான். நாய்கள் முறைத்தன.

தென்னங்கூரையில் பிண்ணப்பட்ட வீடு. வீட்டிற்குள்ளும் ஒரு லாந்தர். வெளிச்சம் போதுமானதாக இல்லை. ஒரு பாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒரு மூலையில் ஒரு பானை. அவ்வளவுதான். அதைத்தவிற அந்த வீட்டில் வேறு ஏதும் இல்லை. அவர் அந்த பானையில் கிடந்த தண்ணீரை பாதி வெட்டப்பட்ட ஒரு பிலாஸ்டிக் பாட்டிலில் எடுத்துக்கொடுத்தார். கைகள் நடுங்கின. தண்ணீர் உப்பாய் இருந்தது. லாந்தர் அணைவது போல எரிந்தது.

‘எங்க போவது தம்பி ?’

அவர் மதியை பார்க்கவில்லை. ஒருவேளை இவருக்கு கண் தெரியாதோ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் தெரிந்தது.

‘சிதம்பரத்துல இருந்து வரேன்…குத்தாலம் போவனும்’

‘அங்க இருந்து சைக்கிளையே வாரீகளா?’

‘ஆமாங்க ஐயா’

‘பாத்துப்போங்க சாமி. காலம் கெட்டுக்கிடக்கு’

‘சரிங்க ஐயா. நீங்க இங்க என்ன பண்ணுறீங்க…தனியாவா இருக்கீங்க’

‘இல்ல சாமி. நம்ம வீடு சீருகாழில இருக்குது, விவசாயங் செழியாம நிலத்தெல்லாம் வித்துப்புட்டு வேல கிடைக்காம இங்க சுடுகாட்டுல வேல பாக்குறேன். இன்னிக்கி போவ நேரமாச்சு. இந்த பஸ்ஸு சனியன் இருக்காது அதான் இங்க தங்கிடுவேன். எல்லாம் நம்ம புள்ளிங்க தான். பாசக்காரனுங்க…’

என்று நாய்களை பார்த்தார். அதுகளும் அவரை பார்த்தனர்.

மதி அவரிடம் போய் வருவதாய் கூறிக்கொண்டு வெளியே வந்தான். அவர் அவன் கையில் சில பிஸ்கட்டுகளை கொடுத்து நாய்களுக்கு போடச்சொன்னார். நாய்கள் அவனை பார்த்து வாலாட்டின. அவனை சூழ்ந்துக்கொண்டன. அவன் காலை நக்கின. மதி அவரிடம் நூறு ரூபாயை எடுத்து நீட்டினான். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார்.

‘எனக்கு என்ன சாமி, ஒரு நாளிக்கி ஒரு வேளையாவது சாப்டுறுவேன், அதுவும் இல்லாம இருக்கவங்களுக்கு குடுங்க’

இதுவே அவர் மதியிடம் பேசிய கடைசி வார்த்தைகள்.

இன்னும் ஐந்து கிலோமீட்டரில் மெயின்ரோடு வந்துவிடும். அடுத்த ஐந்து கிலோமீட்டரில் குத்தாலம் வந்துவிடும் என்று கூகுள் மேப்ஸ் காட்ட மிச்சமிருந்த கொஞ்சூண்டு சக்திகளை ஒன்று திரட்டி சைக்கிளை மிதித்தான். நாய்கள் வாலை ஆட்டி டாட்டா சொன்னன.

பகுதி 7: பிரியாணி

சைக்கிள் முழுவதுமாக இருளுக்குள் மூழ்கியது. பாதைகளில் முன்பு இருந்த சிறிய பவுர்ணமி வெளிச்சம்கூட இப்போது காணவில்லை. மீண்டும் அந்த ஓடை எங்கிருந்தோ வந்து சாலையின் பக்கம் சேர்ந்துக்கொண்டது. சாலையில் மணல் அதிகமாக இருந்த காரணத்தால் சுத்தமாக மதியால் மிதிக்க முடியவில்லை. மணி ஏழரையை கடந்துவிட்டது. சில இடங்களில் நிறுத்துவது ஆபத்தாக இருந்தாலும் நிறுத்தி ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் போனான். முன்னால் கேட்ட சாலை சத்தங்கள் கூட இப்போது கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த சாலைபோய் இதுக்கும்மேல் பாதை இல்லை என்பதைப்போல முடிந்துவிட்டது. மதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் கூகுள் மேப்ஸ் அந்த பக்கம் பாதை இருப்பதாய் காட்டியது. ஆனால் அங்கு ஓடை தான் இருந்தது. ஓடையை சைக்கிளில் கடக்க முடியாது கூடவே அந்த பக்கம் கரையும் தெரியவில்லை. மதிக்கு அழுகை வருவதுபோல இருந்தது. அந்த கரையிலேயே உட்கார்ந்தான்.

‘சைக்கிள் வாங்கி எத்தன வருசமாச்சு தம்பி?’ சைக்கிள் கடைக்காரர் சைக்கிளை உற்றுப்பார்த்துக்கேட்டார்.

‘ஒரு எட்டு வருசம் இருக்கும்னே…இன்னிக்கி மதியம் ரொம்ப தூரம் போறேன்…கொஞ்சம் பிட்டிங் பாத்துக்கொடுங்க’

மதி அன்று காலையிலேயே சைக்கிளை சுந்தரம் சைக்கிள் கடையில் கொடுத்துவிட்டிருந்தான். எல்லா போல்ட் நட் சரியாக இருக்கிறதா என்று அவ்வப்போது பார்ப்பது அவன் வழக்கம்.

‘சைக்கிள் இங்க நிறைய பேருக்கு வெறும் சைக்கிள் தம்பி…சில பேருக்குத்தான் அது ஒரு உயிரு…என்னத்தான் எருமைமாடு கணக்கா வண்டி வந்தாலும்…நம்ம சைக்கிள் மாதிரி வருமா?’

மதி ஏதும் பேசவில்லை. அவன் கண்களில் லேசாக கண்ணீர் வந்தது. இந்த சைக்கிள் எமோஷன் இவருக்காவது புரிந்ததே என்று தோன்றியது.

‘நீங்க சைக்கிள் வச்சிருந்திங்களா ணே???’

‘வச்சிருந்தேன்…செத்துப்போச்சு…இந்த கடைய முதல ஆரம்பிக்கிறதுக்காக பிரிச்சு போட வேண்டியதாப்போச்சு…ஆனா என்ன? அது செத்துப்போன நாள இப்போ எத்தன சைக்கிளுக்கு உயிர் தரேன் பாரு’ என்றார் சிரித்துக்கொண்டே. அவர் ஆழ்மனதில் உள்ள துக்கம் மதிக்கு மட்டுமே புரிந்தது. சுந்தரம் சைக்கிளை சரிபார்த்து முடித்தார்.

நிலவு மீண்டும் வெளியில் வந்துவிட்டு ஓடையில் பிரதிபலித்து.

மதி கரையில் மதி உட்கார்ந்திருக்க அவனை உரசிக்கொண்டு ஒரு பன்றி ஒரு முட்புதருக்குள் மிக வேகமாக நுழைந்தது. அவன் அந்த முட்புதரை நோக்கினான். யாரோ முட்களை வெட்டிப்போட்டு எதையோ மறைத்தது போல இருந்தது. ஒரு பெரிய குச்சியை எடுத்து அந்த புதரை விலக்கினான். அதன் வழியே ஒரு பாதை தென்பட்டது. ஒரு நிமிடம் யோசித்துவிட்டு சைக்கிளை அந்த பாதையில் இறக்கினான். இரண்டு பக்கமும் கருவேல மரங்கள். கொஞ்ச நேரம் பள்ளத்தில் உருள்வதுபோல சைக்கிள் உருண்டது. அதன் பின்னர் மேடாக இருந்தது. முட்கள் அவன் உடலில் அங்கங்கு கீறின. மூச்சைப்பிடித்துக்கொண்டு ஓட்டினான். சைக்கிள் இறக்கத்தில் இறங்கி ஏறி ஒரு தார்சாலையில் இணைந்தது.

வேகமான லாரிகள் போய் வந்துக்கொண்டிருந்தன. பயணிகள் பேருந்துகள் கடந்தன. அனைத்து விதமான வண்டிகளும் போய் வந்தன. மதி சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு சந்தோசத்தில் கத்தினான். புதிய உத்வேகத்துடன் மீண்டும் சைக்கிளை வேகமாக ஓட்டினான். இன்னும் ஐந்து கிலோமீட்டரில் குத்தாலம்.

மதியின் சைக்கிள் குத்தாலத்தில் அவன் அறையில் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் வாசலில் நின்றுக்கொண்டிருந்தது. மதி மேசையில் இலைப்போட்டு நீரை தெளித்துக் கழுவிக்கொண்டிருந்தான். சர்வர் ஒரு பிளேட்டில் சிக்கன் பிரியாணியை அடைத்து வந்து வைத்தார். லெக் பீஸ் துருத்திக் கொண்டிருந்தது.