Community

வசந்த சேனா - Dhanu Dhana

வண்ணமலர்களால் அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருக்க வாசனை திரவியத்துடன் ஊதுபத்தி மணமும் மலர்களின் வாசனையோடு கலந்து ஒரு சொல்லவொண்ணா உணர்வை தோற்றுவித்ததோடு அல்லாமல் கைபேசியின் உதவியால் மெல்லிய இசை ஒன்று வேறு இழைந்தோட இவையனைத்தையும் உள்வாங்கியவனின் விழிகளோ பௌர்ணமி நிலாவை ரசித்துக் கொண்டிருந்தது.

நட்பாய் தொடங்கிய விதை காதலாய் மாறி அதை அவன் தன் இணையுடன பகிர்ந்துக் கொள்ளும் முன்னரே இன்று திருமணம் என்னும் பந்தத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

அவளிடம் காதல் மொழிகளை பேசியதில்லை,சின்னஞ்சிறு தீண்டல் இல்லை, கொஞ்சி குலாவியதில்லை,பாவையவளின் நாணத்தை கண்டதில்லை, நேரங்களை தங்கள் வீண் பேச்சுகளால் செலவிட்டதில்லை இப்படி பல…
சாதாரண காதலர்களைப் போல் அல்லாமல் அவள் தன் வாழ்வில் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றிய அடுத்த நொடியே வீட்டில் பேசி சம்மதம் வாங்கி அவள் வீட்டிலும் பேசி விட்டான்…
அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று கூற அறிய முற்படவில்லை.

இருபத்தி ஐந்து வயதில் பெற்றோர்களின் தயவு ஏதுமின்றி, வெளிநாடு என்பதை வெறும் கனவாக நினைத்தவன் இன்று வாரத்திற்கு ஒருமுறை பக்கத்து ஊருக்கு சென்று வருவது போல் தன்னை மெருகேற்றிக் கொண்டவன்…
தனக்கென்று ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவனைக் கண்டு வியந்த அவளின் பெற்றோர்களுக்கு அவனின் ஆளுமையும் , பொறுமையும் ஆச்சரியத்தைத் தான் தோற்றுவித்தது.

வேண்டாம் என்று சொல்ல ஒரு காரணமும் இல்லாது போக தங்களின் மனம் நிறைந்த புன்னகையால் தலையை அசைத்து தங்களின் சம்மதத்தை தெரிவித்தனர்.

சம்மதம் தெரிவித்ததும் திருமண வேலைகள் தொடங்க இதோ இரண்டே மாதத்தில் அவனின் மனையாளாய் ஆகிவிட்டாள்.

கதவைத் திறந்து உள்ளே வந்தவளைக் கண்டுப் புன்னகைத்தவனின் கண்கள் இப்போது அவள் நிமிர்ந்து பார்ப்பதைக் கண்டதும் குறும்புடன் அவளை ரசிக்க ஆரம்பித்தது.

கையில் கொண்டு வந்த சொம்பை அவன் கைகளில் திணித்தவள் புடவையை தூக்கி ஒரு கைகளில் பிடித்துக் கொண்டே கதவு நன்றாக மூடியிருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு விழிகள் இரண்டும் அவளின் துணி பையை தேட ஆரம்பித்தது.

அது கிடைத்ததும் நிம்மதியாக மூச்சுவிட்டவள் ஒரு துணியை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் ஓடினாள்.

அவள் செய்கையில் சிரித்தவன் அந்த இடத்தை விட்டு நகர வில்லை அவள் கொடுத்த பால் சொம்பையும் அசைக்க வில்லை.

வெள்ளை நிற சர்ட் மற்றும் லாங்க் பேண்ட்டில் தன் முடியை தூக்கி கொண்டை போட்டுக்கொண்டே வந்தவள் அவனின் ஆளைத் துளைக்கும் பார்வைக் கண்டு என்ன என்பதாய் புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லை என தலையசைத்தவனின் பார்வையோ அவள் உடையில் சிறிது திருப்தியின்மையை தோற்றுவித்தது.

அதைக் கண்டுகொண்டாலும் மனதிற்குள் சிரித்தவள் படுக்கையில் சென்று அமர நான் என்ன செய்றது என்ற பாவனையில் நின்றிருந்தவனை இங்கே வா என அழைத்தாள்.

முடியாது என்ற தோரணையில் அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள எழுந்து அவனருகில் சென்றவளோ அதற்கு மேல் என்ன செய்ய எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

இன்றுவரை ஏன் இந்த திருமணம் ? திடீரென்று வந்தார் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னார் இப்போ பண்ணிக்கிட்டார்…அதுவும் என்கிட்ட கேட்கலை இதுதான் அவள் மனதில் ஓடுவது.

அதற்கு பதில் அவன் தான் கூறவேண்டும் என நினைத்தவளும் அவனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.

அவனருகில் அமர்ந்து பேசியிருக்கிறாள் தான், கைப்பிடித்து விளையாடியிருக்கிறாள் தான் ஆனால் காதல் துளியும் இல்லை.
அவன் அவளின் நண்பன்…
அதற்கும் மேல் அவளுக்கு பிடித்த சீனியர் அவ்வளவே!

வந்தவள் ஏதாவது கூறுவாள் என அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டிருக்க அவள் தான் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தாளே!
சிரிப்பு வந்தாலும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு அவள் கைகளில் பால் சொம்பை திணித்தவன் அவள் தோள்பட்டையை பிடித்து தள்ளியவாறே மெத்தையில் வந்து அமர்ந்தான், அவளையும் அமரச் செய்தான்.

“ம்மம் சொல்லு என்கிட்ட என்ன கேட்கணும்?” என்று கேட்க
அதே குரல்
கேட்டதும் ஒருவித படபடப்பு
இதயம் எகிறி குதித்துவிடுமோ என்று தோன்ற உடனே இதயத்தின் அருகில் கை வைத்தவள் அவனின் குறும்பு பார்வையைக் கண்டு கைகளை கீழே இறக்கிக் கொண்டாள்.

“தொணத்தொணனு பேசுவ…இப்போ என்ன பேசவே மாட்டிங்கிற” என்றவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வாள் ? வாயைத் திறந்தாளே வெறும் காத்து தான் வருகிறது.

உதட்டைப் பிதுக்கியவளின் கைகளைப் பிடித்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன்
"நான் உனக்குப் பிடிச்ச உன் சீனியர்…எப்போவும் போல என்கூட பேசலாம், முதல்ல மொபைல்ல பேசிகிட்டோம் இப்போ நேருல அவ்வளவு தான் " என்றவனின் மூக்கில் ஒரு பஞ்ச் விடலாமா என்ற எண்ணம் வேறு தோன்றியது.

"அவ்வளவு தானா? " என்று கூறி உதட்டை சுழித்தவள் சுற்றிலும் கண்களை சுழல விட்டாள். முதலிரவிற்காக ஏற்பாடு செய்திருந்ததைக் கண்டதும்
மறுபடியும் அச்சம் வந்து தொற்றிக் கொள்ள பாவமாக அவனை ஏறிட்டவளின் பாவனையில் சிரித்தவன் "நம்ம கொஞ்சம் டைம் எடுத்துக்கலாம் சரியா? அதுக்கப்புறம் இதெல்லாம் பார்த்துக்கலாம் " என்று அவன் கூறியதும் வந்ததே அவள் முகத்தில் ஒரு புன்னகை சொக்கித்தான் போனான் அவன்.

“அப்பாடா சிரிச்சுட்டியா? சரி தூங்குறியா? ஏதாவது பேசலாமா?” என்றவனின் கேள்விக்கு தாடையில் கை வைத்து யோசித்தவள்
இப்போது கொஞ்சம் விலகி சம்மனம் போட்டு அமர்ந்துக் கொண்டாள்.

இப்போ ஓகே நான் பேச என்பது போன்ற அவள் பார்வையில் அவனும் அவளைப் போலவே அமர்ந்து ஒரு தலையணையை அவளுக்கு எடுத்துக் கொடுத்து மற்றொன்றை தன் மடியில் வைத்து சாவகாசமாக அமர்ந்து கொண்டான்.

"நீ பேசிட்டே இருப்பியே இப்போ ஏதாச்சும் பேசு " என்றவனிடம் பேச ஒன்னுமில்லையே என்பதைப் போல் அவள் உதட்டை பிதுக்க

"நீ தான் ஒரு கதாசிரியர் ஆச்சே…கதை சொல்லுறது " என்றவனின் கேலியில் முறைத்தவள் “நான் மாட்டேன் பா” என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

கன்னதிற்கு கை கொடுத்து ஏற்கனவே பார்வையிட்ட அறையை மறுபடியும் அவள் விழிகள் ஆராய ஆரம்பிக்க அதில் சலித்தவன் வலுக்கட்டாயமாக அவளைத் தன்புறம் திருப்பி சரி என்கிட்ட ஏதாச்சும் கேளு நான் சொல்லுறேன் என்று கூறினான்.

அவன் கூறியதில் பிரகாசமானவள் உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்களேன் என்று கேட்க அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் உதடுகள் தானாக முணுமுணுத்தது கேடி என்று.

அவளும் எவ்வளவோ முயற்சித்து விட்டாள் ஆனால் அவன் அந்த கதையை மட்டும் கூறமாட்டான்.
பாஸ்ட் இஸ் பாஸ்ட் என்று கூறிவிடுவான்.

இன்றும் அவன் அதையே கூற முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டவளிடம் வேறு கேள்வி கேட்க சொல்ல சிறிது நேரம் யோசித்தவளோ உங்க க்ரஸ் பத்தி சொல்லுங்க என்று கூறி சிரித்தாள்.

அவளின் எண்ணப்படி அவனின் காதலி தான் அவனின் க்ரஸ்ஸாக இருக்கும் என நினைத்தாள்.

அவளின் அறிவை மெச்சிக் கொண்டவன் கண்களில் க்ரஸ்ஸை நினைத்து அப்படியே பளிச்சென்று மின்னல் வெட்டியது.

அதைக் கண்டவளுக்கும் ஏதோ ஆக ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தாள்.

"அவ வருணவி " என்று கூறியதும் இவள் திருத்திருவென முழிக்க நீ இல்லை டி லூசு என்றவனோ அவ அழகா இருப்பா என்று கூற முகத்தை வெட்டியவளோ ம்க்கும் என்று செருமி அப்புறம் என்பதாய் சைகை காட்டினாள்.

அவள் செயலில் சிரித்தவன் அவள் தலையை கலைத்தவாறே தன் க்ரஸ்ஸை பற்றி கூறி ஆரம்பித்தான்.

“டேய் கௌதம் போதும் டா நீ வொர்க்அவுட் பண்ணது கொஞ்சம் இங்கே வரியா?” என்ற தன் ரூம் மேட் சதீஸ் அண்ணாவின் குரலில் நிமிர்ந்து பார்த்தவன் உடலில் ஆங்காங்கே பூத்திருக்கும் வியர்வைத் துளிகளை டவலால் துடைத்தவாறே எழுந்து நின்றான்.

சில்லென்ற தென்றல் அவன் மேனியை வருட இதழ்கள் அழகாய் புன்னகைத்தது.
இவன் கௌதம், கோயம்புத்தூரில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான்.
படித்து முடிப்பதற்கு முன்பே கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிட “ஆத்தா எனக்கு வேலை கிடைச்சுடுச்சு” என்று இவன் கத்தாத குறை தான்.

தமிழ் மீடியம் படித்த எல்லாரும் பயந்து நடுங்குவது இதற்கு தான்.
ஏதோ வரும் ஆங்கிலத்தை வைத்து அவன் தேர்வாகி விட வானத்தில் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

பீளமேடு அருகில் மாடிகுடியிருப்பு ஒன்றில் மூன்றாம் தளத்தில் வசித்து வருகின்றனர்.
இன்று இவனின் கோட்டா , அதாவது இவன் தான் சமையல் செய்ய வேண்டும் அதை செய்யாமல் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறது இந்த பக்கி.

மறுபடியும் சதீஸ் கத்த "இதோ வரேன் " என்று திரும்பியவன் கண்களில் பட்டாள் அவள்.
தோள்பட்டை அளவு மட்டுமே நீண்டிருக்கும் கூந்தல் அவள் அசையும் பொழுது அதுவும் அசைய பள்ளி சீருடையில் ஏதோ மேல் மாடியிலிருந்து எடுத்துக் கொண்டு இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

கண்கள் மின்ன அவளைப் பார்த்தவனின் இதழ்கள் மறுபடியும் புன்னகைப் பூக்களைப் பூக்க இவனைக் கண்டுக் கொண்டவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

இவனின் மாடிக்கருகிலேயே அவளின் மாடியும்.
எட்டிக் குதித்தால் அவள் வீட்டிற்கு சென்று விடலாம்.
ஆனால் அந்த எண்ணமெல்லாம் வந்ததில்லை.

அவள் வருவாளா என எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வந்ததென்னமோ அவள் அக்கா தான்.
அவள் பார்த்த பார்வையிலேயே பத்தடி தள்ளி நின்றவன் "சப்பா " என்று பெருமூச்சு வாங்கியபடியே உள்ளே நுழைந்தான்.

அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பியவன் ஐடி கார்டை கொண்டு ஸ்வைப் செய்து ஆபிஸினுள் நுழைந்து தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒரு புன்னகையை பரிசாக அளித்து அவன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

கணினியை ஆன் செய்தவனின் மனக்கண்ணில் திடீரென காலையில் கண்களுக்கு தோன்றிய அந்த தேவதையின் முகம் வர
மறுபடியும் இதழோரம் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

அந்த நாள் முழுவதும் க்ளோசப் விளம்பரத்தில் வருபவன் போல் பல்லைக் காட்டிக் கொண்டே இருக்க ஏன் டா இப்படி பல்லை பல்லை காட்டுற என்ற நண்பனுக்கும் பல்லை தான் காட்டினான்.

மாலையில் அவளைக் காண்போமா என்ற ஆசையில் வந்தவனுக்கு சரியாக காட்சியளித்தாள் அவனின் தேவதை சைக்கிளில்.

தன் டையை சரிசெய்தவாறே “உங்க பேர் என்னங்க” என்று கேட்க அவள் முறைத்த முறைப்பில் சற்று பயந்து தான் போனான்.

எப்படியும் சொல்ல மாட்டா என்று நினைத்தவன் அவளைத் திரும்பி திரும்பி பார்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்தான்.

அன்று இரவு அவள் வெளியே வரவே இல்லை…ஆனால் அக்காவுடன் சண்டையிடுவது மட்டும் நன்றாக கேட்டது.
அவள் குரலும் அவளைப் போலவே அழகு என்று மனதில் நினைத்தவனுக்கோ ஒரே ஆச்சரியம்.

கௌதமைப் பொறுத்தவரை ஜாலியான டைப் தான் ஆனால் ஒரு நாள் முழுவதும் அவன் இப்படி சிரித்து புன்னகை முகமாக வலம் வந்ததே இல்லை…
இதற்கு காரணமான அந்த தேவதைக்கு ஆயிரம் நன்றிகள் சொன்னவன் நாளைக்கு சீக்கிரமே எழுந்திருக்கணும் என நினைத்தவாறே உறங்கச் சென்றான்.

"அடியே வரு " என்ற கத்தலில் கண் விழித்தவன் நேரத்தைப் பார்க்க அதுவோ சிரித்துக் கொண்டே 8:15 என்று காட்டியது.

அய்யய்யோ என்று அலறியவன் வேகமாக வெளியே ஓடி வர அவனின் தேவதையோ பள்ளி வாகனத்தில் ஏறிக் கொண்டிருந்தாள்.

“போச்சு” என தலையில் கை வைத்தவனுக்கோ அந்த நாள் ஓடவே இல்லை…
நேற்று இருந்ததிற்கு மாறாக உர்ரென்று வலம் வந்தான்.

இன்று அதே போல் அவனின் தேவதை சைக்கிளில் தரிசனம் கொடுக்க புன்னகைத்தவாறே அவளருகில் சென்றவன் “இன்னைக்காச்சும் நேம் சொல்லலாமே” எனக் கேட்க அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்.

அவளின் செயலில் சிரித்தவாறே கேட்டை திறந்தவன் கண்டது முதல் தளத்தில் இருக்கும் பெண்களைத் தான்.நாகரிகம் என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாம் ஆட்டம் போட போறாங்களோ என்று மனம் நொந்தவன் அவர்களைக் கண்டுக் கொள்ளாமல் மாடியேற

“என்னடி பாக்காம போறான்? ஒருவேளை மேக்கப் கம்மியோ ?” என்றவள் ஏற்கனவே போட்ட ஏழு கோட்டிங் மேல் இன்னும் இரண்டு போட்டாள்.
முதல் தளத்தில் வசிக்கும் மூன்று பெண்களும் ஏர்ஹோஸ்டஸ்.
அவர்களின் உடையும் , மேக்கப்பும் முகம் சுழிக்க வைக்கும் அளவு இருந்தாலும் அதை அவர்கள் மாற்றிக் கொள்வதில்லை.

கௌதமிற்கு இப்படிப் பட்ட பெண்களையே பிடிக்காது.
கிராமத்தில் அதுவும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவனுக்கு கல்லூரியில் பெண்களைக் கண்டதுமே ஒருவித கூச்சம் ,பயம் வந்து ஒட்டிக் கொட்டது.
நல்ல வேளை மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்.
கிராமத்துப் பெண்களையே பார்த்து பழகியவனுக்கு இந்த மாதிரி உடை அணியும், மேக்கப் செய்யும் பெண்களை அறவே பிடிக்காது.

தன் தேவதையின் தரிசனத்தால் குதூகலமாக விசிலடித்துக் கொண்டே மாடி ஏறியவன் "ஏய் வருணவி என் பிஸ்கட்டை தா டி " என்ற குரலில் சடன் ப்ரேக் போட்டு நின்றான்.

ஆம் அவனின் தேவதையின் பெயர் வருணவி.அவளின் அக்கா தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள்.

இவளும் அவள் கேட்டவுடன் புன்னகை முகமாக எடுத்துத் தர மனதில் எங்கோ சென்று விட்டாள்.
பட்டுப் பாவாடையில் நெற்றியில் சிறிய பொட்டு அதற்கு மேல் குங்குமம் , கைகளில் வளையல், கால்களில் கொலுசு என்று அமர்ந்திருப்பவள் அவனுக்கு அவன் அம்மாவாகவே காட்சியளித்தாள்.

எவ்வளவு சாந்தமான முகம் என்று நினைத்தவனும் முகம் கழுவி பட்டை போட்டுக் கொண்டான்.

நாட்கள் அதன்போக்கில் செல்ல இவனும் அவளைப் பார்த்து சிநேகமாக புன்னகைப்பதை நிறுத்தவில்லை அவளும் முறைப்பதை நிறுத்தவில்லை.

அன்று சம்பள நாள்.
இவனின் அறை நண்பர்கள் ஓரே குடியும் கும்மாளமுமாக சத்தம் போட்டுக் கொண்டிருக்க கௌதமோ காதில் ஹெட் செட் மாட்டிக் கொண்டு வெளியே வந்து அமர்ந்துக் கொண்டான்.

பக்கத்து வீட்டாருக்கு தொல்லைக் கொடுக்கும் அளவு இவர்களின் சத்தம் அதிகரிக்க கோபம் கொண்ட வருவின் அப்பாவோ இவர்களிடம் சண்டைக்கு வர மற்ற நேரமாக இருந்திருந்தால் இவனும் பதிலுக்கு கத்தியிருப்பான்.

அவள் அப்பாவின் பின் அவரின் சட்டையைப் பிடித்து இழுத்தவாறே பயத்தில் நடுங்கும் வருவைக் கண்டதும் இவனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.

நான் பாத்துக்கிறேன் சார் நீங்க போங்க என்ற கௌதமை அவர் ஒரு லுக் விட்டவாரே உள்ளே செல்ல இவனும் தன் நண்பர்களைத் திட்டி அமைதியாக்கி விட்டான்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அவனின் தேவதை இவனைப் பார்த்து புன்னகைக்க ஆரம்பித்து விட்டாள்.
வானில் பறக்க ஆரம்பித்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

அன்று மாடியில் படிக்கட்டின் மேல் அமர்ந்து கன்னத்திற்கு கைக் கொடுத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் இவனைக் கண்டதும் புன்னகைக்க இவனும் ஹாய் என்று கை காட்டினான்.

அவள் உடனே கண்களை விரித்து அப்பா அப்பா என்று சைகை செய்ய அவன் அவள் செய்யும் அழகைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
நஸ்ரியா, சமந்தாலாம் தோத்து போயிடணும் டா வரு கிட்ட என்று தான் மனதில் ஓடியது.

காலை 8:15 க்கு வெளியே வந்துவிடுவான் அவளும் அம்மாவிற்கு டாடா காட்டுவது போல் இவனுக்கும் காட்டிவிடுவாள்.

நாட்கள் அழகாக செல்ல அன்று அவனுக்கு ஓரே டென்சன், வொர்க் ப்ரசர்…
மூட் அவுட்டாக தான் வந்தான்.

என்றும் புன்னகைப்பவன் இன்று அவளைப் பார்க்காமல் கடந்து செல்வதைக் கண்டதும் உடனே மாடிக்கு ஓடியவள் “உஸ்ஸ்ஸ்” என்று அழைக்க
காலில் இருந்த சூ வை கழட்டிக் கொண்டிருந்தவன் அவளில் உஸ்ஸ் என்ற சத்தத்தில் நிமிர்ந்துப் பார்க்க தன் வெண்டைப் பிஞ்சு விரல்களால்
அவனை அருகில் அழைத்தாள்.

அவளைப் பார்த்ததும் தன் துயரங்கள் எல்லாம் காணாமல் போனதை உணர்ந்தவன் புன்னகை முகமாகவே அவளருகில் சென்று நின்றான்.

“ஏன் கௌதம் சோகமா இருக்க” என்று கேட்க
அதில் சிரித்தவன் "சும்மா " என்று கூறிக் கண்ணடிக்க
இடுப்பில் கை வைத்து முறைத்தவளோ "சொல்லு " என்று கூறினாள்.

"எனக்கு இந்த வேலையே பிடிக்கல வரு…ரொம்ப வேலை , டென்சன் தான் அதிகமாகுது " என்றவன் முகம் இப்போது சோர்ந்து விட

“கௌதம் சிரி” என்றவள்
"அப்போ உனக்குப் பிடிச்சதைப் பண்ணு " எனக் கூற

“போ வரு…அதெல்லாம் நடக்காது வீட்டுல எப்படி ஒத்துப்பாங்க” என்றவன் " சரி நீ என்ன பண்ணுற? ஹோம் வொர்க் முடிஞ்சுதா ?" எனக் கேட்க

"அதெல்லாம் ஓவர் " என்றவளோ

“கௌதம் உனக்கு பிடிச்சதை பண்ணேன் சும்மா ஒரு டிரை தானே…முயற்சி செஞ்சா கண்டிப்பா நீ அச்சீவ் பண்ணுவ…நீ தானே கௌதம் பேசி புரிய வைக்கணும்” என்றவள் அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

ஏனோ அது அவனுக்கு ஒருவித புது தெம்பைக் கொடுக்க வேகமாக தலையாட்டியவனோ அடுத்து செய்யப் போகும் காரியங்களில் இறங்கினான்.

வீட்டில் அவன் பேசியதும் அவர்களும் உடனே ஒத்துக் கொண்டு அவனுக்கு
ஆறுதல் அளிக்க ச்ச்ச இந்த வயசுலையும் அவளுக்கு எவ்வளவு பொறுமை அறிவு வருக்குட்டி நீ சூப்பர் டா என்றவன் இன்னும் இரண்டு நாட்களில் ஊருக்குக் கிளம்புவதாக இருந்தது.

கிளம்புவற்குள் அவளிடம் பேச வேண்டும் என அவன் எடுத்த முயற்சியெல்லாம் வீண் தான்…
அவள் வீடு பூட்டியிருந்தது.
வரு அவனின் மனதில் நீங்க இடத்தைப் பிடித்து விட்டாள்.

அவன் கோயம்புத்தூர் வரும் சமயங்களிலெல்லாம் வரு வீடே கதியென்று கிடப்பான்…
ஆனால் வரு தான் வேறு எங்கோ வீடு மாற்றி சென்றுவிட்டாள்.
அவளை நினைக்கும் போதெல்லாம் அவன் மனம் இறகில்லாமலே பறக்கும்.
இதழ்கள் புன்னகையைத் தத்தெடுத்துக் கொள்ளும்.
அவள் வார்த்தைகள் மட்டுமே தெம்பளிக்க அவனும் வருக்குட்டி சொன்னதைப் போலவே அச்சீவ் செய்து விட்டான்.

அனைத்தையும் சொல்லி முடித்தவன் இப்பொழுது மனையாளைப் பார்க்க
அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
பொசசிவ் அது இதுவரை அவனிடத்தில் வந்ததில்லை…
ஏனோ இன்று அவன் வருவைப் பற்றி கூற கூற கோபம் கொளுந்து விட்டு எரிந்தது.

“என்னாச்சு லூசு” என்றவனைக் கோபமாக முறைத்தவள் அப்போ அவளையோ கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே என்று கத்த

"அட பைத்தியமே அவ மூனாவது தான் படிக்கிறா…இப்போ ஆறுனு நினைக்கிறேன் " என்றவன் கூறியதைக் கேட்டதும்

“ங்ங்கே” என்று தான் விழித்தாள்.

“சீனியர் மூனாவதா?” என்று இழுத்தவளிடம்

"ஆமா " என்று கூற

"அவ சின்ன பாப்பா சீனியர்…அவ மேல க்ரஸ் " என்று முகத்தை சுழித்தவளை அருகில் இழுத்தவன்

" இங்கே பாரு வரு…க்ரஸ் யாரு மேல வேணா வரலாம் நம்ம பார்க்கிற பார்வைல தான் இருக்கு…
எல்லா பசங்களும் தப்பானவங்க இல்லை, தப்பா பார்க்கிறவங்க இல்லை.
அவ குட்டியா க்யூட்டா வயசுக்கும் மீறுன அறிவு, புதுசா யாராவது பாத்தா ஒரு அடி தள்ளியே நில்லு அப்படிங்கிற பார்வை இப்படி நிறைய…
இப்போலாம் குழந்தையை கூட விட்டு வைக்கிறது இல்லை தான்…
ஆனால் எல்லாரும் அப்படி இல்லை மா…குழந்தையும் தெய்வமும் ஒன்னு வருக்குட்டி எனக்கு என் அம்மா மாதிரினு வெச்சுக்கோயேன்…
நிறைய பசங்க சொல்வாங்க எனக்கு என் அம்மா மாதிரி பொண்ணு வேணும்னு…எனக்கு என் வருக்குட்டி மாதிரி பொண்ணா வேணும்னு நினைச்சேன்…அதுனால அவளை க்ரஸ்னு சொன்னேன்.
அவளை நினைச்சாலே எனக்கு தானா சிரிப்பு வரும்…அவ எது பண்ணாலும் க்யூட் " என்று கூறியவனின் இதழ்களே காட்டிக் கொடுத்தது வருக்குட்டியை எவ்வளவு பிடிக்கும் என்பதை.

கைகளில் ரோமம் நிலை குத்தி நிற்க
“இங்கே பாரு வருவை நினைச்சாலே இப்படி தான் ஆகும் எனக்கு” என்றவனைப் பார்த்து அவளும் அழகாக புன்னகைத்தாள்.

அப்போ வருனு பேர் இருக்கிறதால தான் என்னையும் பிடிச்சதா சீனியர் என்று கேட்டவளுக்கு மனமோ அடித்துக் கொண்டது.
அவன் மீது காதல்,க்ரஸ் என்றெல்லாம் எதுவுமில்லை…
அவன்தான் பிடித்திருக்கிறது என்றான் அதுவும் அவளிடம் கூட கூறவில்லை.

இன்று வருவைப் பற்றிக் கேட்டதும் இப்படி கேட்டுவிட்டாள்.
அவன் இல்லை என்று கூற வேண்டும் என மனம் அடித்துக் கொள்ள அவள் மனதை படித்தவன் போல அவனும் இல்லை என்று தலையசைத்தான்.

நான் சும்மா உன் ஐடியை பார்த்தேன் வரு நேம் பார்த்ததும் ஐர்க் ஆனது உண்மை தான் ஆனா நீ உன்னைப் பத்தி தமிழில் வெச்சிருந்த…
உன் டைம்லைன் எல்லாம் தமிழில் தான் இருந்தது.
இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று தான் நினைச்ச…
அப்புறம் உன்கிட்ட பேசவும் செஞ்சேன்…
பேசுனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது நீ ஒரு லூசு என் வரு மாதிரி இல்லைனு என்றவன் நக்கலாக சிரிக்க

எழுந்து நின்றவள் இடுப்பில் ஒரு கை வைத்து ஒரு கை நீட்டி லூசுனு சொன்ன பிச்சுபுடுவேன் என்று மிரட்ட அவளை அப்படியே இழுத்தவனோ தன் மடிமீது உட்கார வைத்துக் கொண்டான்.

" அந்த வரு என் வாழ்வில் வந்த வசந்தம் டி…ஆனால் நீ ஒட்டு மொத்த வசந்தத்தையும் என் வாழ்வில் கொண்டு வந்த வசந்த சேனா டி " என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க மெய் சிலிர்த்தது அவளுக்கு.

அதை கண்டுக்கொண்ட அவன் இப்போது கன்னத்தில் இதழ் பதிக்க அதற்கு மேலும் அவளால் முடியவில்லை.

அவனை விட்டு வேகமாக பிரிந்தவள் பேட் பாய் என்று கூறி படுத்துக் கொண்டு பெட்சீட் போர்த்திக் கொள்ள
அவள் செயலில் சிரித்தவனோ லவ் யூ டி என்று கூறி ஒருபுறம் படுத்துக் கொண்டான்.

அந்த வருக்குட்டியால் வாழ்க்கை ஆரம்பித்தது என்றால்
இந்த வரு தான் வாழ்க்கையே என்றாகிவிட்டது கௌதமிற்கு.
இனி அவன் வாழ்வெங்கும் வசந்தம் தான்.

ப்ரியமுடன்
தனு❤

4 Likes

Kavidhaigalil kadhai Pol ulladhu… romba lengthy… ippadi dhan aagum kavidhaiyayum kadhaiyum mix Panna… simple aaga ezhuthungal… thevaikerpa kavidhai payanpaduthungal…

1 Like

அருமையான கதை டா பேபி சூப்பர் all the best :heart_eyes::heart_eyes::heart_eyes::chocolate_bar::chocolate_bar::chocolate_bar:

1 Like

அழகான கவிதை படித்த உணர்வு ம்மா…
அழகிய வசந்தத்தை அள்ளி தெளித்து சென்றாள் உங்கள் வசந்த சேனா… நன்றாக எழுதியுள்ளீர்கள்… வாழ்த்துக்கள் டா !!!

1 Like