Community

இயற்கை மீட்டெடுத்த தலைமகள்

Continuing the discussion from About the சிறுகதை category:

   ஜன்னலை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் சஞ்சனா. வெளியே மழை அடித்து ஊற்றிக் கொண்டு இருந்தது. ஜன்னலுக்கு அப்பால் எதைப் பார்க்கிறாள் என்று சஞ்சனாவிற்கே தெரியவில்லை. மின்வெட்டு இல்லாத மழையா? எல்லா மின்விளக்குகளும் அணைந்தன. ஆனால் சஞ்சனாவின் பார்வையில் ஒரு சலனமும் இல்லை. மின்வெட்டு அவளிடம் ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. 4 மணி நேரம் பெய்த மழைக்கு முழு சாட்சி அவளின் வெறித்த பார்வை மட்டுமே. அவளது அம்மா சாரதா இவளது அறைக்குள் வந்தாள். 

“சஞ்சு! இப்படிப் பேய் மழை கொட்டுதேடி! ஜன்னல் பக்கத்துல உட்காராதே! இடி மின்னல் ஏதாவது வரப் போகுது!”

நெஞ்சுலேயே பெரிய இடியைச் சுமந்தாச்சு; இனி தலைல விழறது தான் பாக்கி என்று மனது பதில் சொல்லியது. வெளியே பதிலேதும் இல்லை.
“மெழுகுவர்த்தி எடுத்திட்டு வரட்டுமா?”
இதற்கும் பதில் வராது என்று உணர்ந்த சாரதா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே போனாள். மழைக்குப் போட்டியாய் இவளது நினைவுகளும் சுழற்றி அடித்தன. சோலைவனமாய் இருக்க வேண்டிய என் வாழ்க்கை இப்படிப் பாலைவனமாகி விட்டதே? இதோ அதோ என்று விவாகரத்து தீர்ப்பும் போன வாரம் வந்து விட்டது. அவளது அழுகையின் மிச்சம் தான் இந்த மழையோ என்னவோ! தொடர்ந்து நான்கு நாட்களாக மழை. சஞ்சனாவிற்கு மனது ஆறவே இல்லை.

"எவ்வளவு முயற்சிகள்? எத்தனை வலிகள்? எத்தனை அடிகள்? பகீரதன் போல் எத்தனை பிராயத்தினங்கள்? திருமணத்தின் முக்கியப் பங்கான தாம்பத்ய உறவையே நீ மறுத்து, போக்குக் காட்டிய போது, குழந்தையைப் போல் புரிய வைக்க முயற்சித்தேனே! சைக்கோவைப் போல் கத்தியைக் காட்டி மிரட்டும் போதெல்லாம் என் உயிர் துடிக்குமே! கோப வெறியில் எந்த நிமிடம் எதைச் செய்வாயோ என்று மனம் பதை பதைக்குமே! என் உடல் உன் அடிகளால் வலித்தது. என் மனமோ உன் அமிலச் சொற்களால் வதங்கியது. எவ்வளவு கெஞ்சி இருப்பேன்? கவுன்சிலிங்கிற்கு வா என்று. பைத்தியக்கார ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொல்றா என்று உன் அம்மாவின் குரல் மட்டும் தான் உனக்கு ஒலித்ததா? இரண்டு வருடம் நீ கொடுத்த டார்ச்சர் வாழ்க்கைக்குப் பிறகும் உன்னோடு, உன்னை மனிதனாக்கி வாழக் கதறி அழுதேனே! உடல் சுகத்திற்கென்றா நினைத்தாய்? முட்டாள், தலை சாய்க்க ஒரு தோள்; நெஞ்சம் கொள்ள அன்பு அவ்வளவு தான்.

கடைசியில் கொலை, தற்கொலை என்று ஆர்ப்பாட்டம் செய்து, என் விரல் உடைத்து, ஆபாசமாகப் பேசி, என் குடும்பத்தைத் தரம் தாழ்த்தி, மிருகத்தையே மிஞ்சி விட்டாயே! கோர்ட் கொடுத்த இந்த ஆறு மாதப் பிரிவாவது உன்னை மாற்றும் என்று நினைத்தது என் பிழை தான். எப்படித் தைரியமாக, சந்தோஷமாக இருந்தவள் நான்? என் சிறகொடித்து இப்படி மூலையில் உட்கார வைத்து விட்டாயே!" --விட்டால் வெடித்து விடும் நெஞ்சம் செல்போன் அழைப்பில் கலைந்தது. தோழி ரம்யா தான். 

“சஞ்சு! நியூஸ் பார்த்து இருப்பே இல்லே, சென்னையே வெள்ளக்காடா இருக்கு; நீ எங்கே இருக்கே?”
“வீட்டுல தான் இருக்கேன், சொல்லு!” என்று சுரத்தில்லாமல் சொன்னாள்.
"கூவம் ஆறு வழிஞ்சு ஓடுதடி, முக்கால்வாசி ஏரியாவில் வீட்டுக்குள்ளே தண்ணி வந்திடுச்சு; ஏரி எல்லாம் திறந்து விட்டுட்டாங்களாம்; மக்கள் எல்லாம் சோறு தண்ணி இல்லாமத் தவிக்கிறாங்க, நம்ம ஃ பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அவர்களுக்குத் தேவையானதைத் தரலாம்னு இருக்கோம், நீயும் வரியாடி?"என்றாள் ரமயா.

“என் நிலைமை தெரிஞ்சும் ஏண்டி படுத்தி எடுக்கிறே? என்னையும் இந்த வெள்ளம் அடிச்சிட்டுப் போகலைன்னு இருக்கேன்; போனை வை!” --பதிலுக்காகக் காத்திராமல் துண்டித்தாள்.

ரமயா நினைத்தாள்: “கல்லூரியில் எப்படிப்பட்ட பொண்ணு இவ! N C C யில் சிறந்த கேடட் வாங்கின பொண்ணுன்னு இப்ப சொன்னா யாராவது நம்புவங்களா? கள்ளம் கபடம் இல்லா இவ சிரிப்புக்கு ஆண்டவன் இவ்ளோ பெரிய தண்டனை கொடுத்திருக்க வேணாம்!”

 சஞ்சனாவின் வீட்டுக்கதவு படபடவெனத் தட்டப்பட்டது. பக்கத்து வீட்டு ஆன்ட்டி," என் பொண்ணுக்குத் திடீர்ன்னு பிரசவ வலி வந்துடுச்சுமா; எந்த வண்டியும் இந்த வெள்ளத்துல வர மாட்டேன்கிறாங்க; ஆம்புலன்ஸ் கூட வர மாட்டேன்கிறாங்க; மாப்பிள்ளை வேறே ஊருல இல்லை; என்ன பண்றதுன்னே தெரியலை மா!" என்று ஓவென்று அழுதார். வயிற்றைப் பிசைந்தது சஞ்சனாவிற்கு. உடனே ரம்யாவை அழைத்து நிலைமையைச் சொன்னாள்.

   ரம்யா உடனே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று எல்லா சமூக வலைத்தளங்களிலும் போட, ஹெலிகாப்டர் வந்து அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் சென்றது. 

“மவராசி! நீ நல்லா இருக்கணும்மா!” என்ற அவரது வார்த்தையை விட நன்றி பொங்கிய அந்தக் கண்கள் மனதிலேயே இருந்தது சஞ்சனாவிற்கு. 6 மாதங்கள் ஆகி விட்டன சஞ்சனா வெளி உலகத்திடம் சகஜமாகப் பேசி. என்ன தோன்றியதோ ரம்யாவை அழைத்து, “வாடி! நம்மால் முடிஞ்சதைச் செய்வோம்!” நிறைய மக்களுக்கு நம்ம உதவி தேவைப்படும் போல!" என்றாள்.

முகநூலில் தேவையானவர்கள் பற்றிய விபரம் அறிந்து தோழிகள், நண்பர்களிடம் முடிந்த உதவியைப் பெற்று மக்களுக்கு உணவு, மெழுகுவர்த்தி, போர்வை, தண்ணீர் என்று குழுக்களாகப் பிரிந்து எல்லாவற்றையும் சேர்த்தார்கள். அனைத்தையும் மறந்து சஞ்சனா பொறுப்பேற்று முன் நடத்தினாள். பெண்களுக்காக அவள் திரட்டிய உள்ளாடைகள், சானிடரி நேப்கின் போன்றவை பல உள்ளங்களை ஈரமாக்கின. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பாதுகாப்பு நடவடிக்கையாக நிலவேம்புக் குடிநீர் தரவும் சஞ்சனா யோசனை கூறிச் செயல்படுத்தினாள். 5 நாட்கள் பழைய சஞ்சனாவாகவே மாறி விட்டாள். ரம்யா சொன்னாள்: "வெள்ளம் வந்து பல பேர் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருச்சு இல்லே; இவ்ளோ நாள் சேர்த்து வச்ச பணம் , பொருள் எல்லாம் போச்சு! ,இவர்களுக்கெல்லாம் இனி வாழ்க்கையே அவ்ளோ தான்!"

“அப்படிச் சொல்லாதடி! புனரமைச்சுக் கொடுத்தா பழைய வாழ்க்கையை விட அருமையா வாழலாம்; இயற்கைச் சீற்றத்துக்கு இவங்க என்ன பண்ணுவாங்க?” என்று சஞ்சனா சொன்னாள்.

“உன் வாழ்க்கையில் வந்ததும் ஒரு இயற்கைச் சீற்றம் தான்டி! அதற்கு நீ பொறுப்பேற்க முடியாது, ஏற்கெனவே அதற்கான வலியை அளவுக்கு அதிகமாகவே அனுபவிச்சிட்டே! தங்கத்தைச் சேத்துல போட்டாலும் தங்கம் தங்கம் தான். இனி அதைப் புனரமைக்க வேண்டியது உன் பொறுப்பு!” என்று ரம்யா அழுத்தமாகச் சொன்னாள். சஞ்சனாவிடம் மௌனம். இந்தத் தடவை பொருள் பொதிந்த மவுனம்.

 இந்த இயற்கை நம் தலைமகளையும் மீட்டெடுத்து விட்டாள்.

        &&&&&&&
1 Like