Community

தன்னம்பிக்கை கால்பந்து

             கால்பந்து

சுற்றும் போது ஒவ்வொரு இறக்கையும் தனித்தனியாகத் தெரிந்தது. இருபது நாட்களாக அதையே பார்த்துக் கொண்டிருக்கிறான். மனித குரல்களுக்கு மரத்துப் போயிருந்த காதுகளுக்கு அதன் முனகல் மட்டும்
தெளிவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. பகலும் இரவும் அதன் முனகல், சுதி மாறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது. தன்னைப்போல் ஒரே இடத்தில் இருப்பதன் வேதனையை புலம்புகிறதோ? நீண்டிருந்த அந்த ஹாலில் பதினைந்து பதினைந்தாய் முப்பது படுக்கைகள். ஒவ்வொரு படுக்கையின் மேலும் இதே வேகத்தில் மின் விசிறிகள்.
“யய்யா, ஒரு வாய் காப்பி குடிய்யா”
டம்ளரோடு நின்றிருந்தாள் அம்மா. வயதின் வரைபடங்கள் உடல் முழுதும். எலும்பு தோல் போர்த்தப் பட்டிருந்த முகம். உயிரற்ற கண்கள். கண்கள் முழுதும் வேதனை.
தலையணையைக் கட்டிலின் கம்பி மீது சாய்த்து வைத்தான். கால்களை… இல்லை… காலைக் கட்டிலில் மிதித்து உடம்பைத் தூக்கி தலையணையில் முதுகைச் சாய்த்தான். இடது கால் முட்டோடு முடிந்து போயிருந்தது.

இனிப்பாய் இருந்தது டீ… காபி தான் அவனுக்குப் பிடிக்கும். அதன் மணம் , அதன் ருசி, குடித்த பின்பும் நாக்கில் இருக்கும் அதன் கசப்பு. ரசித்து குடிப்பான். ஆஸ்பத்திரி வாசலில் உள்ள கடையில் கேனில் டீ மட்டும் தான் வைத்திருப்பார்கள். முதல் நாள் வேண்டாமென்றான். காபி வாங்க அம்மாவை அலைய விட மனசில்லாமல் டீக்கு பழகிக் கொண்டான். "இனி எல்லாம் இப்படித்தானோ " என மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது.

“ராத்திரி தங்குறதுக்கு மச்சான் வருவான். அம்மா போய்ட்டு காலைல எட்டு மணிக்குள்ள வந்துருவன். நாளக்கி டிஜ்சார்ஜ் பண்ணிருவாங்க. வூட்டுக்கு போயிரலாம்”
தலையை ஆட்டினான்.
அம்மாவின் கண்களில் நீர் முட்டியது.திரும்பிக் கொண்டாள். அழுவது அவளுக்குப் பிடிக்காது. கேன்சரால் அப்பா இறந்த போது கூட அவள் ரொம்ப அழவில்லை. கடைசி இரண்டு நாட்கள் நோயின் உக்கிரத்தால் வலி தாங்காமல் அப்பா அழுதபோதுதான் அவளும் குலுங்கி அழுதாள். அதுவும் தான் நேசித்த, தன்னை நேசித்த உயிரின் வலியை உணர்ந்தே அழுதிருப்பாள்.

மீன் குழம்பு என்றால் அதுவும் சாளை மீன் குழம்பு என்றால் வயிறு புடைக்கச் சாப்பிடும் கணவன் இரண்டாவது முறை வேண்டாம் என்று எழுந்த அன்றே கேட்டாள்.
“ஏங்க, வயிறு சரியில்லயா?”
“என்னமோ தெரியல, வயிறு உப்பிட்டு இருக்கு. ரெண்டு செலுசில் போட்டா சரியாயிரும் "
" டாக்டர்ட்ட போமா?”
“ஒன்னும் வேண்டா, ஒஞ்சோலியப் பாத்திட்டு போக்கி”
அப்பா ஆசையாய் இருக்கும் போது அவளை “வாக்கி, போக்கி” என அழைப்பது வழக்கம்.
தொடர்ந்து சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்ட போது தான் டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போனாள்.
டெஸ்ட் பண்ணச் சொல்லி சீட்டு எழுதிக் கொடுத்தார்.
எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சீட்டை கிழித்துப் போட்டுவிட்டு அவன் வழக்கம் போல கடலுக்குப் போக ஆரம்பித்தான்.
வர வர சாப்பாடு குறைந்து கொண்டே வந்தது.
வாந்தி வந்த போது திரும்பவும் அதே டாக்டரிடம் போக வெட்கப்பட்டு வேறு டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனாள். டெஸ்ட் செய்து விட்டு இரப்பையில் கேன்சர் என்றார். “எனக்கு ஏன் இந்த நோய்?” என இடிந்து போய் விட்டான். அம்மா இடிந்து போய் விடவில்லை. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு போனாள். கீமோதெரபி என்ற பெயரில் உடலைக் கதிர்களால் துளைத்தெடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு லட்சம் வரை செலவானது. மாதம் இருமுறை போக வேண்டியிருந்தது.
சேமிப்புகளை மருத்துவமனை தின்று கொண்டிருந்தது. அழையா விருந்தாளியாய் வந்த கடன் வீட்டில் நிரந்தரமாய் குடியேறியது. "காப்பாத்த முடியாது. வீணா பணத்த செலவழிக்காத " என உறவுகள் சொன்னபோதும் இறுதி வரை புற்றுநோயோடு போராடினாள்.

பாலிடெக்னிக் முதல் வருட படிப்பை முடித்து விட்ட திலீபன் வீட்டின் சூழ்நிலை கருதி வலையைக் கையில் எடுத்தான். புற்றுநோய் அவனை கடனாளி ஆக்கிவிட்டு அப்பாவை சடலமாகத் தந்து சென்றது.

கடல்.
கட இல்.
கடக்க முடியா கடலில் கடனோடு இறங்கினான். பெருஅலைகளற்ற வங்கக் கடலில் முடிந்த வரை உழைத்தான். மற்ற மீனவர்களைப் போல் குடி கும்மாளம் சீட்டாட்டம் என வாழ்வை கொண்டாட முடியாமல் நத்தை போல சுருங்கிக் கொண்டான். ஒரே பொழுதுபோக்கு கால்பந்து மட்டுமே. அவர்கள் தெரு கால்பந்து அணியின் முன் கள வீரன்.
கால்பந்து விளையாடும் போது எந்தப் பிரச்சனைகளும் தெரிவதில்லை. … அதனாலேயே அவனுக்கு ரொம்ப பிடிக்கும். விளையாடும் போது எதிரணியினர் கோல் அடித்து விட்டால் சட்டையைக் கழற்ற வேண்டும். சீருடை இல்லாத காரணத்தால் தங்கள் அணியினரைக் கண்டறிய இப்படி ஒரு ஏற்பாடு . இவன் பெரும்பாலும் சட்டையைக் கழற்றாமலே விளையாடுவான்.

அடுத்த நாள் மேட்ச் க்காகப் பயிற்சியில் இருந்த போது தான் கிளாஸ்டன் கேட்டான்
“மாப்ள, நாளைக்கி போராட்டத்துக்கு
எங்க இருந்து வருவ?”
" மாதா கோயில் ல இருந்து "
“நா திரேஸ்புரத்தல இருந்து வருவேன் உன்னிய எப்டி பாக்க?”
“எபடியும் பழைய போஸ்ட் ஆபிஸ் வழியாத் தான வரனும்.”
“எப்டியும் அம்பதாயிரம் பேர் வருவாங்கல, அந்தக் கூட்டத்துல உன்னிய எப்டி பாக்குறது”
"போன் அடி… சேந்து போவோம் "
" முடிச்சிட்டு சாந்திரம் மேட்ச்க்கு கரெக்டா நாலு மணிக்கு வந்திருவோம் மாப்ள "
"சரிமாப்ள "

அந்த தாமிர தொழிற்சாலை முதலாளிகளுக்கு கட்டு கட்டாய் பணத்தையும் அந்த நகர மக்களுக்கு நோய்களையும் வாரி வழங்கிக் கொண்டிருந்தது.

குடும்ப விழா மாதிரி குடும்ப போராட்டமாய் குடும்பம் குடும்பமாய் கூட்டம். குழந்தைகள் கருப்புச் சட்டை, பதாகைகள் ஏந்தி எதற்கென்று தெரியாமலே உரக்க கோஷமிட்டனர். தாய்மார்கள் கையில் பிஸ்கட் பாக்கட், தண்ணீர் கேன் கொண்டு வந்திருந்தனர். உரக்க கோஷமிட்டுக் கொண்டு உரக்க பேசிக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்று கொண்டிருந்தனர். இடையிடையே வைத்திருந்த தடுப்புகளை அகற்றியபடி முன்னேறிக் கொண்டிருந்தது கூட்டம்.

இவன் ஆட்சியர் அலுவலகம் போய்ச் சேர்ந்த போது அலுவலக கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருந்தன. அங்கங்கே வாகனங்கள் தீ எரிந்து கொண்டிருந்தது.

“சுடுறான்… போலிஸ்காரன் சுடுறான்… ஓடுங்க” என்றபடி முன்னே சென்ற கூட்டம் திரும்பி ஓடி வந்து கொண்டிருந்தது.

“வா மாப்ள ஓடிருவோம்” திலீபனை இழுத்தான் கிளாஸ்டன்.

உடனே ஓட மனமில்லாமல் அருகிலிருந்த கல்லின் மீது ஏறி உள்ளே பார்த்தான்.

உண்மையிலேயே போலிசார் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தனர்.

“ஆமால, சுடுறானுவ… ஓடு” என்றபடி திலீபன் திரும்பி ஒடும் போது இடது தொடையில் ஏதோ ஆணி குத்திய மாதிரி இருந்தது. இரண்டு அடி ஓடியிருக்க மாட்டான், காலை எடுத்து வைக்க முடியவில்லை. பேண்ட் ஈரமாகிய மாதிரி இருந்தது. கீழே குனிந்து பார்த்தான். பேண்ட் இரத்தத்தால் நனைந்திருந்தது.

“மாப்ள… என்ன?”

"தெரில மாப்ள… நடக்க முடில " என்றவாறே மயங்கி விட்டான்.

கிளாஸ்டன் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையில் சேர்த்தான். நரம்புகள் சிதைந்து விட்டதால் காலை எடுத்தால் தான் உயிர் பிழைக்க முடியும் என்ற மருத்துவர்கள், இடது காலை குண்டுதுளைத்த இடத்திலிருந்து அகற்றி விட்டனர்.

வீல்சேரிலிருந்து ஆட்டோவில் ஏறும் போது சுற்றிலும் நின்றவர்களின் பார்வையிலிருந்த இரக்கம் இவனை அமிழ்த்தியது. மருத்துவமனை வாசம் காற்று முழுவதும் . கண்ணை மூடிக்கொண்டான்.
இனி குடும்பத்தை எப்படி காப்பாற்ற முடியும்? தங்கை திருமணம்? கடன்? என கேள்விக்குறிகள் இமைக்குள்ளும் குத்திக் கொண்டிருந்தன.
துப்பாக்கிச் சூட்டில் செத்திருந்தால் கூட இருபது லட்சம் ,தங்கைக்கு அரசு வேலை என குடும்பம் ஓரளவு தாக்கு பிடித்திருக்கும். சே… நொண்டியாய் வாழ்ந்து என்ன செய்ய?.. கடலுக்கு இனி போக முடியாது. வேற வேல தெரியாது. காலில்லாம இனி புட்பால் கூட வெளயாட முடியாது. வெளயாடாம இருக்குறத விட சாவலாம் .
இப்ப செத்தா இதெல்லாம் கிடைக்குமா?

ஆமா…, தற்கொலை மாதிரி இல்லாம விபத்து மாதிரி இருந்தா பரிதாபப்பட்டு அரசு வேலையும் பணமும் கிடைக்கும். அது தான் வழி. நைட் வீட்ல மாடிப்படியில இருந்து கீழே விழனும். விழுற இடத்துல அருவா மனைய வச்சி கழுத்த வெட்டிரனும். எக்காரணம் கொண்டும் பொழச்சிறக்கூடாது. கழுத்துல வெட்னா ரொம்ப வலிக்குமோ? சுவருல முட்டி மண்டை உடஞ்சி சாவற மாதிரி செஞ்சிறலாமா? கை நரம்ப வெட்டினா பொழக்க வாய்ப்பிருக்குமா? ஏதாவது ஒரு வழி. எப்படியும் இன்று இரவோடு எல்லாம் முடிந்துவிடும். அடைக்கப்பட்ட அறையிலிருந்து விடுவிக்கப்பட போராடும் பூனையாய் மனசு அரற்றிக் கொண்டிருந்தது. உடல் அமைதியாக ஆட்டோவில் இருந்தது.

ஆட்டோவில் இருந்து இறங்க கைகொடுக்க வந்த தங்கையின் கையைத் தட்டி விட்டான். தெரு நண்பர்கள் ஓடி வந்தனர். அதற்குள் இறங்கிவிட வேண்டுமென்ற அவரசத்தில் இறங்கும் போது கால் தட்டி கீழே விழுந்து விட்டான். உலகம் நின்று விட்டது. சத்தம் எதுவும் கேட்கவில்லை. அவமானம் மட்டுமே சுனாமியாய் அந்த தெருவை மூழ்கடித்தது. கையை ஊன்றி எழுந்திருப்பதற்குள் நண்பர்கள் தூக்கி விட்டனர்.

“ஒண்ணுமில்ல மாப்ள… . , தைரியமாயிரு”

பதிலேதும் சொல்லாமல் நொண்டியடித்தபடி வீட்டுக்குள் ஏறினான்.
தெரு முழுவதும் வீட்டுக்குள் . அன்புதான். ஆனால் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பது போல் ஒவ்வொரு சொற்களும் பிறருக்கு ஒன்றும் தனக்கொன்றுமாய் அர்த்தம் சொல்லியபடி காற்றை கறைபடுத்திக் கொண்டிருந்தன.
" மைனி… கட்ட கால் வைக்கிறதுக்கு கேட்டீங்களா" அத்தை அக்கறையோடு கேட்டாள்.
“மதுரையில சொல்லிருக்கு” என்றதோடு நிறுத்திக்கொண்டாள் அம்மா.
வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. வெளியே வந்தான்.
“எங்கய்யா போற?”
"கிரவுண்ட்டுக்கு " என்றபடி வலது காலால் வேகமாக வந்தான்.

மைதானத்தில் நடப்பவர்கள், விளையாடுபவர்கள் என யாரிடமும் போராட்டம் எந்தவித பாதிப்புகளையும் கொடுத்ததாகத் தெரியவில்லை. தனக்கு மட்டும் தானா?இறந்த 13 பேருக்கு கூட இல்லை. அவர்கள் குடும்பத்திற்கு தான் பாதிப்பு . அவனைக் காட்டி சிலர் பேசுவது தெரிந்தது. விறுவிறுவென புட்பால் விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்கு போய் விட்டான். பந்தைப் பார்த்தவுடன் மனம் இலேசானது. நண்பர்கள் பார்த்து புன்னகைத்தபடி ஓடி வந்தனர். தொடர்ந்து விளையாடச்சொல்லி சைகை காட்டினான். தங்கள் அணி ராஜா , பந்தை உருட்டிக்கொண்டு கோல் போஸ்ட்டை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான் . போஸ்ட் டை நோக்கி அடித்தான். எதிரணி பார்த்திபன் காலை நீட்டி தடுக்க… பந்து வெளியே இவன் நிற்கின்ற இடத்தை நோக்கி பறந்து வந்தது. கால் பரபரத்தது. “அழகா கோல் அடிச்சிறலாமே”. வலது காலை உயர்த்த நினைக்கும் போது தான் ஞாபகம் வந்தது. ஐயோ, நம்மால் முடியாதா? தன்னையறியாமல் சிறிது முன்னே வந்து தலையால் ஓங்கி முட்டினான். பந்து கோல் போஸ்ட்டுக்குள் போய்க் கொண்டிருந்தது.