கல்லோ? கடவுளோ?
ஒரு நாள் இளங்காலைப் பொழுது
இறைவன் கனவிலெதிர் உதித்த பொழுது
ஏதேதோ பிதற்றினேன்!
எதுவும் என் நினைவிலில்லை.
இறுதியாகத் துணிந்து கேட்டேன்
இறைவனும் நல் பதிலை ஈந்தான்.
கல் என்பார்; கரையாதென்பார்!
கடும் விமர்சனங்கள் கண்டுமக்கு
கடுகளவும் சுணக்கமில்லையோ?
கண நேரமும் தயக்கமின்றி
கடவுளவன் பதிலுறுத்தான்.
உருகுதல், கரைதலின்மை
உறுதியான கடினத்தன்மை
கல்லதனின் குறைதான் - உண்மை!
கருத்துதனில் குற்றமில்லை!
குறையதுவே நிறைதானென்ற
கூற்றினை நீ உணர்வாய் இன்று!
சுயமாக உருமாறாமை
சுத்தமான கல்லின் ஆளுமை!
அதுவே அக்கல்லின் பெருமை
அறிவாய் நீ அதனின் அருமை!
கரைப்பார் கரைத்திட்டால்
கல்லிலும் கனிவு காண்பாய்!
கரைந்தோடும் கனிந்த உள்ளம்
கரை புரண்டோடும் கருணை வெள்ளம்!
கடுமையான முயற்சி வேண்டாம்
கண் மூடி நினைத்தால் போதும்
உளி போன்ற பிரார்த்தனையே எனை
உரு மாற்றும் உன் கீர்த்தனையே!
குறை என்னும் திரையை விலக்கு!
நிறை தேடு ஒளிரும் விளக்கு!
இந்திராணி சீனிவாசன்