Community

ஒரு மழை நாளில்

Uவெயில் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது…

காலையில் அவசர அவசரமாக முகம் வழித்ததில், தாடை வியர்வை பட்டு எரிந்து கொண்டிருந்தது. கர்சீப்பை எடுத்து துடைத்துக்கொண்டேன். “பெரியார் பேருந்து நிலையத்தில்” கசகசவெனக் கூட்டம், பேருந்துகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. ஏறுவோர் ஏறி, இறங்குவோர் இறங்கி என ஒரே பரபரப்பு…

‘இது புதூர் போகுதா.? அழகர் கோவில் போகுதா.?’ என படிக்க தெரியாத பெருசுகள் விசாரித்துக்கொண்டிருந்தனர். ஆனால், நின்று பதில் சொல்ல கூட பலருக்கு அவகாசம் இல்லை, எல்லோரும் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முகம் சுளித்த பெருசுகள் “தம்பி” என இன்னொரு ஆளைக் கேட்க ஆரம்பித்தனர்…
சிலர் “அஞ்சுருபா… அஞ்சுருபா” என வெள்ளரி, கொய்யா, பாப்கார்ன் பாக்கெட்டுகளை விற்று விடும் நோக்குடன் பேருந்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள்…

“மாப்ள நேத்து குமுதா எனக்கு "வாட்ஸ்அப்"ல மெசேஜ் பண்ணாடா” என ஒரு கல்லூரி மாணவன் பக்கத்தில் தனது நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். இப்படி பேருந்து நிலையத்திற்கே உரிய காட்சிகள் நடந்து கொண்டிருக்க, இவற்றில் மனம் செல்லாமல் நான் ஒருவித பதட்டத்தோடே இருந்தேன். மனைவி கமலா பிரசவத்திற்கு தாய் வீடு சென்றிருந்தாள்.தலைப் பிரசவம் வேறு.
மருத்துவனையில் அனுமதித்து கடைசி முறையாக ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தை சுற்றிக்கொண்டிருப்பது தெரியவர,

“இனி அறுவைசிகிச்சை பண்ணிதான் குழந்தையை எடுக்க முடியும்” என்று விட்டார் மருத்துவர். அத்தை போன் செய்து சொன்ன போது நொந்து விட்டேன்…
அவசர அவசரமாக ஊருக்கு கிளம்ப ஆரம்பித்துதான் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருக்கிறேன். அலைபேசி அலறியது. ‘பெயர் காட்டலில்’ அத்தை. அவசர அவசரமாக எடுத்தேன் அழைப்பை…

“ஹல்லோ அத்த… சொல்லுங்க கமலா எப்படி இருக்கா…?”

“மாப்பிள… இப்பதான் கமலாவ ஆப்ரேசன் பண்ணக் கூட்டிட்டுப் போயிட்டு இருக்காங்க. எனக்கு என்னமோ பயமா இருக்கு மாப்பிள…"

“அத்த… பயப்படாதிங்க ஒன்னும் ஆகாது, நான் வந்துட்டே இருக்கேன்…”

“சரிங்க மாப்பிள… சீக்கிரம் வாங்க… எனக்கு பதட்டமா இருக்கு…"

"ஒன்னும் ஆகாதுத்த… பஸ் ஸ்டாப்ல தான் நின்னுட்டு இருக்கேன்; இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன்…” என்றபடி அலைபேசியை அணைத்தேன்… அத்தைக்கு ஆறுதல் சொன்னாலும், எனக்கும் உள்ளுக்குள் அத்தையின் பதட்டம் தொற்றிக்கொண்டது… கடை ஓரத்தில் சிலர் புகைத்து கொண்டிருப்பதை பார்த்தேன். பழக்கம் இல்லையென்றாலும், சிகரெட் பிடிக்கவேண்டும் போல இருந்தது. பக்கத்தில் உள்ள கடைக்கு திரும்ப எத்தனித்தேன்.

“அண்ணே…!!" திரும்பினேன்… அழுக்கு உடையில் ஒரு சிறுமி என்னை நோக்கிக் கையை நீட்டியபடி இருந்தாள்…!

“ச்சை… இது வேற… ஏய் போ அந்த பக்கம்" இன்னும் அந்த சிறுமி என்னை நோக்கி கையை நீட்டிக்கொண்டு தான் இருந்தாள். என்னைப் போல நிறைய நிராகரிப்பு ஆசாமிகளை அந்தச் சிறுமி சந்தித்திருக்க கூடும்…

“இப்போ போறியா இல்லையா…?" என்றபடி நான் கையை ஓங்க. அவள் ஓடிப்போய் ஒரு கூரையின் கீழ் நின்று கொண்டாள். நான் சிகரெட்டினைப் பார்த்தேன். என்னை புகைக்காதே, நான் உன் உடலுக்குக் கேடு என்றது. தூக்கி குப்பை தொட்டியில் வீசி விட்டு, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

திடீரென வானம் கருத்தது. காற்று வீச ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்சமாய் காற்றின் வேகம் கூட ஆரம்பித்தது. திடுக்கென… அந்த டீக்கடையின் தகர கூரையை, காற்று இடமாற்றிப் போட்டது. தூறலில் ஆரம்பித்த மழை, மெது மெதுவாய் பெருமழையானது. காற்று சற்று பலமாகவே வீச ஆரம்பித்தது. காற்றில் மழையின் கரங்கள் நடனம் புரிய ஆரம்பித்திருந்தது. மனிதர்கள் நனைந்தார்கள்…! மேலும் நனையாமல் இருக்க ஓட ஆரம்பித்தார்கள். அது இன்னும் நனைத்தது.! ஒரு மரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்தது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு, கடை நோக்கி மழையில் ஓடி வந்து டீயும், சிகரெட்டும் வாங்கினார்கள்.

டமார்…!! தூரத்தில் இடி விழுந்தது. அதன்முன் மின்னல் வந்தது… ஏற்கனவே , டீக்கடை வாசலில் இருந்த ஒருவர் ஓடி 'ஆம்னி’க்குள் ஏறி, கதவை மூடிக்கொண்டு வண்டியைக் கிளப்பிப் போனார். சற்று தூரத்தில் இருந்த கல்யாண மண்டபத்தில் பந்தல் துணி காற்றில் அலைகிறது…

“ச்சே… நேரங்கெட்ட நேரத்துல இதென்ன…?” என்றோ,

“தொப்பலா மழையில நனைஞ்சுட்டேன், நாளைக்கு காய்ச்சல் வந்தா என்ன பண்றது…?” என்றோ,

“வீட்டு வாசல்ல துணி காயப்போட்டிருந்தேன்… இப்படி திடீர்னு மழை பெயஞ்சுடுச்சே…” என்றோ சிலர் அலுத்துக்கொள்ள…
இப்படி சுற்றிலும் பல குரல்கள்.

“ஹேய்…!!” என சத்தம்… நான் திரும்பி பார்த்தேன்… அவள் தான்… அந்த சிறுமி தான் மழையில் ஆடிக்கொண்டிருந்தாள்… அந்த மழை அவளுக்காகவே பெய்ததை போல… அவளை முழுக்க நனைத்திருந்தது… வானத்தை நோக்கி முகத்தை தூக்கி, வாயை அகல திறந்து மழைத்துளியை வாய்க்குள் வாங்கிக்கொண்டாள்… கைகளைக் குவித்து மழை நீரை கைக்குள் சேகரித்து அருந்தினாள்…! வான்மழை அமுதம் போல அவள் தொண்டைக்குழியில் இறங்கியது. ஒருமுறை பரவசத்தில் உடம்பை உதறிக்கொண்டாள்.

‘ஆடும்மா… ஆடு…!!’ என அந்த மழை அவளுக்காகவே இசை மீட்டியது போல, கைகால்களை அசைத்து ஆடிக்கொண்டே, மழை நீரில் சுற்றி சுழன்று குதித்துக் கொண்டிருந்தாள்…!!

அவள் மழையில் போடும் ஆட்டத்தை எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்… என்னை போல எல்லோரும், இழந்து போயிருந்த எங்கள் இளமைக்காலத்தையோ, அத்தனையும் மறந்து ஆடி விட முடியாத இயலாத்தனத்தையோ, நெஞ்சில் எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்க கூடும். அலைபேசி ஒலித்தது.

“ஹலோ"… “மாப்ள ஆப்ரேசன் நல்லபடியா முடிஞ்சது. உங்களுக்குப் பொண்ணு பொறந்துருக்கு மாப்ள…!” என்றார் அத்தை சந்தோசம் பொங்க…
என் மனதிற்குள் ஏதோ ஒன்று முறிந்து விழுந்தது, உள்ளுக்குள் ஏதோ ஒன்று நெகிழ்ந்தது. அவளின் ஆட்டத்தைத் தடை செய்தபடி ‘பாம்…’ என அலறிக்கொண்டு, பேருந்து ஒன்று வந்தது. அவள் பதறி விலகி கூரைக்கடியில் ஒதுங்கிக்கொண்டாள்.

நான் போக வேண்டிய பேருந்து தான். நான் மழையைப் பொருட்படுத்தாமல் நடந்தேன்… அவள் அருகில் சென்று நின்றேன். அவள் என்னை ஏறிட்டுப் பார்த்து பழக்கதோசத்தில் என்னை நோக்கி கைகளை நீட்ட… நான் சட்டைப்பையில் இருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவள் கைகளில் திணித்து ஓடிப்போய் பேருந்தில் ஏறிக்கொண்டேன்…! ஜன்னல் வழியே அவளைப் பார்த்தேன். அவள் என்னை நோக்கி திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்க… பேருந்து கிளம்ப ஆரம்பித்ததும், என்னை நோக்கி கைகளை அசைத்தாள். பின் அவளைக் கடந்தும் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் மறுபடியும் மழையில் ஆட ஆரம்பித்திருந்தாள்…! இப்போதைக்கு அந்த இரண்டு நூறு ரூபாய் பணத்தை விட அவளுக்கு மழை முக்கியம்…!! நான் புன்னகைத்தேன்…!!!

  • அருள். ஜெFB_IMG_1593227360508