Community

யாரோ கடித்த ஆப்பிள்

1
“உள்ளலாம் அனுப்ப முடியாதுமா…வேணா இங்கையே கொடுத்துட்டு போங்க, நாங்க கொடுத்துடுறோம்”, மிடுக்காக பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அந்த வாட்ச்மேன்.

“பாத்து பல மாசம் ஆச்சுங்க…ஒரே ஒருமுறை அனுப்புங்க…ஐந்து நிமிசத்துல திரும்ப வந்துடுறேன்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அந்த பெண். நெற்றியில் குங்குமம் இல்லை. முடி நரைத்திருந்தது. தலையில் முக்காடு போட்டிருந்தாள். கையில் துணிப்பையில் பழங்கள். கிழிந்துப்போன செருப்பை ஊக்கால் தைத்திருந்தால்.

“உங்களுக்கு சொன்னா புரியாதாம்மா? என்னால எதும் பண்ண முடியாது…சீஃப் டாக்டர் வரணும்…அவரு இப்போ ஊருல இல்ல ,வரதுக்கு மூணு நாள் ஆகும் அதுக்கு அப்புறம் வந்து பாருங்க…இப்ப உங்க பைய கொடுங்க நான் அவன்ட கொடுத்துறேன்” அவன் அதட்டலுக்கு அடங்கிப்போய் அவனிடம் பையை கொடுத்துவிட்டு அழுது கொண்டே அங்கிருந்து சென்றாள்.

அந்த வாட்ச்மேன் பையை வாங்கிக்கொண்டு அந்த மனநல மருத்துவமனை உள் செல்ல ஆரம்பித்தான். நுழைவு வாயிலில் நாற்காலியில் அமர்ந்திருந்தான் வார்டன் ரமேஷ்.

“என்ன வாட்ச்மேன் முருகா, நல்ல கவனிப்பு போல…பையில பழமா வருது”

“ஐயோ எனக்கு இல்ல சார்…அந்த கடைசி ரூம்ல இருக்குல டெரர் பைத்தியம் அதுக்குத்தான் அவுங்க அம்மா கொடுத்துட்டு போராங்க”

“அவுங்கள உள்ள பாக்குறதுக்கு விட வேண்டியது தானே முருகா”

“அட ஏன் சார்…இரண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் பார்க்க வந்தாங்க…படுபாவி அவுங்கள போட்டு அடிச்சுட்டான்…ஆனாலும் இந்த அம்மா பார்க்க வருது…”

“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே முருகா…சரி என்ன பழம் இருக்கு…”

“சார்…எல்லாம் ஆப்பிள் பழம் சார்…”

“எனக்கு ஒரு ஆப்பிள் கொடுத்துட்டு போ…அவன்ட மத்தத கொடுத்துடு…”

வார்டனிடம் ஒரு ஆப்பிளை கொடுத்துவிட்டு முருகன் பையை உள்ளே எடுத்துச் சென்றான்.
பொதுவாக சாதாரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சங்கிலி பிணைக்கப்பட்டு நடமாட அனுமதிக்கப்படுவார்கள். கொஞ்சம் முரண்டு பிடிப்பவர்கள் தனியறைகளில் அடைத்து வைக்கப்படுவர். மிகவும் ஆபத்தானவர்கள் தனி அறையில் சங்கிலிகள் பிணைக்கப்பட்டு இருளிலேயே வைக்கப்பட்டுவார்கள்.
முருகன் சாதாரண வார்டுகளை கடந்து இருட்டான அந்த வரண்டாவில் நுழைந்தான். சுவர் விளக்குகள் பல அணைக்கப்பட்டிருந்தது. ஒரேயொரு விளக்குமட்டும் விட்டுவிட்டு எரிந்துக்கொண்டிருந்தது. அது அந்த வர்ணடாவில் முழு நீளத்திற்கும் எதிரொலித்ததை கேட்கமுடிந்தது. அந்த இரும்பு கதவின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறிய துவாரம் வழியாக பார்த்தான். அறையில் மூலையில் கட்டிலில் சங்கிலியுடன் பிணைக்கப்பட்டிருந்தது அந்த உருவம்.
தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. மேல் சட்டை இல்லை. ஒரேயொரு டிரவுசர். உடம்பெல்லாம் ரத்த காயங்கள். சங்கிலியில் துருப்பிடிப்பு அவன் சதைகளை காயப்படுத்தியிருந்தது. கால் பாதங்களில் சூடு வைத்த காயங்கள். சக்தியேதும் இன்றி தரையில் சாய்ந்து கிடந்தான்.
முருகன் அந்த இரும்புக்கதவை சாவிபோட்டு திறந்தான். தன் கைத்தடியை இறுக்க பற்றிக் கொண்டான். அந்த பையில் இருந்த பழங்களை தரையில் அவன் பக்கம் உருட்டிவிட்டான். பழங்கள் உருண்டு சென்று அவன் உடலில் பட்டு நின்றது.

“இந்தாடா…உங்க அம்மா வாங்கிட்டு வந்துச்சு…எடுத்து திண்ணு” என்று சத்தமாக கத்தினான்.

அவன் மெதுவாக நேராக அமர்ந்தான். பழங்களை பார்த்தான். தொண்டையை கனைத்து, “ஒரு ஆப்பிள் குறையுது” என்றான்.

“எல்லாம் சரியா தான்டா இருக்கு…சாப்பிடு” என்று சிரித்துக்கொண்டே கூறினான் முருகன்.

“ஒரு…ஆப்பிள்…காணோம்…” என்று பலமாக கத்திக்கொண்டே முருகனைத் தாக்க எழுந்து வந்தான்.

முருகன் தன் கைத்தடியால் அவன் மண்டையில் அடிக்க அப்படியே மயங்கி விழுந்தான்.

“பைத்தியக்கார பய உனக்கு கணக்கு கேக்குதா கணக்கு…” என்று கூறிக்கொண்டே வேகமாக கதவை சாத்திவிட்டு வெளியே வந்தான் முருகன்.

மயக்கத்தில் அவன் முனங்கிக்கொண்டிருந்தான், “ஒரு ஆப்பிள் காணோம்” என்று

2
“லிஸ்டுல ஆப்பிள் மிஸ் ஆகுதுல” கான்ஸ்டபிளிடம் கேட்டுக்கொண்டிருந்தான் மாதவன்.

“ஆமா சார்…மத்த பொருள் எல்லாம் இருக்கு இந்த ஆப்பிள் மட்டும்தான் மிஸ்சிங் ஒரு வேளை சாப்பிட்டுருப்பானோ?” கான்ஸ்டபிள் அந்த இறந்த உடலின்மீது பார்வையை பதித்தவாறே கேட்டுக்கொண்டிருந்தான்.

“இல்லை சந்தானம் , ஐந்து கிலோ ஆப்பிள் அவ்வளோ சீக்கிரம் சாப்பிட்டுருக்க முடியாது, இந்த ஆப்பிள் நம்ம தடயம் கிடையாது பார்க்கலாம்” என்றவாறே இன்ஸ்பெக்டர் மாதவன் அந்த உடலில் இருந்து எழுந்து அந்த வீட்டை ஆராய தொடங்கினான்.

பெரிய வீடுதான் ஆனால் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்தது. வெளியில் எல்லாம் தோட்டம் வாழை மரங்கள், கொய்யா மரங்கள், பெரிய முன்வாசல் பணக்கார குடும்பமாக இருக்கலாம். வாசலை கடந்ததுமே ஹால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு மூலையில் காந்தி சிலை. உள் அறைக்கு செல்லும் பாதையில் தான் அவன் இறந்துக்கிடந்தான். கழுத்தில் சிறிய பிளேடு கீறல். கொஞ்ச நேரத்துக்கு முன்தான் கடைக்கு போய் வந்திருக்கிறான். பை நிறைய பழங்கள் ஏதோ ஷாப்பிங் மாலில் வாங்கியிருக்கிறான்.

“சந்தானம் ஒன்னு கொலையாளி வீட்டுல மறைந்திருக்கனும் இல்லனா கடையில இருந்து இவன பின் தொடர்ந்து வந்திருக்கனும்”

“ஆமா சார்…”

"சரி சந்தானம் குமரனை இந்த இடத்த அண்டர்டேக் பண்ண சொல்லுங்க யாரும் உள்ள வரக்கூடாது "
இருவரும் வீட்டைவிட்டு வெளியே வந்தனர்.

தடவியல் துறை ஆட்கள் உள்ளே சென்றுக்கொண்டிருந்தனர். மாதவனும் சந்தானமும் நுழைவு வாயில் அருகே வந்திருந்தனர். எதிரில் ஒருவர் வந்துக்கொண்டிருந்தார்.

நல்ல உயரம். கொஞ்சம் முறுக்கிய மீசை கையில் பாதி கடித்த ஆப்பிள் மாதவனும் சந்தானமும் குழம்பிப்போய் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். பக்கத்தில் வந்துவிட்டான். இருவரையும் ஏற இறங்க பார்த்துவிட்டு கையில் வைத்திருந்த ஆப்பிளை மாதவன் கையில் கொடுத்தார்.

“மிஸ்டர் மாதவன் தானே நீங்க…?” என்றார்
மாதவன் இன்னும் குழம்பிப்போய் இருந்தான்.

3
“மிஸ்டர் மாதவன் தானே நீங்க…?” என்றார்.
மாதவன் இன்னும் குழம்பிப்போய் இருந்தான்.

“ஆமாம் நான் மாதவன் தான். நீங்க யாரு?”

“ஐ அம் சத்தியமூர்த்தி… க்ரைம் பிரன்ச் இந்த கேசுல என்ன ஹெட் ஆபிஸ்ல இருந்து அப்பாய்ண்ட் பண்ணிருக்காங்க அண்ட் இந்த ஆப்பிள் வரவழியில கீழ கிடந்துச்சு”

“வெல்கம் சார்…ஆப்பிள் பத்திதான் நாங்களும் பேசிகிட்டு இருந்தோம்” என்று சந்தானம் பக்கம் திரும்பி அந்த ஆப்பிளை ஒரு கவரில் போட்டு சோதனைக்கு அனுப்ப சொன்னான்.

“சத்தியமூர்த்தி இறந்துப்போன இந்த ஆளு ஒரு டாக்டர். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஷாப்பிங் மால்ல பொருள் வாங்கிருக்கான்…அந்த கடைக்குத்தான் இப்ப சிசிடிவி செக் பண்ண போறோம். நீங்களும் வாங்களேன்”

“ஓ கண்டிப்பா”
மூன்று பேரும் ஏறி உட்கார வண்டி கிளம்பியது.

----------------------------------------×

“இது ரொம்ப வியர்டா இருக்கு” சீஃப் டாக்டர் ஆனந்த் அந்த சிசிடிவியை பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் வார்டன் முருகன். திரையில் அந்த கடைசி அறை மனநல பாதிக்கப்பட்டவனின் அறையின் சிசிடிவி காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.

முருகன் பேசத்தொடங்கினான்.
“பொதுவா நாங்க இந்த அறையின் காட்சிகளை பார்க்கவே மாட்டோம். ஒரே ஒரு ஆளுதானேனு விட்டுடுவோம். இன்னிக்குத்தான் ஏதோ எதேச்சையா பார்த்தோம்”

டாக்டர் ஆனந்தின் கண்கள் அந்த திரையை விட்டு விலகவே இல்லை

“முருகா இவன் என்ன கேஸ்னு இங்க அட்மிட் ஆனான்?”

“தெரியல சார் மொதல்ல சாதாரண வார்டுல தான் வச்சு இருந்தோம். அப்புறம் கூட இருக்கவங்கலையே அடிக்க கடிக்க ஆரம்பிச்சுட்டான்…அப்புறம் இங்க மாத்திட்டோம்”

“ரொம்ப ரொம்ப விசித்திரமா இருக்கு முருகா…அவன் அந்த ரூமுக்குள்ள ஒரு பெரிய வாழ்க்கையே வாழுறான்…அவனு குன்னு நிறைய கதாப்பாத்திரங்கள். அங்க பாருங்க ஒரு நிமிசத்துக்குள்ள எத்தன பாடி லாங்குவேஜ்…சான்ஸ்லெஸ்…”

“ஆமாங்க சார்…ஆச்சரியமா இருக்கு…”

“முருகா ஆனா ஒரு விசயம் என்னால அடிச்சு சொல்ல முடியும்…நீ நம்புவியோ மாட்டியோ…”

4
“முருகா ஆனா ஒரு விசயம் என்னால அடிச்சு சொல்ல முடியும்…நீ நம்புவியோ மாட்டியோ…”

“சொல்லுங்க சார்…”

“நாம நினைக்கிற மாதிரி இவன் சாதாரண பைத்தியம் இல்ல…இவனுக்குன்னு ஒரு வரலாறு இருக்கு…முருகா நான் இவுங்க அம்மாவ உடனே பார்க்கனும் அண்ட் அவனோட கேஸ் ஃபைல் எனக்கு வேணும்”

டாக்டர் ஆனந்த் மீண்டும் அந்த சிசிடிவி காட்சிகளை பார்க்க ஆரம்பித்து நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.

-------------------------------------------------------×

“சார் கேஸ் ஃபைல்” ஷாப்பிங் மால் சிசிடிவி பதிவுகளை பார்த்துவிட்டு வெளியில் வந்து நின்றுக்கொண்டிருந்த மாதவனிடம் நீட்டினார் சந்தானம். அருகில் சத்தியமூர்த்தி.

இரைச்சலான அந்த சாலையின் சத்தத்துக்கு நடுவே மாதவன் பேசத்தொடங்கினார்.

“மிஸ்டர் சத்தியமூர்த்தி… சிசிடிவி பதிவ வச்சு உங்களுக்கு என்ன தோணுது”

“நத்திங் மாதவன்…இதுல இருந்து நமக்கு தெரியுற விசயம் கொலையாளி இந்த கடைக்குள்ள வந்து இறந்தவன நோட்டமிடல…”

“அது மட்டுமில்ல சத்தியமூர்த்தி… கொலையாளி ரொம்ப திட்டமிட்டு இந்த கொலைய பண்ணி இருக்கான்…இதுவரைக்கும் எந்த தடயமும் இல்ல…”

“கிடைக்காம எங்க போகப்போவுது மாதவன்…நம்மகிட்ட மாட்டாமலா பொயிடுவான்…ட்ராபிக் சிக்னல் சிசிடிவி எல்லாம் செக் பண்ண சொல்லுங்க…”

மூவரும் அங்கிருந்து வண்டியில் ஏறிக்கொள்ள சாலை நெரிசலில் வந்து ஊர்ந்துக்கொண்டிருந்தது. வண்டியினுள்…

“சரி சத்தியமூர்த்தி… தடவியல்துறை அறிக்கை பிரேத பரிசோதனை அறிக்கையும் வரட்டும். நீங்க ரெஸ்ட் எடுங்க…மணி ஆறு ஆச்சு…”
வண்டி மாதவன் வீட்டின்முன் நின்றது. மாதவன் கீழே இறங்கிவிட்டு சத்தியமூர்த்தியை பார்த்தார்.

“சரி சத்தியமூர்த்தி… நாம நாளைக்கு சந்திக்கலாம்… சந்தானம் உங்கள வீட்டுல விட்டுருவாறு” என்றவாறே சந்தானத்தை பார்த்து தலையாட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

முன்வாசல் கிரில் கதவின் இடுக்கில் ஒரு காகிதம் சுருட்டி சொருகப்பட்டிருந்தது. கடிதம் போல இருந்தது. அட்டையில் ஒரு மூலையில் கொஞ்சம் ரத்தக்கறை. இன்னொரு பக்கம் முகவரி…
“பெறுநர்,
ர.மாதவன்
காவல்துறை ஆய்வாளர்
16/23, மந்தவெளி
சென்னை”

மெதுவாக உள்ளே பிரித்தான்…

5
மாதவன் அந்த கடிதத்தை பிரித்தான்.

------------------------×

"பெறுநர்,
தலைமை மருத்துவர்
இந்திய மனநிலை மருத்துவ அமைப்பு
புது டெல்லி"கடைசி அறையில்

பெறுநர் விபரம் எழுதிவிட்டு, பசை தேய்த்து கடிதத்தை ஒட்டிவிட்டு பார்த்தார் டாக்டர் ஆனந்த். மணி நள்ளிரவு இரண்டு ஆகிக்கொண்டிருந்தது. மருத்துவமனையில் பெருவாரியான சத்தங்கள் குறைந்திருந்தன. அவரின் கைக்கடிகாரத்தின் டிக்…டிக் மட்டும் அவ்வப்போது வெளியே நாய் ஊளை அடங்கும்போது கேட்டது. கண் அயர அப்படியே சேரில் சாய்ந்தார்.
மருத்துவமனையின் ஒரு மூலையில் யாரோ அழுவது போல கேட்டது. வார்டன் முருகனை அழைக்க கூப்பிட்டுப்பார்த்தார்.
சத்தமில்லை.

தானே போய் பார்த்து விட்டு வரலாம் என்று மெதுவாக எழுந்து சாதாரண வார்டுகள் எல்லாம் கடந்து சத்தம் வந்த திசையை நோக்கிப்போனார். அது அந்த தீவிர மனநல பாதிக்கப்பட்டவன் அறையில் இருந்து வருவது தெரிந்தது.

கையில் இருந்த டார்ச் லைட்டை பிடித்துக்கொண்டு இருட்டான அந்த வரண்டாவில் நடந்தார். இரும்புகதவு போடப்பட்ட அந்த அறையின் முன் நின்றார். சத்தம் அதிகமாகவே கேட்டது. கதவில் உள்ள துவாரம் வழியாக டார்ச் அடித்துப்பார்த்தார். எதுவும் சரியாக தெரியவில்லை.

பெரிய ஒரு சாவியைப்போட்டு கதவைத் திறந்தார் உள்ளே அந்த மொட்டையடித்த மனநோயாளி தலையை முட்டியினுள் பதித்து அழுதுக்கொண்டிருந்தான்.

அவர் மெதுவாக அவன் அருகில் சென்று தலையில் கையை வைத்து மெதுவாக தேய்க்க ஆரம்பித்தார்.

“ஒன்னுமில்ல… ஒன்னுமில்ல…” என்று மெதுவாக முனுமுனுத்தது அவனுக்கு ஆருதலாக இருந்த மாதிரி அவருக்கு தெரியவில்லை.

அவன் மெதுவாக தலையை தூக்கினான். இருட்டில் முகம் சரியாக தெரியவில்லை.

“உங்…உங்கள்ட…ஒண்ணு சொல்ல…ணும்…” என்றான் கரகர குரலில்.

“சொல்லு…” என்று அவன் தோலில் கைவைத்தார்.

அவன் சொன்னது சரியாக கேட்காததால் காதுகளை அவன் வாயின் அருகில் கொண்டு சென்றார்.

முணுமுணுத்துக்கொண்டிருந்த அவன் அப்படியே அவர் காதை கடிக்க…கறைபடிந்த அவன் பற்கள் அவர் காதின் சதைகளுக்குள் ஊடுறுவி கிழித்தது. அவர் வலியில் துடிக்க, கையில் இருந்த டார்ச்லைட்டை அவன் மீதுவிசி அங்கையே தரையில் விழுந்தார்…டார்ச்லைட் விலகி சென்று விழ…அவன் எழுந்து நின்று…டாக்டர் ஆனந்தை கொடூரமான முறைத்தான். வாயில் ரத்தம்!
6

முருகன் சத்தம் கேட்டு எங்கிருந்தோ இருந்து தடதடவென்று வந்தான். அந்த நோயாளி மேலே வாயில் ரத்தம் சொட்டவும் கீழே டாக்டர் ஆனந்த் காதை பிடித்துக்கொண்டு கதறவும் கண்டு அதிர்ந்துப்போனான். என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் மடக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு சேரை அவன் மண்டையில் தூக்கி விசிற அவன் சுருண்டு விழுந்தான். வேகமாக ஆனந்தை எழுப்பிக்கொண்டு அந்த அறையை மூடிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.

--------×

வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்தார் மாதவன். அடுத்தநாள் விடிந்திருந்தது. கையில் நேற்று வைத்திருந்த கடிதம் இருந்தது. கான்ஸ்டபிள்
சந்தானம் சரியாக வீட்டு வாசலில் வந்து வண்டியை நிறுத்தினார்.

“சந்தானம் நம்ம கேஸ்ல ஒரு திருப்பம். நேத்து சாயங்காலம் ஒரு கடிதம் வந்துச்சு. அதுல அந்த கொலைய பத்தி எல்லா விவரமும் தெளிவா இருக்கு…கொலையாளி எழுதுன கடிதமாதான் இருக்கும்”

வண்டி பறந்தது.

“சார் அப்ப அந்த கடிதம் எங்க இருந்து வந்துச்சுன்னு கண்டுபிடிச்சாச்சா…”

“இல்ல சந்தானம்…எந்த தகவலும் இல்ல…”

“எப்படி சார் இத…”

“இது ரொம்ப முக்கியமான தடயம்…கையெழுத்து நிபுணர்கள் வச்சு ப்ரோசீட் பண்ணி பார்ப்போம்…சத்தியமூர்த்தி வரலையா?”

“இல்ல சார்…அவர பார்க்கல…”

“அந்த ஆளு மேல எனக்கு கொஞ்சம் சந்தேகம்…க்ரைம் ப்ரேஞ்ச் நண்பர்கள்ட பேசுனேன்…அவுங்க டீம்ல இருந்து யாரையும் அனுப்பலன்னு சொன்னாங்க…”

“அப்படியா சார்…வரட்டும் சார்…பிடிச்சு விசாரிக்கலாம்”

“வேணாம் அவன் போக்குலையே போய் அவன பிடிக்கலாம்…ஏதும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க…”

“சரி சார்”

வண்டி சாலை நெரிசலில் சிக்கிக்கொண்டது. எல்லாப் பக்கமும் வண்டிகள் சூழ…ஹாரன் சத்தங்கள் காதை கிழித்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த டீக்கடையில் தொங்கிக்கொண்டிருந்த செய்தித்தாள் மாதவன் கண்ணில் பட்டது.

“சந்தானம் வண்டியை நிறுத்துங்க…அந்த பேப்பர் ஒன்னு வாங்கிட்டுவாங்க…”

சந்தானம் நெரிசலுக்கு ஊடாக சென்று ஒரு செய்தித்தாளோடு வந்தார். முதல்பக்கத்தை பார்த்துமே இருவருக்கும் அப்படியொரு ஆச்சரியம்.

“ஈ.சி.ஆர் வீட்டு கொலையாளி எழுதிய கடிதம் வெளியானது” என்று அச்சிடப்பட்டிருந்தது.
7
ஆனந்தின் காதில் கட்டுப்போட்டுக்கொண்டிருந்தார் வார்டன் முருகன். மேல் காது கிழிந்திருந்தது. தையல்போட அவசியம் இல்லை. ஆனாலும் ரத்தம் அதிகமாக போயிருந்தது.

“நீங்க ஏன் சார் தனியா போனீங்க? இப்ப பாருங்க…இருங்க சார் இன்ஜெக்சன் போட்டுக்கலாம்”

“போட்டுக்கலாம் முருகா” என்றவாறே கட்டிலில் சாய்ந்துபடுத்தார்.

“அவன் அழுதுகிட்டு இருந்தான்…வித்தியாசமா தெரிஞ்சது, அதான் பார்க்கலாம்னு போனேன்”

“சார் அந்த பைத்தியத்திடம் அப்படி என்ன வித்தியாசம் சார், அவனும் மத்த பைத்தியங்க மாறி தானே சார்”

“இல்ல முருகா, அவனோட கதை உங்களுக்குலாம் தெரியாது…மூணு நாளுக்கு முன்னாடிதான் அதை ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தேன்”

“அப்படி என்ன கதை சார்”
முருகன் கேள்வியில் ஆச்சரியம் இருந்தது.

“சொல்லுறேன் முருகா…அந்த கப்போர்ட்ல இரண்டாவது ஃபைல எடுத்துட்டு வாயேன்”

முருகன் அந்த ஃபைலை எடுத்துவந்து கொடுக்க அவனை பிரித்து பார்க்க சைகையால் காட்டினார். அவனும் பிரித்தான். எல்லாம் பழைய செய்தித்தாள் கத்தரிப்புகள்.

“சார் எல்லாம் செய்தித்தாள்கள்”

“படித்து பாரு முருகா…எல்லாம் நீ சொல்லுற அந்த தி சோ கால்ட்டு பைத்தியத்த பத்திதான்…பத்து வருடத்துக்கு முன்னாடி வந்த செய்தி…”

அதை படிக்க முருகன் கண்கள் விரிந்தது.

“இதை என்னால் நம்பவே முடியல சார்…இவ்வளோ பெரிய ஆளுக்கு இப்படியொரு நிலைமையா…”

“இதுல ஏதோ மர்மம் இருக்கோணும்”

முருகனின் கண்கள் அந்த செய்தித்தாளிலே பதிந்திருந்தது. அன்றைய நாளின் முதல்பக்க செய்தியும் அதுதான்,

“தமிழகத்தின் பிரபலமான மனநல மருத்துவர் தீவிர மனநல பாதிக்கப்பட்டார்”
8
“இந்த பத்திரிகை ஆபிஸ் தானே”
மாதவனும் சந்தானமும் வண்டியைவிட்டு இறங்கி அந்த அலுவலகம் உள் சென்றனர்.

அவசரமாக இயங்கிக்கொண்டிருந்தது அலுவலகம். அனைவரும் அங்குமிங்கும் கையில் கோப்புகளுடன் நடந்துக்கொண்டிருந்தனர். பைகளை மாட்டிக்கொண்டு இவர்களை கடந்து வெளியே செய்தியாளர்கள் குழு சென்றுக்கொண்டிருந்தது.

மாதவனின் போலீஸ் சீருடை அங்கு பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வழக்கமாக அது போலீஸ் வந்து செல்லும் இடம்தான். ‘தலைமை ஆசிரியர்’ எங்கு இருக்கிறார் என்று கேட்க ஒருவன் கைக்காட்ட அந்த அறையின் கதவுகளை அடித்து திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்.

கடையில் வாங்கிய செய்தித்தாளை அந்த அறையில் இருந்த மேசை மீது அடித்து
“இதுல வெளியிட்டிருக்கும் கடிதம் உங்களுக்கு எப்படி கிடைச்சது” என்று மிரட்டும் தோணியில் மாதவன் கேட்க எழுந்து நின்றார் அந்த ஆசிரியர்.

தலை நல்ல வழுக்கை, மூக்கு கண்ணாடியை சரி செய்துக்கொண்டு அந்த செய்தித்தாளை பார்த்தார்.

“ஓ…இதுவா…நீங்க ஏன் இத பத்தி கேக்குறீங்க?” என்றார்

“இந்த கேஸ நான்தான் ஹேண்டில் பண்றேன்…இந்த கடிதம் நேத்து சாயங்காலம் என்னோட வீட்டு வாசல்ல கிடந்துச்சு…இப்போ அத நீங்க வெளியிட்டிருக்கீங்க…”

"இது நம்ம செய்தியாளர் ஒருத்தர்ட யாரோ ஒரு நபர் இதை கொடுத்தான்…இதோ அந்த கடிதம் " என்று எடுத்துக்கொடுத்தார். இரண்டிலும் ஒரே கையெழுத்து அதே ரத்தக்கறை.

“நான் அந்த செய்தியாளரை உடனே சந்திக்கனும்” மாதவன் உட்கார்ந்தார்.

“விவேக்கை வரச்சொல்லுங்க” இண்டர்காமில் பேசிவிட்டு வைத்தார் அவர்.
9
“அவரு பேரு பாரதி” என்றார் ஆனந்த்.
முருகன் இன்னும் அந்த செய்தித்தாளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“பத்து வருசத்துக்கு முன்னாடி இதே ஆஸ்பத்திரியில மனநல மருத்துவரா வேலை பார்த்து இருக்காரு. அப்புறம் இங்கு இருக்க மனநோயளிகல இவறு கொலை பண்ண முயற்சி பண்ணிருக்காரு…எப்படின்னு தெரியல இவரே பைத்தியம் புடிச்சு இப்ப இப்படி இருக்காரு”

முருகன் ஏதும் பேசாமல் இருந்தான்.

“என்னால நம்ப முடியல சார்… ஒரு டாக்டர் எப்படி இப்படி ஆனாரு…???”

“இதப்பத்தி வெளியில யாரிடமும் சொல்லாத. இது யாருக்கும் தெரிய வேணாம்”

“சொல்ல மாட்டேன் சார்” என்று முருகன் அந்த செய்தித்தாளை அலமாரியில் வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேற, ஆனந்த் குறுக்கிட்டார்.

“அந்த நோயாளியோட கேஸ் ஃபைல் எல்லாம் நேத்து கேட்டிருந்தேனே”

“நேத்தே வந்து வச்சுட்டேனே” என்று அவர் மேசை மீது கைக்காட்டினான்.
அங்கு எதுவுமே இல்லை.

“இல்லையே முருகா…இங்க ஏதும் இல்லையே”

“இல்ல சார் நான் வச்சேனே சார்…”

“சரி விடு முருகா இங்கதான் இருக்கும் பாத்துக்கலாம்”

“ஐயோ சார் என் வேலையே போயிடும்”
ஃபைல் மாயமாய் மறைந்திருந்தது.

-----------×

பத்திரிகை ஆபிஸில் ஒரு அறை விசாரணைக்காக ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் வேறு யாரும் இல்லை. மாதவன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். எதிரில் பத்திரிக்கையாளர் விவேக். பின்னால் சந்தானம் கையில் ஒரு நோட்டுடன்.
10
“சொல்லுங்க…நீங்க தான் விவேக், ரைட்?”

“எஸ் சார்” விவேக் மாதவனை பார்க்கவில்லை.

“சோ…இந்த கடிதத்தை அந்த கொலையாளி தான் உங்ககிட்ட வந்து கொடுத்தான்…அப்படித்தானே”

“அவன் கொலையாளியா இல்லையான்னு எனக்குத்தெரியாது. ஆனால் என்னிடம் தான் ஒருத்தன் வந்து இந்த கடிதத்தை கொடுத்தான்”

“அப்போ நீங்க அவன் முகத்தை பார்த்தீங்க தானே”

“இல்லை சார். நான் நேத்து ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு போனேன்…நடந்துதான் போனேன். நான் போற பாதையில தெருவிளக்கு இல்ல…அதுனால அவன் முகம் எனக்கு சரியா தெரியல”

“கடிதத்தை குடுக்குறப்போ உங்ககிட்ட ஏதும் பேசுனானா”

“பேசுனான். வெளிச்சத்துல போய் இத படிச்சு பாருன்னு சொன்னான். நான் அவன திரும்பி பார்க்கிறதுக்குள்ள அவன் இருட்டுல மறஞ்சுட்டான்”

“கதை நல்லா இருக்குல சந்தானம்…” மாதவன் சிரித்தார்.

“சார்…யூ ஷூட் பிலீவ் மீ…நீங்க என்ன இப்படி உட்கார வச்சு கேள்வி கேட்குறதே பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது…”

படார்…

கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தார் சத்தியமூர்த்தி. மாதவன் சந்தானத்தை பார்த்து ஏதோ கண்ணால் சகை காட்டிக்கொண்டார்.

“வாங்க சத்தியமூர்த்தி… உட்காருங்க”
அருகிலிருந்த நாற்க்லியை இழுத்து போட்டார்.

“உங்க பத்திரிக்கை சுதந்திரம் பருப்பெல்லாம் எனக்குத் தெரியும்…இந்த கடிதத்தை கிடைச்சவுடன் அத எங்ககிட்டு வந்து கொடுக்காம இப்படி பத்திரிகையில போட்டு விளம்பரத்த தேடிக்கிறதுதான் உங்க பத்திரிகை சுதந்திரமா…இல்ல கொலை செஞ்சவனுக்கும் உனக்கும் ஏதும் தொடர்பு இருக்கா…”

“ஐயோ சார்…செத்தவன் யாருன்னுகூட எனக்குத்தெரியாது. ஆனா அந்த கடிதத்தை கொடுத்தவன்ட ஒரு விசயத்தை கவனிச்சேன்”

“என்னது”

“அவன் ஒரு பச்சை கலர் பெரிய சட்டை…அங்கி மாதிரி போட்டுருந்தான்…இந்த மனநல மருத்துவமனையில நோயாளிங்க போட்டு இருப்பாங்கள…அந்த மாதிரி…”

11
“சார் பேப்பர் பாத்திங்களா?” என்று வியப்புடன் கேட்டான் முருகன்

“இல்லையே முருகா? ஏன் என்ன எதும் முக்கியமான விசயமா?”

“நம்ம ஆஸ்பத்திரில உங்களுக்கு முன்னாடி சீஃப் டாக்டரா இருந்த சதர்சன் சார அவரு வீட்டுல யாரோ கொலை பண்ணிட்டாங்களாம், ஏதாவது சொத்து தகராறா இருக்கும்னு சந்தேகப்படுறாங்க”

“ஓ அப்படியா, சரி முருகா, எல்லாம் ரெடி பண்ணியாச்சா?”

"பண்ணியாச்சு சார்…நீங்க வந்தா ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடலாம்

இருவரும் அந்த இருட்டான அறையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

அறையின் நடுவே நாற்காலி வித்தியாசமாக இருந்தது. நிறைய கரண்ட் வயர்கள் படர்ந்திருந்தது. சேரில் உட்கார வைக்கப்பட்டிருந்தான் பாரதி. உடம்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது.

அவனை சுற்றி நான்கு கம்பவுண்டர்கள் நின்றுக்கொண்டிருந்தனர். ஆனந்த் எதிரே சற்று தூரம் தள்ளி இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். கம்பவுண்டர்கள் எல்லாம் விலகி ஆனந்த் பக்கம் வந்து நின்றனர்.

“எல்லாம் சரியா இருக்கு தானே முருகா, போகலாமா…?”

“பண்ணலாம் சார்…” என்று சென்று மின் பெட்டியில் இருந்த ஸ்விட்ச்களை ஒன்று ஒன்றாக போட்டான்

அதுவரை அசையாமல் இருந்த பாரதி அதிர ஆரம்பித்தான்

“இன்னும் அதிகமா கூட்டி வை முருகா…”

“சார்…”

“இன்னும் அதிகமா வைன்னு சொன்னேன் கேகலையா?”

“சார் இதுவே ஆபத்து, இதுக்கு மேல போனா …வேணாம் சார்…”

“சொல்லுறத செய்றீங்களா முருகன்”
ஆனந்த் முருகனை பார்க்கவில்லை. முருகன் வேறு வழியில்லாமல் கூட்டி வைத்தான்.

பாரதியின் உடல் அதிகமாக அதிர்ந்தது. துடித்தான். நாற்காலி வேகமாக ஆடியது. பாரதியின் காது, மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. கம்பவுண்டர்களும் முருகனும் துடிதுடித்துக்கொண்டிருந்த பாரதியையும் ஆனந்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர். வேகமாக ஆடியதில் பாரதி நாற்காலியோடு கீழே விழ மின் கம்பிகள் அறுந்துவிழுந்து மின்னோட்டம் நின்றது.

ஆனந்த் சட்டென்று எழுந்து அந்த அறையைவிட்டு வெளியேற முருகன் பின்னாலே ஓடினான்.

“சார் இது தப்புசார்…நல்வவேளை அவன் சாகல…செத்திருந்தா…”

“எனக்கு தெரியும் முருகா…இந்த ட்ரீட்மெண்ட் பண்ணா மட்டும்தான் இவனை பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியும்…எனக்கு வேற வழி தெரியல…”

“சரிங்க சார்…”

12
போலீஸ் ஜீப் மனநல மருத்துவமனை முன் நின்றது. மாதவனும் சந்தானமும் இறங்கினர். உள்ளே செல்லாமல் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இவர்களை பார்த்ததும் வார்டன் முருகன் இவர்களை நோக்கி வந்தான்.

“வாங்க சார். என்ன விசயம்?”

“ஒரு சின்ன விசாரணை, சீஃப் டாக்டர பார்க்கனும்”

“உள்ள வாங்க சார்…நான் இந்த மருத்துவமனையோட வார்டன் சார்”

மாதவன் ஏதும் பேசவில்லை. மூவரும் உள்ளே நடந்தனர். சீஃப் டாக்டர் ஆனந்தின் அறை வந்தது.

“குட் மார்னிங் டாக்டர்! நான் எஸ்.ஐ மாதவன், ஒரு விசாரணை…பேசலாமா?”

ஆனந்த் சரி என்பதுபோல் தலையசைத்தார்.

“சொல்லுங்க சார்…”

“நாம மட்டும் கொஞ்சம் தனியா பேசலாமே” என்று மாதவன் முருகனை பார்க்க, முருகன் அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

“இப்போ சொல்லுங்க சார்…”

“ஒரு கொலை கேஸ்…இறந்தவர் இந்த மருத்துவமனையோட பழைய சீஃப் டாக்டர் சுதர்சன், கொலை சஸ்பெக்ட் இந்த மருத்துவமனையோட சீருடை போட்டு இருந்ததா எங்களுக்கு துப்பு கிடைச்சு இருக்கு…அதும் எண் ஐந்து போடப்பட்ட சீருடை, சோ அதப்பத்தி கொஞ்சம் விசாரிக்கனும்”

“கேள்விப்பட்டேன், நல்ல மனுசன் அவரு…எனக்கும் அவருக்கும் பெருசா பழக்கமில்ல…”

“இந்த மருத்துவமனையில ஐந்தாம் எண் நோயாளி யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“வெயிட் எ மினிட்”

ஆனந்த் நிறைய ஃபைல்களை திருப்பி பார்த்தார்.

“இதோ…இவன்தான்…தீவிர மனநோயாளி பாரதி!”

13
மாதவன், சந்தானம், ஆனந்த், முருகன் நால்வரும் மனநோயாளி பாரதியின் அறையின் முன் நின்றுக்கொண்டிருந்தனர்.

“சார்…இவன் கொஞ்சம் ரிஸ்க்… பாத்து ஹேண்டில் பண்ணனும், நான்தான் சொன்னேனே இவன் இந்த மருத்துவமனையில டாக்டரா இருந்தான்னு…கதவ திறங்க முருகன்”

முருகன் சாவியை நுழைத்து கதவை திருந்தான். ‘க்ரீச்’ என்ற சத்தத்துடன் கதவு திறந்தது. பாரதி வழக்கம்போல ஒரு மூலையில் படுத்துக்கிடந்தான்

முருகன் அவனை சங்கிலியில் பிணைத்து சேரில் உட்கார வைத்தான். நால்வரும் அவனை சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர்.

மாதவன் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தார். சுவற்றில் கிறுக்கல்கள், அங்குமிங்கும் ரத்தக்கறை, ஒரு மூலையில் அந்த ஐந்தாம் எண் சீருடை, வலதுப்பக்கம் சுவற்றில் ஒரு திறந்த சன்னல்.

“மிஸ்டர் ஆனந்த், இந்த மருத்துவமனையை விட்டு வெளியே போகமுடியாதுல”

“முடியாது சார், ஆனா இவன் எப்படி தப்பிச்சு போய் இந்த கொலையை பண்ணுனான்னு தெரியல, ஒரு வாரமா சிசிடிவி வேற ரிப்பேர்”

“மே பி இந்த சன்னல் வழியா போய் இருக்கலாமே”

“இருக்கலாம் சார், இது வழியா போனா பாத்ரூம் வரும் அங்க இருந்து பின்புறம் காம்பவுண்ட் சுவற்ற ஏறி குதிச்சு வெளிய போயிடலாம்…”

“ஆனா இவனுக்கு சுதர்சன கொல்ல என்ன மோட்டிவ் இருக்கனும்?”

“இருக்கலாம் சார்…சுதர்சன் கொஞ்சம் கரார் டைப்…இவனுக்கு பிடிக்காம இருக்கலாம்…என்னோட காதைக்கூட ஒரு டயம் கடிச்சுட்டான்”, காதை காட்டினார்.

மாதவன் பாரதி பக்கத்தில் போனார்.

“என்ன பாரதி நாங்க சொல்லுறது உனக்கு புரியாத மாதிரியே நடிக்கிறியே”

பாரதி உறுமினான்.

14
“இவன் எப்படி சொல்லுவான் சார்…பெரிய நடிகனாச்சே…போய் லாக்அப்ல வச்சு அடிச்சு உறிச்சு கொன்னுறுங்க சார்…”
ஆனந்த கோபமாக கத்தினான்.

“ஏன் நீங்க நடிக்கலையா ஆனந்த்”
மாதவன் ஆனந்த் பக்கம் திரும்பினார்.

“சார்…என்ன சொல்லுறீங்க…எனக்கு புரியல”

“புரியும் ஆனந்த்…புரியனும்…வீ நோ எவ்வரிதிங்…சோ நீங்களே வந்துட்டா பெட்டர்”

ஆனந்த் தலையை தொங்கப்போட்டான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மெதுவாக பின்னால் சென்று சுவரில் சாய்ந்தான். அழுதுக்கொண்டே பேசினான்.

“என்ன மன்னிச்சிருங்க மாதவன், நானை இதை பண்ணியிருக்க கூடாது…பண்ணிருக்க…”

திடீரென்று இடுப்புக்கு பின்னால் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து மாதவனை நோக்கி சுட்டான். குண்டு தவறி சந்தானத்தின் இடதுகையை பதம் பார்த்தது. “ஐயோ” என்று கத்திக்கொண்டே சந்தானம் கீழே சரிந்தான். முருகன் அவனை தூக்க ஓடினான்.

மாதவன் இரண்டு கைகளையும் தூக்கி கொண்டே பேசிக்கொண்டிருந்தான்
“ஆனந்த்…எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்…கிவ்…மீ…தி கன்”
மாதவன் அவனை நோக்கி மெதுவாக முன்னேறினான்.

“அப்படியே நில்லுங்க மாதவன்…ஒரு அடி முன்னாடி வச்சா செத்துடுவீங்க…”

திடீரென்று ஆனந்தின் முட்டியில் யாரோ சுட அவன் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு வலியில் கத்திக்கொண்டிருந்தான்.

மாதவனுக்கு பின்னால் கையில் துப்பாக்கியுடன் மனநோயாளி பாரதி நின்றுக்கொண்டிருந்தான்.

“தேங்கஸ் பாரதி” மாதவன் தன் இடுப்புக்கு பின்னால் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டார்.

“முருகன் இவன அந்த சேரில் கட்டுங்க…சந்தானத்துக்கு மெடிக்கல் ட்ரீட்மெண்ட் வேணும்…கால் தி ஆம்புலன்ஸ்”
பாரதியா இதையெல்லாம் பேசுவது என்று ஆச்சரியத்தில் வலியை மறந்துப்போயிருந்தான் ஆனந்த்.

முருகன் ஆனந்தை சேரில் கட்டிவிட்டு சந்தானத்தை பிடித்துக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியே சென்றான். ஆனந்துக்கு ரத்தம் நிற்காமல் போய்கொண்டிருந்தது.

“நீங்க பேசுறீங்களா இல்ல நான்…” பாரதி மாதவனை பார்த்து கேட்டான்.

“நீங்களே பேசுங்க”

“ஆமா…வாய திறந்து பேசி ரொம்ப நாளு ஆச்சு…நானே பேசுறேன்…
என்ன ஆனந்த் ஆச்சரியமா இருக்கா?
ஒரு பைத்தியக்காரன் இப்படி மாறிட்டானேன்னு…”

ஆனந்த் ஒரு மாதிரி உறைந்துபோயிருந்தான்.

“எனக்கு பைத்தியமில்ல…ரொம்ப நார்மலாவே இருக்கேன்.நீங்க பண்ணுன தப்பு என்ன ஒன்னும் பண்ணல ஆனந்த்…மை டியர் ஃப்ரெண்ட் ஆனாலும் இங்க ஏன் பைத்தியமாட்டம் இருக்கேன். ஏன் தெரியுமா…? எவிடன்ஸ்…உன்னையும் உனக்கு பின்னாடி இருக்க கூட்டத்தையும் பிடிக்க எனக்கு சாலிட் எவிடன்ஸ் தேவை பட்டுச்சு…அதுக்காகதான் இந்த பத்து வருசம்”

“பாரதி நாம நண்பர்கள் தானே…எல்லாத்தையும் மறந்துட்டியா?”

“நான் பேச வேண்டியத பேசிட்டேன்…உங்க டைம் மாதவன்…எல்லா உண்மையும் அவனே சொல்லுவான்”

“எனக்கு எதுவும் தெரியாது…எதுவும் சொல்ல முடியாது”

பாரதி ஆனந்தின் இன்னொரு காலிலும் சுட, ‘சொல்றேன்’ என்று கதறினான் ஆனந்த்.

மாதவன் ஒரு வீடியோ காமிராவை அவன்முன் நிறுத்தினார்.

15
காமிரா ஓடிக்கொண்டிருந்தது.

“சரியா பத்து வருசத்துக்கு முன்னாடி இந்த மருத்துவமனையோட சீஃப் டாக்டர் சுதர்சன். அப்போதான் நானும் பாரதியும் இந்த மருத்துவமனையில மருத்துவரா சேர்ந்தோம். ஒரு நாள் ஒரு ஸ்வீடன் நாட்டு மருந்து கம்பேனில இருந்து சிலர் வந்தாங்க. அவுங்களோட மருந்த எங்க மருத்தவமனையில இருக்க நோயாளிங்க மேல பரிசோதனை பண்ணனும்னு கேட்டாங்க…மன நோயாளிங்க தானே யாருக்கு தெரியப்போகுது, எவ்வளோ பணம் வேணா தரோம்னு சொன்னாங்க…பட்…பாரதி இதுக்கு சம்மதிக்கல…உனக்கு பிடிக்கலைன்னா விடு நாங்க சம்பாரிசுக்குறோம்னு சொன்னோம் கேக்கலை…வெளிய சொல்லிடுவேன்னு சொன்னான்…வேற வழியில்லாம அவனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து பைத்தியமா மாத்துனோம். மருந்த நேரடியா நோயாளிங்களுக்கு கொடுக்க முடியாது, நோயாளிகளுக்கு வழக்கமா கொடுக்குற ஆப்பிள் பழத்துல இன்ஜெக்ட் பண்ணி கொடுத்தோம்…போஸ்ட் மார்டம்ல கூட தெரியாது ஆப்பிள்ல இருக்க மாலிக் ஆசிட் காட்டிக்கொடுக்காது, பத்து வருசமா நல்ல சம்பாரிச்சோம். இப்போ கொஞ்ச நாள சுதர்சன் கூட சண்டை , பணம் பங்கிடுறதுல்ல…அதனால அவரையும் கொன்னேன். அந்த பழிய பாரதி மேல போடலாம்ன்னு, அவனோட அதே ஐந்தாம் எண் சட்டைய போட்டுக்கிட்டு பத்திரிக்கைக்கு தகவல் கொடுத்தேன்”

மாதவன் பதிவை நிறுத்தினார்

“பத்து வருசதுக்கு முன்னாடி நீங்க பாரதிய பைத்தியமாக்கிட்டதா நம்பி ஏமாந்துட்டீங்க…பாரதி அப்போவே எங்களுக்கு தகவல் கொடுத்துட்டாரு, பட் எங்களுக்கு இந்த மொத்த மருந்து மாஃபியா கூட்டத்தோட ஆதாரம் தேவைப்பட்டது. அத கண்டுபிடிக்கிற வரைக்கும் பாரதி இங்கையே இருந்து பைத்தியமா நடிக்கிறதா ஒத்துக்கிட்டார். இப்போ எங்களுக்கு தேவையாக எல்லா எவிடன்ஸும் கிடைச்சது. உன் கூட இத்தன நாள இருந்த முருகனும் எங்க ஆளுதான் - கான்ஸ்டபிள். நீ பாரதிய இப்போ கொல்ல பார்த்ததுல இருந்து உன்னோட ஒவ்வொரு அசைவும் எங்களுக்குத் தெரியும்…
பணத்துக்காக மனுசங்க உயிர விக்கிறியே உன்னலாம் இங்கையே போட்டுத்தள்ளிடனும்…”
மாதவன் துப்பாக்கியை ஆனந்த நெத்தியில் வைத்தார்.

16
“ஆமா சார்…ஆளு ஸ்பாட் அவுட்…ஒரு கோலாய்ஷன் ஆகிடிச்சு…பாடி அனுப்பிச்சு விட்டுருக்கேன் சாயங்காலத்துக்குள்ள போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வேணும்”
மாதவன் மருத்துவமனைக்கு வெளியே நின்று ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.

ஸ்டெரச்சரில் ஆனந்த் உடலை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

“இதுவரைக்கும் நூற்றி பத்து”
பாரதி கையில் ஃபைல்களோடு நின்றுக்கொண்டுருந்தான்

“என்னது?”

“இவங்க பரிசோதனையில இதுவரைக்கு இறந்துபோனது…இந்தாங்க” என்று ஃபைல்களை மாதவனிடம் கொடுத்தான்.

“தேங்கஸ்”

“சந்தானத்துக்கு என்ன ஆச்சு”

“பெருசா எதும் இல்ல, குட்…நீங்க அடுத்து என்ன பண்ணப்போறீங்க?”

“இனக்கு இந்த மருந்து மாஃபியாவோட போராடி வெறுத்துருச்சு…நான் பைத்தியமானதாகவே ரெக்கார்ட்ல இருக்கட்டும்…சொந்த ஊருக்கு போய் விவசாயம் பண்ணலாம்னு இருக்கேன்”

“நல்லது”

“இந்த சத்தியமூர்த்தி ஒருத்தன் மேல சந்தேகம்னு சொன்னீங்களே?”

“அது ஒன்னும் இல்ல, நான் கூட அந்த கேங்ல ஒருத்தனா இருப்பான்னு நினைச்சேன்…விசாரிச்சதுல அவன் ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ்…நல்லவன் தான்”

“நல்லது”

“அப்போ நான் கிளம்பவா…இனிமே தான் நிறைய வேலையிருக்கு…இந்த ஆதாரத்த வச்சு தமிழ்நாடு பூரா இந்த கூட்டத்த பிடிக்கணும்”

“ஒரு நிமிசம்…”
ஆனந்த் ஒரு ஆப்பிளை எடுத்து மாதவனிடம் நீட்டினான்.

“பயப்படாதீங்க…நல்ல சுத்தமான ஆப்பிள்தான்…எங்க அம்மா வாங்கிட்டு வந்தது”

மாதவன் சிரித்துக்கொண்டே அந்த ஆப்பிளை வாங்கிக்கொண்டான். அந்த ஆப்பிளை கடித்துக்கொண்டே ஜீப்பில் ஏற, வண்டி அந்த மருத்துவமனையைவிட்டு சென்றது.

1 Like